Saturday, October 30, 2021

ஆடையின்றி காட்டும் மாயக்கண்ணாடி : விலை ஒரு லட்சம்'..? பக்கா மோசடி..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மதன்(42). கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு அவரது நண்பர் ஒருவர் மூலமாக தேனி மாவட்டம், போடி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புகோட்டை கிராமத்தைச் சேர்ந்த திவாகர்(29) அரசமுத்து(36) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

நண்பர்கள் ஆன பின் தினமும் தொலைபேசியில் பேசி வந்திருக்கிறார்கள். ஒரு நாள் திவாகர், அரசமுத்து இருவரும் ரஜினிகாந்தின் `நெற்றிக்கண்' திரைப்பட பாணியிலான மாயக்கண்ணாடி தங்களிடம் இருப்பதாகவும், அதை அணிந்து பார்த்தால் எதிரே இருப்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாகக் காட்சியளிப்பார்கள் என்றும் மதனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். 

இதை நம்பிய மதன், அந்தக் கண்ணாடி தனக்கு கிடைக்குமா எனக் கேட்டுள்ளார். அதன் விலை அதிகம் என ஆரம்பித்து, பேச்சுவார்த்தையின் முடிவில் கண்ணாடியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என முடிவு செய்யப்பட்டது. மாயக்கண்ணாடி மீது மயக்கம் கொண்ட மதனும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, திவாகரும், அரசமுத்துவும் இந்தக் கண்ணாடி விவகாரம் குறித்து யாருக்கும் தெரியக்கூடாது; எனவே மாடு வாங்குவது போல தேனிக்கு வருமாறு மதனை அழைத்துள்ளனர்.

அதனடிப்படையில் மதன் தன் நண்பர்கள் சீனிவாசன்(48), வரதராஜன்(49) ஆகியோருடந் அக்டோபர் 13-ம் தேதி காரில் தேனி வந்துள்ளார். அவர்களை திவாகரும், அரசமுத்துவும் பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகப் பணிமணை அருகே உள்ள மயானப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மதனிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை மதனிடம் கொடுத்துள்ளனர்.

ஆர்வமாக பெட்டியை திறந்து பார்த்த மதனுக்கு அதிர்த்தி காத்திருந்தது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஐஃபோன் ஆர்டர் செய்தால் உள்ளே செங்கல் இருப்பது போன்று, பெட்டிக்குள் முதியவர்கள் அணியும் பழங்காலக் கண்ணாடி இருந்துள்ளது. இருப்பினும் மனம் தளராமல் அணிந்து பார்த்துள்ள மதனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அது சாதாரண கறுப்புக் கண்ணாடிதான்.

இதற்கிடையே அரசமுத்துவும், திவாகரும் ஒரு லட்சத்துடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை மதன் மற்றும் அவருடைய நண்பர்கள் விரட்டியதில் அரசமுத்து மட்டும் சிக்கிக் கொண்டார். பணத்துடன் திவாகர் தப்பியோடியுள்ளார். பிடிபட்ட அரசமுத்துவை மூவரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

மதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீஸார், அரசமுத்துவை கைது செய்தனர். தப்பியோடிய திவாகரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75,000 ரூபாய் பணத்தைப் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாரிடம் அரசமுத்து அளித்தப் புகாரின் பேரில் மதன், சீனிவாசன், வரதராஜன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர். 

இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திவாகரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment