Wednesday, August 25, 2021

உலகின் தலை சிறந்த காலை உணவு இட்லியா..?


உலகின் தலை சிறந்த காலை உணவு இட்லி..!
உலகின் தலைச்சிறந்த காலை உணவு என்பது இட்லி தான். வெள்ளை வெளேரென மெத்தென்ற இட்லி தொட்டுகொள்ள பருப்பு சாம்பார், ஒருபக்கம் புதினா சட்னி, மறுபக்கம் தும்பைபூ போல் தேங்காய்ச் சட்னி காலை உணவான இதில் தான் தொடங்குகிறது. நம் உடலுக்கு தேவையான சத்து. எப்படி தெரிந்துகொள்வோமா?
    
குழந்தைக்கு கொடுக்கும் திட ஆகாரத்தில் தொடங்கும் முதன்மையான முக்கியமான உணவு இட்லி தான். முதுமை காரணமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வயதானவர்களின் உணவு பட்டியலிலும் முதலிடம் இட்லிதான். நோயாளிகளுக்கும் இட்லி தான் சிறந்த உணவாகவே காலங்காலமாக இருக்கிறது. 

உணவகங்களிலும் முதல் பட்டியல் இட்லி தான். எத்தனை நன்மையை தன்னுள் அடக்கி இருந்தால் அது முதலிடத்தில் இருக்கும் என்பதை யோசித்திருக்கிறீர்களா?அது குறித்து தான் முழுமையாக பார்க்க போகிறோம். படித்த பிறகு நீங்களும் இட்லியை தான் தேடுவீர்கள். 
இட்லி ஏன் நல்லது?

உணவு நல்லது என்பது அந்த உணவில் சேர்க்கப்படும் பொருள்களின் குணநலன்கள், எப்படி சேர்க்கிறோம், என்ன பயன்படுத்துகிறோம், எப்படி சமைக்கிறோம் என்பதை பொறுத்தது. இந்த மூன்றுமே மிகச்சிறப்பாக பொருந்தியிருக்ககூடிய உணவு என்றால் அது இட்லிதான்.

ஊறவைத்த அரிசியின் முலம் கார்போஹைட்ரேட்டும், தோல் நிறைந்த உளுந்தில் இருக்கும் முழுமையான புரதமும் ஒன்றிணைந்து கிடைக்கும் அருமையான பொருள்.இதை தயாரிப்பதற்கு முன்பு முதல் நாள் பருப்பு, அரிசியை 6 முதல் 8 மணி நேர வரை ஊறவைத்து அரைத்து பக்குவமாக எடுத்து இரண்டையும் கலந்து அதை வைப்பார்கள். இதனோடு மிகச்சிறிதளவு நார்ச்சத்து நிறைந்த வெந்தயம் அரைத்து சேர்ப்பார்கள்.

இவை நன்றாக புளித்து மறுநாள் காலை அதை ஆவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். இந்த இட்லி வார்ப்பதில் இத்தனை உணவு தொழில்நுட்பம் இருக்கிறது அதுவும் இயற்கையாகவே உடலுக்கு தேவையான நாள்முழுக்க வேண்டிய சத்துகளோடு.

​என்ன இருக்கு இட்லியில்.

இட்லியில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நொதிகள், கொழுப்புகள், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்புகளில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. வைட்டமின் பி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. இரும்புச்சத்தும் கூட இதில் உண்டு.

புரோபயாட்டிக் சத்தை கொண்டிருக்கிறது. இயற்கையாகவே மாவை புளிக்க வைத்து குடலில் நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இட்லியை சத்துள்ள உணவாக பரிந்துரைத்துள்ளது. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த அமைப்புகள் பலவும் இட்லியை சிறந்த உணவாக பரிந்துரை செய்துள்ளது. முழுமையான காலை உணவாக இட்லியை சொல்கிறது.

இட்லி எளிதில் செரிமானமாகிவிடக்கூடியதும் கூட. மிக இலேசாஅன் உணவு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். செரிமானகோளாறுகள் கொண்டிருக்க கூடியவர்கள் கூட இதை அதிகம் சேர்க்கலாம்.

ஒரு இட்லியில் கலோரிகள் 65, புரதம் 2 கிராம், நார்ச்சத்து 2 கிராம், கார்போஹைட்ரேட் 8 கிராம் உள்ளது. இதில் கொழுப்புச்சத்து இல்லை.

​இட்லிக்கு ஏத்த சத்தான ஜோடி

இட்லி மட்டும் தான் அருமையான உணவு என்றில்லாமல் இதனோடு சேர்த்து எடுத்துகொள்ளும் பருப்பு சாம்பார்., புதினா சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி அல்லது வெங்காயச் சட்னி அல்லது தக்காளி சட்னி, பருப்பு பொடி, கொள்ளுபொடி, எள்ளுப்பொடி என எல்லாமே உடலுக்கு கிடைக்கும் கூடுதல் சத்து தான். உடலுக்கு தேவையான மற்ற வைட்டமின்களும் இதில் கிடைக்கும்.

எண்ணெய் இல்லாத இட்லி போன்று எண்ணெய் இல்லாத இந்த சைட் டிஷ் வகைகளும் சிறந்த ஜோடியே. இட்லிக்கு தேங்காய்ச் சட்னி விட்டு விட்டோமே என்று நினைக்க வேண்டாம். இதை சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தேங்காய் ஊட்டச்சத்து நிறைந்தாலும் அதிக அளவு கலோரிகள் சேரும்படி எடுத்துகொள்ள வேண்டாம். அதே போன்று இட்லிக்கு தொட்டு கொள்ள பொடி வகைகளை சேர்க்கும் போது எண்ணெய் கலந்து சாப்பிடுவது உண்டு. இதுவும் தவிர்க்க வேண்டியதே.

​வித விதமான இட்லி

இட்லி ஒரே மாதிரி சாப்பிட்டால் போரடிக்காதா என்று கேட்பவர்கள் இட்லியை விதவிதமாக செய்து சாப்பிடலாம். மாவு அதிகமாக புளிக்கும் போது அதில் ரவா சேர்த்து இட்லி வார்க்கலாம். சாம்பார் வெங்காயம் நறுக்கி தாளிப்பு பொருள்கள் சேர்த்து தாளித்து கலந்து இட்லி வார்க்கலாம்.

காய்கறிகளை நறுக்கி இட்லியில் சேர்க்கலாம். இட்லி போரடிக்காமல் இருக்க சின்ன இட்லியாக, காஞ்சிபுரம் இட்லி போல் சிறு கிண்ணத்தில் ஊற்றி கொடுக்கலாம். இதிலும் வெல்லமும் தேங்காய்த்துருவலும் ஏலத்தூளும் கலந்து இனிப்பு இட்லியாகவும் செய்து கொடுக்கலாம். இட்லி அரிசியிலும் கைக்குத்தல் அரிசி சேர்க்கலாம்.

தோல் உளுந்து என்னும் கருப்பு உளுந்தை அப்படியே சேர்க்கலாம். இது இன்னும் சத்துக்களை உள்ளடக்கியிருக்கும் ஆனால் பார்க்க இட்லியின் நிறம் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

தற்போது இட்லியில் கேழ்வரகு, கம்பு, சோளம்,ஓட்ஸ் கலந்தும் செய்து தருகிறார்கள். இதையும் செய்து பழகலாம்.

​உலகளவில் இட்லிக்கு சான்று

ஆக்ஸ்ஃபோர்டு பண்டைய இந்திய உணவுகள் என்னும் புத்தகத்தில் கே. டி அச்சயா என்பவர் இட்லி குறித்து எழுதியிருக்கிறார். இவர் மிகபெரிய அறிஞர். ஜெனிவாவில் இயங்கும் (food and agriculture organization geneva) உலகளவில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவராக இருந்தவர். இந்த அமைப்பு உலகளவில் உணவு பொருள்களின் தரங்களை நிர்ணயிக்கும் அமைப்பு.

இவர் இட்லியை தயாரிக்கும் முறை குறித்து சிலாகித்து எழுதியிருக்கிறார். இது உடலுக்கு நல்லது செய்யகூடிய நுண்ணுயிர்களை இயற்கையாக அளிக்கிறது. இந்த உணவு உலகளவில் இருக்க கூடிய உணவு வகைகளில் மிகச்சிறந்த காலை உணவு என்றும் கூறியிருக்கிறார். இதை விட வேறு என்ன சான்று நம் பண்டைய பாரம்பரிய உணவுக்கு கிடைக்க போகிறது.









'

No comments:

Post a Comment