எத்தனையோ பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு உயிர் பிழைத்த அதிசயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். உத்தரப்பிரதேசத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மொரதாபாத் மாநகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் ஸ்ரீகேஷ் குமார் என்பவர், நேற்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி நள்ளிரவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையிலிருந்த டாக்டர்கள் அவரை சோதித்துப் பார்த்த போது இதயத் துடிப்பு நின்று இருந்தது. உடனே அவர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகேஷ் குமாரின் உடல் மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது.
பின்னர், காலையில் ஸ்ரீகேஷ் குமார் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் ஸ்ரீகேஷ் உடல் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக அவர் உறவினர்களிடம் டாக்டர்கள் ஒப்புதல் கடிதம் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீகேஷ் உடலில் அசைவு ஏற்பட்டது. இதனை ஸ்ரீகேஷ் குமாரின் அண்ணி கவனித்தார். மூச்சுவிடுவதையும் கவனித்து டாக்டர்களிடம் தெரிவித்தார். உடனே டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
7 மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டும் எப்படி உயிருடன் இருந்தார் என்று டாக்டர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் மருத்துவமனை உயரதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அதைத் தொடர்ந்து, நேற்றிரவு பணியிலிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உடல்நிலை மோசமான நிலையில், உயிர் பிழைத்த ஸ்ரீகேஷ் உடனடியாக உயர் சிகிச்சைக்காக மீரட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும் கண் திறக்கவில்லை, ஆனால் அவருக்கு ஆபத்து இல்லை என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை முதலில் கவனித்த அவர் அண்ணி மது பாலா இது குறித்துக் கூறுகையில், ``ஸ்ரீகேஷ் மீண்டும் உயிருடன் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டாக்டர்களின் கவனக்குறைவால் உயிருடன் இருக்கும் ஒருவரை இழக்கப் பார்த்தோம்.
ஸ்ரீகேஷிக்கு கவனக்குறைவாகச் சிகிச்சை அளித்ததற்காகக் மொரதாபாத் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போலீஸில் புகார் செய்ய முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment