Monday, November 1, 2021

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு ரத்து..! உயர்நீதி மன்றம் அதிரடி..?


வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து! உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

மதுரை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.

அரசாணை

இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

தடை விதிக்க வழக்குகள்

இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் உள்பட 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மதுரை கிளையில் தினமும் விசாரணை

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் முதலில் விசாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரணை நடைபெற்றது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 50க்கும் மேற்பட்டோர் மனுதாரர்கள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று வாதிட்டோர் தரப்பில் பாமக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு ஆஜரானார்.

மனுதாரர்கள் வாதம்

விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது.

அரசியல் காரணம்

உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்கவேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு வாதம்

தமிழ்நாடு அரசுத்.தரப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் என்ற 65,04,855 வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், இதில் அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கற்பனை

மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே எனவும், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது எனவும், அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரப்பட்டது. இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பா.ம.க. தலைவர் மருத்துவர் எஸ். ராமதாஸ் தரப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அதிரடி

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த வழக்குளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment