மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களால் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை காணாமல் போய்விடும் என்று கூறி பஞ்சாப், ஹரியானாவில் போராட்டம் வெடித்தது. பிறகு அந்த மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்ட களம் புகுந்த அமைப்பு தான் பாரதிய கிஷான் யூனியன். கடந்த 1978ம் ஆண்டு சவுத்ரி சரண் சிங்கால் உருவாக்கப்பட்டது இந்த விவசாய அமைப்பு. உத்தரபிரதேசத்தின் முஸாபர்நகரை தலைமையிடமாக கொண்டு பாரதிய கிஷான் யூனியன் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தான் ராகேஷ் திகாயத். இவரது ஆலோசனையின் படி தான் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பாரதிய கிஷான் யூனியன் பங்கெடுத்தது. அதற்கு முன்பு வரை பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்தாலும் இந்த அமைப்பு வந்த பிறகு தான் தீவிரமானது. கடந்த ஜனவரி மாதம் 26ந் தேதி டெல்லியில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் போது, விவசாயிகள் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
இதனை அடுத்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த முக்கிய விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கின. ஆனால் ராகேஷ் திகாயத் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை தொடர்ந்தார். ஆனால், அதற்கு முன்பு இருந்த விவசாயிகள் ஆதரவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிதும் சலனமின்றி, டெல்லி - காஜிபூர் எல்லையில் முகாம் அமைத்து திகாயத் போராட்டம் நடத்தினார். கிட்டத்தட்டஅனைத்து அமைப்புகளும் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிய நிலையில் திகாயத்தின் போராட்டம் மட்டுமே மத்திய அரசுக்கு தலைவலியாக இருந்தது.
இதனால் கடந்த பிப்ரவரி மாதம் இரவோடு இரவாக போராட்ட களத்திற்குள் டெல்லி போலீசார் திடீரென புகுந்தனர். ராகேஷ் திகாயத்தை கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தான் போலீசாரின் திட்டம். ஆனால் விவசாயிகள் திகாயத்திற்கு மனித அரணாக நின்றனர். இதனால் போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. அதே சமயம் போலீசார் - விவசாயிகள் மோதலில் பலர் காயம் அடைந்தனர். அந்த சமயத்தில் திகாயத் சரண்அடைந்துவிட்டதாகவும் போராட்டம் முடிந்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அப்போது மேடை ஏறிய திகாயத், இது போராட்ட களம் அல்ல, போர்க்களம். இங்கு எனது உயிர் போகுமே தவிர நான் சரண் அடையவோ, பின்வாங்கவோ போவதில்லை என்று உரக்க அறிவித்தார். அத்தோடு இது விவசாயிகளுக்கான போராட்டம், இந்த போராட்டத்தில் பங்கேற்க உத்தரபிரதேசத்தில் எனது சொந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒரு டிராக்டரில் விவசாயிகள் இங்கு வர வேண்டும். அப்படி வரும் வரை நான் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அப்போது ராகேஷ் திகாயத்தின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச மாநில விவசாயிகள் மட்டும் அல்ல பஞ்சாப், ஹரியானாவில் இருந்தும் டிராக்டரில் அணி அணியாக டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
அப்போது முதல் இப்போது வரை விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை திகாயத் உயிர்ப்புடன் வைத்திருந்தார். அதன் பலனாக தற்போது மத்திய அரசு அந்த சட்டங்களை ரத்து செய்துள்ளது. இப்படி நெஞ்சுரத்துடன் போராடிய திகாயத் குடும்பமே விவசாய சங்கத்தில் தீவிரமாக இயங்கக்கூடியது. திகாயத்தின் தந்தை மகேந்திர சிங் திகாயத், பாரதிய கிஷான் யூனியனின் நிறுவனர்களில் ஒருவர். திகாயத்தின் சகோதரர் நரேஷ் திகாயத் இதே சங்கத்தின் தேசிய தலைவராக உள்ளார். ராகேஷ் தியாகத் உண்மையில் ஒரு போலீஸ்காரர். சட்டம் படித்துள்ள இவர் டெல்லி போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றி பிறகு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். ஆனால் தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாய சங்கத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.
No comments:
Post a Comment