Wednesday, August 18, 2021

பிரியாணி தமிழர்களின் உணவா..?

பிரியாணி தமிழர்களின் உணவா..?

பிரியாணி என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பதுதான் நிதர்சனம்! இவற்றின் அசல் பிறப்பிடம் எது என்ற ஆதாரம் இல்லையென்றாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பும் வரலாறு மற்றும் இந்தியாவின் பிரபல பிரியாணிகளின் ஸ்பெஷாலிட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...

வரலாறு:

பெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'. போருக்காக நாட்டைவிட்டு வெகுதூரம் பயணம் செய்யும் வீரர்கள், கையில் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலாப் பொருள்களை எடுத்துச் செல்வது வழக்கம். போர் நேரம் முடிந்தவுடன், காட்டுக்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி, ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கொண்டுவருவார்கள்.

 பிறகு, நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மசாலா கலவையை, மாமிசம் மீது தடவி, இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர். அதிகாலையில், நன்கு ஊறிய மசாலா மாமிசத்தை, அரிசியோடு கலந்து தண்ணீர் ஊற்றி கனமான பொருளைக்கொண்டு இறுக்கமாக மூடிவிடுவர். பிறகு, ஆழமான குழியில் தீ மூட்டி, இந்தக் கலவைப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அடைத்துவிடுவார்கள். நண்பகல் போருக்குச் செல்வதற்கு முன், நன்கு வெந்து இருக்கும் இந்தச் சாதத்தைச் சாப்பிடுவார்கள்.

முதலில் வெறும் மசாலாவை மட்டுமே உபயோகப்படுத்திய வீரர்கள், பிறகு நறுமணத்துக்காக அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சில வாசனைப்பொருள்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி போர் வீரர்கள் சாப்பிட்ட இந்தக் கலவைச் சாப்பாடு, நாளடைவில் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் கலவை உணவு, மன்னர் குடும்பம் மட்டும் உண்ணும் `பிரியாணியாய்' உருவெடுத்தது.

போர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் இதில் நெய் சேர்க்கும் முறை உருவானது. பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவர்களுக்குப் பரிமாறப்படும் பிரியாணிகளில் நெய் சேர்த்து வழங்கினர். 

பிறகு, இடத்துக்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான பிரியாணிகள் உருவாகின. அரண்மனைச் சமையலறை வரை மட்டுமே பரவியிருந்த இதன் ரெசிபி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்களுக்கும் போய்ச்சேர்ந்தது.

 பிரியாணி வகைகள்:

வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும். திண்டுக்கல் முதல் லக்னோயி வரை ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தனித்துவம் என்ன என்பதை இனி பார்ப்போம்...
திண்டுக்கல் :
பிரியாணி என்றாலே நீள அரிசியான `பாசுமதி' வகை அரிசியில் இருப்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே பொடிப்பொடியாக இருக்கும் `சீரக சம்பா' அரிசி வகைதான். சீரக சம்பா அரிசியின் மணம் நிச்சயம் அனைவருக்கும் வித்தியாச மணமாக இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான மிளகுத்தூள் இதில் உபயோகப்படுத்தியிருப்பார்கள். இதில் நீளமான இறைச்சித் துண்டுகளைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழந்தைகளும் எளிதில் உண்ணக்கூடிய சிறிய இறைச்சித் துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாரின் 'Tangy' டேஸ்ட் இந்த அருமையான திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணியில் நிறைந்திருக்கும்.

ஆம்பூர் :

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில், தூங்கிக்கொண்டிருப்போரையும் சுண்டி இழுக்கும் இடம் ஆற்காடு. பாரம்பர்யமிக்க அசல் ஸ்டார் பிரியாணி இங்குதான் கிடைக்கும். ஆற்காடு நவாப் குடும்பத்துக்குச் சமைத்துக் கொடுத்த அனுபவத்திலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆம்பூர் வகை பிரியாணி. சிக்கன், மட்டன், பீஃப் மற்றும் இறால் போன்ற இறைச்சிகளோடு சுவையான ஆம்பூர் பிரியாணியின் தனித்துவம், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் புதினா மற்றும் மல்லித்தழைகள்தான். அதுமட்டுமல்லாமல், புளிக்காத புதிய தயிரில் இறைச்சியை நன்கு ஊறவைத்து, பிறகு சாதத்துடன் சேர்ப்பதால் தனி ருசியை இதில் உணரலாம்.

ஹைதராபாதி :

இந்தியாவில் பிரியாணி என்றாலே ஹைதராபாதிதான். முகலாயர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஹைதராபாத்தில், பிரியாணியின் ஆதிக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது. ஹைதராபாத் நிஜாம் சமையலறையில் உருவான இந்தப் பிரியாணியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இறைச்சியை மசாலாவோடு கலந்து இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அரிசியோடு கலந்து தயாராவது 'கச்சி பிரியாணி'. இறைச்சி மற்றும் மசாலாவை ஊற வைத்து உடனே வேகவும் வைத்து, தயாரான கிரேவியை சாதத்தோடு கலப்பது 'பக்கி பிரியாணி'. குங்குமப்பூ மற்றும் தேங்காய் சேர்க்கப்படும் இதில், விதவிதமான நறுமணப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. இவையே இதற்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. இதற்கு பெஸ்ட் காம்பினேஷன், கத்திரிக்காய் தொக்கு.

தலசேரி:

கீமா அரிசி சாதம், முந்திரி, திராட்சை போன்றவற்றோடு நன்கு சமைத்த இறைச்சி மசாலாவைச் சேர்த்தால் `தலசேரி பிரியாணி' ரெடி. மற்ற வகைகள்போல இல்லாமல், மலபார் அல்லது தலசேரிவகை பிரியாணி முற்றிலும் வித்தியாசமானது. பாசுமதி அரிசி வகையை இவர்கள் என்றுமே உபயோகிக்க மாட்டார்கள். முகலாயர்கள் மற்றும் மலபார் உணவு வகையின் பொருள்கள் ஒருசேரக் கலந்து புதுமையான சுவையைத் தருகிறது. உண்ணும் நேரத்தில்தான் கிரேவியோடு சாதம் கலக்கப்படும். இதனால், சுவைக்கேற்ப தேவையான மசாலாவை உபயோகித்துக்கொள்ளலாம்.

லக்னோயி :

இதுதான் பெர்சியன் ஸ்டைல் பிரியாணி. அதாவது, `தம் பிரியாணி'. முதலில் கிரேவி மற்றும் இறைச்சியைப் பாதியளவு வேகவைத்து, பிறகு கனமான பொருளைக்கொண்டு இறுக்கி அடைத்து அதன்மேல் சுடச்சுட கரித்துண்டுகளைப் பரவி, அதன் சூட்டில் ரெடியாவது `தம் பிரியாணி'. இதில் மேற்கத்திய நாட்டு மசாலா அதிகம் பயன்படுத்துவதால், மற்ற பிரியாணிகளைவிட காரம் குறைவாக இருக்கும்.
ருசியான உணவு என்பதால், பலர் தினமும் இதைச் சாப்பிடுவதை வழக்கமாகிக்கொண்டுள்ளனர்.

பிரியாணி பரவிய முறை:

வடக்கில், அவாத்தை (இன்றைய லக்னோ) முகலாயர்கள் சில காலம் ஆண்டனர். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பின்னர் தில்லியிலிருந்து முகல் பிரியாணிஎன்றும் பரவியது.

பின்னர் 1856-ல் கல்கத்தாவை ஆண்ட நவாப் வாஜித் அலி ஷா மூலம் கல்கத்தா பிரியாணி உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில், மைசூர் திப்பி சுல்தானின் கோட்டையில் பல சைவ இந்து சமையல்காரர்களின் மூலம் வெறும் காய்கறிகளின் வைத்து, தாகிரி பிரியாணி சமைத்து பரப்பினார்கள். 

அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள்  மூலம் ஹைதிராபாதி பிரியாணி  என்றும் ஆற்காட்டை ஆண்ட நவாப்கள் (வாணியம்பாடி/ஆம்பூர்)  ஆற்காடு பிரியாணி  என இந்தியா முழுவதும் பரவவிட்டனர்.

கேரளத்தில், கோழிகோடு தலச்சேரி வழியாக படையெடுத்து வந்த நவாப்கள், அந்த பகுதிகளை சில காலம் ஆண்டனர். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி என ஊரெங்கும் என்று பரப்பினர்.

இன்னும் இதை தவிர கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி,   மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி,  தமிழ் நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பிரியாணி வகையாறாக்கள் இந்தியா முழுவது பறந்து விரிந்து பரவியுள்ளது. 

இந்தியா தவிர சிலோன் பிரியாணி, பாகிஸ்தான் சிந்தி பிரியாணி ,மலேசியன் பிரியாணி என கடல் கடந்தும் பிரியாணிகள் மக்களை ஆட்கொண்டுள்ளது. 

எதையும் அதிகம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment