ஒரு விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது, விபத்திற்கான காரணங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுவது விமானத்தின் கறுப்புப் பெட்டி ( Black Box) ஆகும். ஒரு விமான விபத்து எப்படி நடந்தது என்பதை, அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் கூறுவதைவிட, கறுப்புப் பெட்டி தெளிவாக வரையறுத்துக் கூறிவிடும். கறுப்புப் பெட்டி என்பது விமான விபத்துக்கள் மற்றும் விமானத்தில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வசதியாக, ஒரு விமானத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பதிவு சாதனங்களின் தொகுப்பு ஆகும்.
Flight Accidentகறுப்புப் பெட்டியின் அமைப்பும் - செயல்பாடும்:
கண்டுபிடிப்பு:
டேவிட் வாரன் என்னும் ஆஸ்திரேலிய அறிவியல் அறிஞர் 1953 இல் உலகின் முதல் கறுப்புப் பெட்டி விமான ரெக்கார்டரைக் கண்டுபிடித்தார். வாரனின் தந்தை ஹூபர்ட் வாரன் 1934 ஆம் ஆண்டில் பாஸ் ஸ்ட்ரெய்ட் விமான விபத்தில் இறந்தார்.அந்த விமான விபத்திற்கான காரணத்தை இறுதிவரை யாராலும் கண்டறிய இயலவில்லை. இந்நிகழ்வே வாரன் கறுப்புப் பெட்டியைக் கண்டறியத் தூண்டுகோலாக அமைந்தது.
டேவிட் வாரன் ஏ.ஆர்.எல் விமான நினைவக அலகு (ARL Flight Memory Unit) என்ற பெயரில் தயாரித்த கருவியே முதல் விமான கறுப்புப் பெட்டி ரெக்கார்டர் ஆகும்.
கருவிகள்:
கறுப்புப் பெட்டியில் இரண்டு விதமான கருவிகள் இருக்கும்.
1) டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர்.
(Digital Flight Data Recorder - DFDR or FDR)
2) காக்பிட் குரல் ரெக்கார்டர்.
(Cockpit Voice Recorder - CVR)
DFDR என்பது விமானத்தின் உயரம், செங்குத்து முடுக்கம், எரிபொருள் ஓட்டம் மற்றும் வானியல் உள்ளிட்ட விமானம் குறித்த அனைத்து தரவுகளையும் பதிவு செய்யும்.
CVR என்பது காக்பிட்டில் நடக்கும் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் காக்பிட்டில் ஏற்படக்கூடிய அனைத்து வித ஒலிகளையும் முழுமையாகப் பதிவு செய்யும்.
இந்த இரு கருவிகளும் ஒரே அலகாக இணைந்திருக்கும்.
கறுப்புப் பெட்டியின் ஆரம்ப நாள்களில் தகவல்கள் ஒரு உலோக துண்டுக்குள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவை காந்த இயக்கிகளைக் கொண்ட திடநிலை நினைவக சிப்களாக தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
வலிமை:
கறுப்புப் பெட்டிகள் 3,400 GS (ஈர்ப்பு விசையின் 3,400 மடங்கு) முடுக்கம் தாங்கக் கூடியவையாக இருக்கும். மேலும், இவை சுமார் 310 மைல் அளவிலான தாக்குதல் வேகத்தைச் சமப்படுத்துவதாக இருக்கும்.
கறுப்புப் பெட்டிகள் பொதுவாக டைட்டானியம் அல்லது எஃகு மூலம் இரட்டை அடுக்காக உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், இவை கடினமான மற்றும் அசாதாரண நிலைமைகளைத் தாங்கக்கூடியவையாக இருக்கும்.
கறுப்புப் பெட்டியின் மெமரி போர்டுகளைக் கொண்ட முக்கியமான பகுதி CSMU (Crash-Survivable Memory Unit) விமான பீரங்கியில் இருந்து சுடப்பட்டும், பல்வேறு முறைகளில் நசுக்கப்பட்டும் அதனுடைய கடினத்தன்மை உருவாக்கவும், சோதிக்கவும் செய்யப்படும்.
விபத்தின்போது விமானத்தின் வால்பகுதியில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதால், கறுப்புப் பெட்டிகள் வழக்கமாக ஒரு விமானத்தின் வால் பகுதியில் வைக்கப்படுகின்றன.
அதீத நெருப்பு, உப்புநீர், உயர் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து விதமான அசாதாரண சூழ்நிலைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு கறுப்புப் பெட்டிகள் வடிவமைக்கப்படும். இவை கடலுக்குள் மூழ்கினாலும் பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது. எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கும். எந்தவித வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும், தகவல் சேமிப்பு யூனிட்டும் வலிமையானதாக இருக்கும். எனவே, ஒரு கறுப்புப் பெட்டி அழிக்கப்படுவது என்பது மிகமிக அரிதானது. கிட்டத்தட்ட முடியாதது.
நிறம் மற்றும் வடிவம்:
கறுப்புப் பெட்டிகள் கருப்பு நிறமாக இருக்காது. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த ஆரஞ்சு விண்வெளி மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் மூன்று வண்ணங்களின் தொகுப்பு நிறமாகும்.
இந்நிறம் சர்வதேச ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. விமான விபத்துகளின்போது சுலபமாகக் கண்டறிய வேண்டியே ஆரஞ்சு நிறத்தில் கறுப்புப் பெட்டியானது வடிவமைக்கப்படுகிறது. நம்மில் பலரும் நினைப்பதுபோல கறுப்புப் பெட்டி என்பது பெட்டி அல்ல. பார்ப்பதற்கு கம்ப்ரஸர் போன்று இருக்கும்.அதனுள்ளே உருளை வடிவிலான இரண்டு பகுதிகள் வைக்கப்பட்டிருக்கும்.
ஊடகங்கள் வைத்த பெயர்:
கறுப்புப் பெட்டி என்ற சொல்லை அறிஞர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. விபத்தை ஆராய்ச்சி செய்யும் புலனாய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் Flight Recorder, DFDR மற்றும் CVR உள்ளிட்ட பதங்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், கறுப்புப் பெட்டி என்னும் பெயர் ஊடகங்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
விமான தரவு பதிவு கருவிகள் கறுப்புப் பெட்டி என்னும் பெயர் பெற்றமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளின் (பிரிட்டன்) விமானப் படையில், எதிரி நாடுகளை ஊடுருவக்கூடிய பல்வேறு சாதனங்கள் விமானத்தின் கறுப்பு நிறத்தில் இருந்த பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டன. எனவே, இவை கறுப்புப் பெட்டி என வழங்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
கறுப்புப் பெட்டியில் உள்ள விபரங்கள் விபத்துக்குப் பிறகுதான் ஆய்வு செய்யப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தில் கறுப்பு நிறம் என்பது இறப்புகளுடன் தொடர்புடையது. எனவே, மனிதர்களின் மரணத்துடன் தொடர்புடைய விபரங்களைக் கொண்டது என்பதால் கறுப்புப் பெட்டி என்ற பெயர் வழங்கப்பட்டு இருக்கலாம் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது.
கறுப்புப் பெட்டியின் ஆரம்பகாலங்களில், விமான விபத்துக்குப் பிறகு உண்டாகிய நெருப்பில் அது கறுப்பு நிறமாக மாறியிருக்க வாய்ப்புண்டு என்ற காரணத்தால் இவை கறுப்புப் பெட்டிகள் என வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும், விமானம் குறித்த சிக்கலான மற்றும் ரகசியமான தரவுகள் உள்ள சாதனம் என்பதால் இவை கறுப்புப் பெட்டிகள் என ஊடகங்களால் முதலில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் கறுப்புப் பெட்டி என்ற பெயருக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
எது எப்படி இருப்பினும் இந்த விமான விபத்துப் பதிவு கருவிகளுக்கு கறுப்புப்பெட்டி (Black Box) என்று பெயரிட்ட பெருமை உலகலாவிய ஊடகங்களையே சாரும்!
தரவுகள் பதியப்படும் நேரம்:
கறுப்புப் பெட்டியில் இருக்கும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர்கள் (DFDR) 25 மணிநேர விமானத் தரவுகளுக்கு போதுமான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளன. ஆனால், CVR களில் 2 மணிநேர காக்பிட் உரையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
தொடர்ந்து இரண்டு மணிநேர காக்பிட் குரல் பதிவுகள் மட்டுமே ஒரு சுழற்சியில் பதிவு செய்யப்படுகின்றன. CVR-கள் காக்பிட்டில் விமானிகளின் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து சத்தங்களின் சமீபத்திய வரலாறுகளைப் பதிவு செய்யும் என்பதால், பின்னணி சத்தங்களும், இரைச்சல்களும் புலனாய்வாளர்களுக்கு முக்கிய தடயங்களை அளிக்கக்கூடும்.
கறுப்புப் பெட்டிகளின் முந்தைய காந்தநாடா பதிப்புகளில் 30 நிமிட காக்பிட் உரையாடல்கள் மற்றும் சத்தத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கால அளவு மற்றும் கண்டுபிடிக்கும் முறை:
கறுப்புப் பெட்டிகள் அவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பதற்கு வசதியாக 30 நாள்களுக்கு அல்ட்ராசவுண்ட் சிக்னல்களை அனுப்பும். கறுப்புப் பெட்டி அழிக்க முடியாத ஒன்று என்பதால், இவை நிலத்தில் விழும்போது சுலபமாகக் கண்டறியப்பட்டு விடும்.
கறுப்புப் பெட்டிகள் தண்ணீரில் 20 ஆண்டுகள் வரை அழியாமல் நீடிக்கும். ஆனால், அதன் ULB-யில் (Underwater Locator Beacon) உள்ள பேட்டரி சுமார் 30 நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே, 30 நாள்களுக்குப் பிறகு கடல் படுகையிலிருந்து கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பது கடினம்.
ஒரு கறுப்புப் பெட்டிகளில் நீருக்கடியில் லொக்கேட்டர் வழிகாட்டி பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. அதன் சென்சார் தண்ணீரைத் தொட்டால் ஒரு துடிப்பை வெளியேற்றத் தொடங்குகிறது. இவை 4 கிலோமீட்டர் ஆழம்வரை வேலை செய்கின்றன. இவற்றின் பேட்டரி தீர்வதற்கு முன் 30 நாள்களுக்கு,ஒரு வினாடிக்கு ஒரு முறை சமிக்கை வெளியிட முடியும். கறுப்புப் பெட்டிகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய பொதுவாகக் குறைந்தது 10-15 நாள்கள் ஆகும்.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ATC (Air Traffic Control) மற்றும் விமானிகளுக்கு இடையிலான உரையாடல்களின் பதிவுகள், விபத்து நிகழப்போவதை விமானிகள் அறிந்திருந்தார்களா, விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்களை விமானிகள் தெரிவித்திருக்கிறார்களா போன்ற பல்வேறு வினாக்களுக்கான விடைகளை CVR மூலம் புலனாய்வுக் குழு புரிந்துகொள்ள முயலும்.
மேலும், விமானம் குறித்த முழுமையான பல்வேறு தரவுகள்,விபத்திற்கான சூழ்நிலை,விமானம் தரையில் மோதிய வேகம் உள்ளிட்டவற்றை குளித்த பல்வேறு தடயங்களை DFDR மூலம் புலனாய்வாளர்கள் தேடுவார்கள். மேலும், விமான நிலையத்தில் உள்ள விமானத்தின் முந்தைய தரவுகள் மற்றும் காலநிலை சார்ந்த பல்வேறு தரவு ரெக்கார்டர்களை ஆராய்ந்து விபத்திற்கான காரணங்களையும், வருங்காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விபத்தை ஆய்வு செய்யும் புலனாய்வாளர்கள் பரிந்துரைப்பார்கள்.
கறுப்புப் பெட்டிகள் என்னும் விமான தரவுப் பதிவு கருவிகள் விபத்து நடந்ததற்கான காரணங்களை நமக்குத் துல்லியமாக வழங்குவதுடன்,எதிர்காலத்தில் விபத்துகள் நடைபெறாமல் இருக்கவும் துணைபுரிகின்றன. விமானங்களின் தேவையும், எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், கறுப்புப் பெட்டிகளின் தொழில்நுட்பமும் திறனும் வருங்காலங்களில் மேலும் மேம்பட வாய்ப்புண்டு!