Monday, October 11, 2021

வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் முதலீடு சிக்கிய சச்சின் டெண்டுல்கர்


சர்ச்சையில் சச்சின் :

சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு, கடந்த 2015-ம் ஆண்டு உலகளவில் முறைகேடாக முதலீடுகள் செய்தவர்களின் பெயர் பட்டியலை `பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டது. இந்த ஆவணம் வெளியான சமயத்தில் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்தக் கூட்டமைப்பு மீண்டும் `பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் உலகின் பெரும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நபர்களின் சட்டவிரோத முதலீடு குறித்த பெயர் மற்றும் ஆவணப் பட்டியல் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் , பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சச்சின், அவரது மனைவி மற்றும் மாமனாரின் பெயரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இயங்கிவந்திருக்கிறது.

மறுக்கும் சச்சின் தரப்பு:

இந்த நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் போது அதன் பங்குகளை அதன் நிறுவனத் தலைவர்களாக சச்சின் குடும்பத்தினரே அவசர அவசரமாக வாங்கியிருக்கின்றனர். அப்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு சராசரியாக 8.6 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன்படி, சச்சினுக்குச் சொந்தமான ஒன்பது பங்குகள் $ 856,702-க்கு வாங்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவி அஞ்சலிக்கு சொந்தமான 14 பங்குகள் $1,375,714-க்கும், அவரது மாமனார் ஆனந்த் மேத்தாவுக்குச் சொந்தமான 5 பங்குகள் $453,082-க்கும் வாங்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர்!

கடந்த 2015-ம் ஆண்டு `பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்கள் வெளியானபோது பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து அவசர அவசரமாக சாஸ் நிறுவனம் மூடப்பட்டது என்று பண்டோரா பேப்பர் ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மிரின்மோய் முகர்ஜி , ``சச்சின் சாஸ் நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு சட்டப்பூர்வமானது. அந்த முதலீடுகளுக்கு அவர் வரி செலுத்திய ஆவணம் எங்களிடம் இருக்கிறது. அந்த வரி விவரங்கள் முறையாக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பண்டோரா பேப்பர்ஸில் கூறப்பட்டிருப்பது போல சச்சின் எந்தச் சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை" என்று கூறியிருக்கிறார்.

சச்சினின் பாரத ரத்னா சர்ச்சை :

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் பாரத ரத்னா முதன்மையானதாகும். கலை, இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த தேசிய சேவை செய்யும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். விருது வாங்குபவர்களின் பெயரைப் பிரதமர் பரிந்துரை செய்ய விருதினை இந்திய ஜனாதிபதி வழங்குவர். இந்தியர் அல்லாதவர்களில் நெல்சன் மண்டேலாவுக்கும், காந்தியின் நெருங்கிய நண்பர் கான் அப்துல் கப்பார் கானுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் - பாரத ரத்னா

கடந்த 2014-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். பாரத ரத்னா விருது பெரும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் சச்சினுக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அந்த வருடம் இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு வழங்கப்படவிருந்த விருது. காங்கிரசின் பரிந்துரையால் கடைசி நேரத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்டது என்று பரவலாகக் கூறப்பட்டது.

யாருக்கு விருது வழங்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில்தான் இருக்கிறது. `2014-ம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெறுவோர் பட்டியல் 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வெளியானது. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து சச்சினின் விவரங்கள் அவசர அவசரமாகப் பிரதமர் அலுவலகம் கேட்டுப் பெற்றுள்ளதாகவும். அதற்கு அடுத்த நாள் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் சச்சினின் பெயர் பட்டியல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது' என்றும் ஆர்.டி.ஐ. தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சச்சின் - பாரத ரத்னா

பாரத ரத்னா விருது வாங்கிய சச்சின் நடிக்கும் விளம்பரங்களில் விருதின் நற்பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே பாரத ரத்னா விருதை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்' என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், `இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை' என்று நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். அவருக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு உலக பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

அப்போது சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது" என்று கூறினார். சச்சினின் இந்த ட்விட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு விவகாரங்களில் எந்தக் கருத்தும் தெரிவிக்காத சச்சின், விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

அதே சமயத்தில், ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக சச்சின் செயல்படுகிறார். அவர் பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர் கிடையாது. அவர் விருதைத் திரும்பித் தரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் கிளம்பியது. தற்போது மீண்டும், சச்சின் டெண்டுல்கர் மீது வெளிநாடுகளில் சட்டவிரோத முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சர்ச்சையினால், தகுதியில்லாத நபருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது. சச்சின் பாரத ரத்னா விருது வாங்கி 7 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால், அன்று முதல் இன்றுவரை அவருக்கு விருது வழங்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகிறது.

No comments:

Post a Comment