பெரியார் பேரன்... மார்க்ஸின் மாணவன் என்ற முழக்கத்துடன் தமிழக மேடைகளில் அறிமுகமானவர் சீமான். பின்னர் நாம் தமிழர் கட்சி தொடங்கி முப்பாட்டன் முருகன், மாயோன், கொற்றவை வழிபாடு, தேர்தலில் தனித்துப் போட்டி என வித்தியாசமான அரசியல் பாதையில் பயணித்து வருகிறார். தாம் முன்வைப்பதுதான் உண்மையான தமிழ்த் தேசியம் என முழங்கும் சீமானின் பாதை தெள்ளத்தெளிவாக இந்துத்துவாவை நோக்கியதாக இருப்பதை இந்து அமைப்புகளின் தலைவர்களான அர்ஜூன் சம்பத், ராம ரவிக்குமார் போன்றோரின் பேட்டிகளே வெளிப்படுத்தி இருக்கின்றன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
திரைப்பட இயக்குநராக இருந்த சீமானுக்கு அரசியல் மேடைகள் கொடுத்தவை திராவிடர் இயக்கம். திராவிடர் இயக்க மேடைகளில் நரம்பு புடைக்க நாத்திகம் பேசியவர். தந்தை பெரியாரை தமது தலைவராக ஏற்றுக் கொண்டு முழக்கமிட்டவர் சீமான்.
திராவிடர் இயக்க மேடைகளில் இடைவிடாமல் இடிமுழக்கமாக பேசிய ஒற்றை காரணத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி சென்றார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் எத்தனையோ தலைவர்கள், பிரமுகர்கள் இப்படி விடுதலைப் புலிகளாள் அழைக்கப்பட்டது உண்டு. அவர்களில் ஒருவர்தான் சீமான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு பேச்சுக்காக, நடவடிக்கைகளுக்காக எத்தனையோ பேர் சிறைவாசம் அனுபவித்தவர்கள் உண்டு. அப்படி சிறைவாசம் அனுபவித்த பின்னர் வெளியேறிய சிலர் தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை வெகுதீவிரமாக பேசுவது வழக்கமானதுதான். ஆனால் இப்படியான திடீர் தமிழ்த் தேசியர்களின் பின்புலத்தை காலம் காலமாக தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் சந்தேகிப்பதும் வழக்கமானதுதான். 2009 ஈழ இறுதி யுத்தத்துக்குப் பின்னர் சீமான் தனித்த பாதையில் பயணிக்க தொடங்கினார்.
சி.பா.ஆதித்தனாருக்கு சொந்தமான நாம் தமிழர் கட்சியின் பெயரை பெற்று தனிக் கட்சி நடத்தி வருகிறார் சீமான். அவரது ஆவேசமான பேச்சுகள் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. சீமான் பேசுவது அத்தனையும் நிஜம் என நம்பும் அந்த இளைஞர்கள், அவர் பேசுவதுதான் உண்மையான தமிழ்த் தேசியம் எனவும் ஏற்றுக் கொள்கின்றனர். இதே தமிழகத்தில் ம.பொ.சி. உள்ளிட்ட பலரும் இப்படியான தமிழ்த் தேசியம் பேசியும் அது எடுபடாமல் போனது என்கிற வரலாறும் இந்த மண்ணில் இருக்கிறது.
சமீபத்தில் சீமான், பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில் சிக்கிய பாஜகவின் கே.டி.ராகவனுக்கு பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தார். அண்மையில் திராவிடத்துக்கு எதிராக சீமான் தரப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்தும் தாங்கள் பேசியதுதான்.. எங்களைப் போலத்தான் சீமான் பேசுகிறார் என பகிரங்கமாக சொன்னார் தீவிர இந்துத்துவவாதியான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். அதேபோல சீமானுக்கு முழு ஆதரவு தருகிறோம் என்கிறார் மற்றொரு வலதுசாரியான ராம ரவிக்குமார்.
தமிழினத்துக்காகப் பாடுபட்ட எத்தனையோ தலைவர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் சீமான். தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என அறிவித்து ஜாதி ஒழிப்புக்கான உறுதி மொழி பிரகடனத்தையும் வெளியிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்டி தொட்டி எங்கும் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்த ஆண்டு. ஆனால் வலதுசாரிகளைப் போல அண்ணா, பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகளை சீமான் புறக்கணிக்கிறார்.
திராவிடத்தையும் ஆரியத்தையும் சமமாக எதிர்க்கிறோம்; திமுகவையும் பாஜகவையும் கடுமையாக எதிர்க்கிறோம் என்பது சீமான் சொல்லும் நிலைப்பாடு. ஆனால் நிஜத்தில் ஆரியத்தின் குரலாக, பாஜகவின் ஆதரவு குரலாக, வலதுசாரிகளின் பேரன்பும் பேராதராவுடனும் சீமான் இருக்கிறார் என்கிற விமர்சனம் வலுவாக வைக்கப்படுகிறது.. அவர் செல்லும் பாதை தமிழ்த் தேசிய பாதையாக இல்லாமல் இந்துத்துவ பாதையாகவே வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அடுத்தடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிவரும் சீமான், நாத்திகம், திராவிடம் பெரியார் என ஆரம்பித்து நாத்திகம் தவிர்ப்பு, ஆன்மீகம், தமிழ் தேசியம் என மாறியதும், பெண்கள் குறித்தான பார்வையும், பாலியல் விவகாரங்களில் அவரது அணுகுமுறை, பாஜகவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க ஆதரவு,
தற்போது தமிழ் தேசியம் என்பதைத்தாண்டி தீவிர திமுக எதிர்ப்பிலிருந்து தீவிர திராவிட எதிர்ப்பை நோக்கிய அவரது அடுத்தக்கட்ட நகர்வு எங்களை நோக்கித்தான் வரும், அவர் விரைவில் எங்கள் தாய் மதத்துக்கும் திரும்புவார் என்ற அர்ஜுன் சம்பத்தின் பேட்டியையும் மறுப்பதற்கில்லை என்பதாகவே அவரது நகர்வுகள் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்வதையும் நாம் மறுப்பதற்கில்லை.
No comments:
Post a Comment