வரலாற்றில் முதல்முறை... மூளைச்சாவடைந்த பெண்ணுக்கு பன்றியின் கிட்னி பொருத்தம்... மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனை!
பொதுவாக மனிதர்களுக்கு உடல் உறுப்பு செயல் இழக்கும்போது, மற்றவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் பொருத்தப்படும். இருப்பினும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது.
அதேபோல ஒருவரது உடல் அனைத்து விதமான மனித உறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாது. ரத்தப்பிரிவு உட்பட பல்வேறு விஷயங்கள் ஒத்துப்போனால் மட்டுமே உறுப்புகள் ஒழுங்காகச் செயல்படும். இதால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது.
மருத்துவ ஆய்வுகள்
இதற்கான தீர்வை கண்டுபிடிக்க உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பல ஆண்டுகளாகவே விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் மனித உறுப்பு பற்றாக்குறையைப் போக்கிட முடியும் என்ற கூறப்படுகிறது. இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
மனிதருக்குப் பன்றியின் கிட்னி
இந்நிலையில், உலகில் முதல்முறையாகப் பன்றியின் கிட்னியை அமெரிக்க மருத்துவர்கள் மனிதனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கிட்னி செயலிழக்கும் நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று சோதனை முயற்சியாக அவருக்குப் பன்றியின் கிட்னியை அமெரிக்க மருத்துவர்கள் பொருதியுள்ளனர். இது மருத்துவ உலகின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
என்ன சோதனை
முதலில் அந்த நோயாளியின் ரத்தக் குழாய்களுடன் பன்றியின் கிட்னியை இனைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உடலின் உள்ளே கிட்னியை வைக்காமல், நோயாளியின் தொடையின் மேல் பன்றியின் கிட்னி வைத்து, அவரது ரத்தக் குழாய்களுடன் இணைக்கப்பட்டு 3 நாட்கள் பராமரிக்கப்பட்டது. அந்த 3 நாட்களுக்கும் வழக்கமான மனித கிட்னியை போலவே பன்றியின் கிட்னியும் செயல்பட்டுள்ளது. அந்த நோயாளியின் உடலில் முன்பு இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின் அதில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பன்றி மரபணு மாற்றப்பட்ட பன்றி
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் மனித உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வெளி உறுப்புகளை நிராகரிக்கும். அதைத் தடுக்க மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கால்சேஃப் என்று அழைக்கப்படும் அந்த மரபணு மாற்றப்பட்ட பன்றிகள், இறைச்சி ஒவ்வாமை உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா இதற்கு ஒப்புதல் அளித்தது. மேலும், உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சையிலும் இது அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட கால சோதனை தேவை
பன்றியின் சிறுநீரகம் சுமார் ஓர் ஆண்டு வரை மனிதர்களின் உடலில் சரியாகச் செயல்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட ஆய்வில் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் 3 நாட்கள் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் நீண்ட நாள் சோதனை இதை மனிதர்கள் மீது சோதனை செய்வதே ஒரு வழி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றால், உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு இது பேருதவியாக இருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment