ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் கிளம்பி விட்ட பிறகு தாலிபான்கள் ஆட்டம் அங்கு கட்டுக் கடங்காமல் போய்க் கொண்டுள்ளது.
தாலிபான்களின் அடக்குமுறைக்கு இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆப்கானிஸ்தானின் பெண்கள்தான், குறிப்பாக, பாலியல் தேவைக்காக கடத்துவது மற்றும் கட்டாய திருமணங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
ஏன் பெண்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.
பெண்களுக்கு கட்டுப்பாடு
தாலிபான்களை பொறுத்தளவில் பெண்கள், ஆண்களின் சொத்து. உரிமையானவரை தவிர இன்னொருவர் பார்த்துவிடக் கூடாது என்பதால் உடலை முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள். அரசு ஆபீஸ்களுக்கு வர விடுவதில்லை, ஆண்கள் துணையின்றி கடைத்தெருவிற்கும் செல்ல விடுவதில்லை. மீறுபவர்களை, கொலையும் செய்கிறார்கள். இருப்பினும் நாங்கள் வண்ண ஆடைகளை உடுத்துவோம் என்று ஒரு தரப்பு பெண்கள் சமீபத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு திருமணம்
தாலிபான் இயக்கத்தில் சேர வரும் ஆண்களை ஊக்கப்படுத்த இளம் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு அவர்களை திருமணம் செய்து வைக்கிறார்கள். வீடு வீடாகச் சென்று 12 வயதிற்கு மேட்பட்ட சிறுமிகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, பாலியல் அடிமைத்தனத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்று பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிக்கை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
15 முதல் 45 வயது பெண்கள்
திருமணமாகாத அல்லது கணவனை இழந்த 15 முதல் 45 வயதுடைய அனைத்து பெண்களின் பட்டியல்களையும் தாலிபான்கள் சேகரித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும், இது இப்போது 12 வயதிற்கு மேட்பட்ட சிறுமிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 12 வயதாகிவிட்டாலே அந்த பெண்ணோ, சிறுமியோ, ஆண்களின் சொத்து என்று நினைக்கிறார்கள் தாலிபான்கள்.
பணம் சம்பாதிக்கும் தாலிபான்கள்
"மனைவிகள்" அல்லது பாலியல் அடிமைகளை சப்ளை செய்வது போராளிகளை தாலிபான் இயக்கத்தில் சேர்ப்பதற்கான தலிபான்களின் ஆட்சேர்ப்பு யுக்தியாக உள்ளது. பெண் ஆசை மூலம், ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அளவுக்கு கீழே இறங்கி செயல்படுகிறார்கள் தாலிபான்கள். மேலும், இந்த பெண்களின் விற்பனை மற்றும் கடத்தல் தாலிபான்களுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்கிறது. ஆம்.. பெண்களை விற்பனை செய்தும், ஏலம் விட்டு அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் வாழ்கிறார்கள் தாலிபான்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தாலிபான்களின் பணம் ஈட்டும் யுக்தி
போதைப்பொருள், ஆயுதங்கள் சப்ளை, அபின் வர்த்தகம், பெண்கள் விற்பனை என தாலிபான்கள் செய்யும் அனைத்து வணிகமும், சட்டத்திற்கும், தர்மத்திற்கும் புறம்பானவையாகவே உள்ளன. இந்த மண்டலத்தைச் சேர்ந்த பல தீவிரவாத இயக்கங்கள் பெண்களை வைத்து காசு பார்ப்பவையாகவே உள்ளன. ஈராக்கில் உள்ள யாசிதி இன பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் கடத்தி நிலத்தடி அறைகளில் அடைத்து வைத்து, பல வருடங்களாக வெளிச்சத்தை கூட பார்க்க முடியாதபடி செய்து பிறகு விற்பனை செய்து பணம் சம்பாதித்தனர். தாலிபான்களும் இதில் மாறுபட்டவர்கள் இல்லை.
ஐஎஸ்ஐஎஸ் கொடூரம்
ஒரு சிறுமி அல்லது பெண்ணிடம் ஆண்கள் ஒரு நாளைக்கு பத்து முறை கூட உடலுறவு கொண்டு ரணப்படுத்திய கொடூரத்தை யாசிதி பெண்கள் பின்னர் சர்வதேச சமூகத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். யாசிதி பெண்களின் விலை $ 200 முதல் 1500 டாலர் என்ற அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டனர்.
அமெரிக்கா என்ன செய்ய வாய்ப்புள்ளது?
தற்போது அமெரிக்க படைகள் ஆப்கனில் இல்லாத நிலையில், இந்த கொடுமைகளை தட்டிக் கேட்போர் யாருமில்லை. அதேநேரம், வெளியிலிருந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட தேவையுள்ளது. தாலிபான்கள், பெண்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்தால், தாலிபான் மற்றும் அவர்களின் கீழ் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பொருளாதார தடைகள் மற்றும் நிதி அழுத்தங்களை ஏற்படுத்த உலகளாவிய முயற்சியை அமெரிக்கா முன்னெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment