Monday, November 1, 2021

ஜெய் பீம் படத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!


இருளர் மக்களின் பிரச்னைகளை, இந்திய சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படும் விதத்தை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு கள்ள மௌனத்தை மட்டும் தந்து கொண்டிருக்கும் பொது சமூகத்தைப் பொட்டில் அறைந்திருக்கும் படமாக அமேசான் ப்ரைமில் வெளிவந்திருக்கிறது ஜெய் பீம்.

அரசியல் அதிகாரமும் அமைப்பாக்கமும் அற்ற, கல்வி கற்று முன்னேறி பொதுச்சமூகத்தில் கலக்க வாய்ப்பற்ற, இந்திய குடிமக்களுக்கான ஆவண வரையறைகளுக்கு வெளியில் தள்ளப்பட்ட இருளர் பழங்குடிகள்மீது பொய்வழக்குகளைப் போட்டு சித்திரவதை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது காவல்துறை. அப்படியான ஒரு கொடும் சம்பவத்தில் லாக்கப்புக்குள் தள்ளப்பட்ட ராஜாக்கண்ணு, குட்டப்பன், மொசக்குட்டி என்னும் மூன்று இருளர் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கெதிரான நீதிப்போராட்டமுமே படம்.

மனைவி மீது உன்மத்தம் கொண்ட காதலனாய், குடும்பம் விட்டுப்பிரிந்து செங்கல் சூளையின் சூட்டில் கனவுகள் கருக்கும் கூலியாய், செய்யாத குற்றத்துக்காக லாக்கப்பில் வதைபடும் அப்பாவியாய் ராஜாக்கண்ணுவாக மாறியிருக்கிறார் மணிகண்டன். எலி பிடிக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் காட்சியிலிருந்து, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன் என கடைசி வரை அறத்தின் பால் நின்று காவல் குச்சிகளிடம் குருதி இழக்கும் வரை மணிகண்டன் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நமக்குத் தெரிவது ராஜாக்கண்ணுதான்.

திரைப்படம் முடிந்தபின்னும் கண்ணீர் வழிந்தோடும் கண்களுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் உறைந்துநிற்கும் செங்கனியாய் லிஜோமோல் ஜோஸ். சிசு உறங்கும் வயிற்றை சுமந்தபடி நீதி கேட்டு நெடும்போராட்டம் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சீற்றத்தோடு நம்மை உலுக்கிவிடுகிறார். பேரம் பேசும் காவல்துறை அதிகாரியிடம் மறுக்கும் துணிச்சல், போலீஸ் ஜீப் பின் தொடர, முன் நடக்கும் கம்பீரம், காணாமல்போன கணவன் என்ன ஆனார் என்று தெரியாத குமுறல் என இருளர் பெண்ணின் பாடுகளை நம்முன் இறக்கிவைத்திருக்கிறார்.


'சட்டம் ஓர் இருட்டறை. வக்கீலின் வாதமே விளக்கு' என்றார் பேரறிஞர் அண்ணா. கரிபடிந்த அதிகாரத்தின் இருட்டுப்பக்கங்களில் நீதியையே தீப்பந்தமாய் ஏந்தி நிற்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா. ஓயாத போராளியாய் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். சுவரில் பந்தை அடித்தபடியே வழக்குகளின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் சாமர்த்தியம், எதற்கும் சமரசம் கொள்ளாத துணிச்சல், மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு பைசா கூட வாங்க மாட்டேன் என்கிற அறப்பிடிவாதம், செங்கனி சொன்ன ஒரு பொய்க்காக கண்கள் சிவக்கும் கோபம், நீதிமன்றத்தைத் தாண்டியும் மக்கள் மன்றத்தில் முஷ்டி தூக்கி குரலுயர்த்தும் போர்க்குரல் என்று சந்துரு என்னும் சமூகப்போராளியைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார் சூர்யா.

காவல்துறையின் அசிங்கமான பக்கங்களைக் கண்டு அருவெறுப்படைந்து நீதியின் பக்கம் நிற்கும் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ். பாத்திரத்தை உள்வாங்கிய திறத்தையும் இத்தனை ஆண்டுக்கால நடிப்பின் முதிர்ச்சியையும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். அதிலும் இருளர்கள் தங்கள்மீது போடப்படும் பொய்வழக்குகளை அவர்களே விவரிக்கும் காட்சியும் அதில் பிரகாஷ்ராஜ் வெளிப்படுத்தும் உணர்வுகளும் துயரக்கவிதைகள். காவல்துறையின் கோர முகத்தை நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறார் காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் தமிழ்.

பீமா கோரேகானில் உயிரிழந்த ஒடுக்கப்பட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் சொல்லாக உருவானது 'ஜெய் பீம்'. பிறகு குரலற்றவர்களின் தலைவனாக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கரைப் புகழும் சொல்லாக 'ஜெய் பீம்' மாறியது. அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட, நீதியின் புறவாசலில் நிறுத்தப்பட்ட இருளர் மக்களின் மீதான ஒடுக்குமுறையையும் அதற்கு எதிரான சட்டப்போராட்டத்தையும் காட்சிகளாக நம்முன் விரிக்கிறது இந்த 'ஜெய் பீம்'.


சிறையிலிருந்து வெளிவந்த கைதிகளை சாதிப்பெயர் கேட்டு காவல்துறை கையாளும் முதல் காட்சியிலேயே நம்மை அதிரவைத்துவிடுகிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். இருளர்களின் எலிவேட்டை, பாம்பு பிடித்தல், பேச்சுமொழி, சாவுச்சடங்கு என ஒவ்வொன்றையும் நுட்பத்துடன் பதிவு செய்ததில் தெரிகிறது ஞானவேலின் மெனக்கெடல். ஓர் உண்மைச்சம்பவத்தை நம்பகத்தன்மையுடனும் அதேநேரம் நேர்த்தியான திரைமொழியுடனும் காட்சிகளாக மாற்றிய விதத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் ஞானவேல்.

"கெட்டவங்க உங்க சாதி, என் சாதியிலும் இருக்காங்க", "ஒருநாள் கூலியா ஆயிரம் ரூபாய் கூட வாங்காத பொண்ணுதான் லட்சக்கணக்குல பேரத்தொகையை மறுத்திருக்காங்க", "அந்த போலீஸ்காரங்க பாம்பு கடிச்சு வந்தாலும் காசு வாங்காம வைத்தியம் பார்ப்பேன் சார்", "நீதிக்கு ஆதரவான வார்த்தைகளைவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது", "எல்லா போலீஸும் மோசம்னு நினைக்கிற வக்கீலும் எல்லா வக்கீலும் மோசம்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து செய்யப்போற விசாரணை" என்று படத்தின் உயிர்ச்சாரத்தில் ஊறிப்போன வசனங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. எல்லாவற்றுக்கும் மேல் ஒரு இருளர் சிறுவனின் குரலாக ஒலிக்கும் வசனம், பார்க்கும் அனைவரையும் அசைத்துப் பார்த்துவிடும்.

நீதிமன்றக் காட்சிகளை நம்பத்தன்மையாக்கியதில் K.கதிரின் கலை அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது. இருளர் பகுதிகள், காவல்நிலையம், நீதிமன்றம் என இருப்பிடங்களை எதார்த்தமாய் உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் கதிர். காவல் நிலையத்தில் நிகழும் காட்சிகளில் நம்மை ஒருவித பதைபதைப்பு மனநிலையில் வைத்திருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் கேமரா. ஷான்ரோல்டனின் இசை பெரிதாய் பலம் சேர்க்கவில்லை என்றாலும் பெரும் பலவீனம் என்றும் சொல்லமுடியாது.

இரண்டாம் பாதியில் வரும் பாடல்களைக் குறைத்து, படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாகியிருக்கும்.

உண்மைச்சம்பவங்களுடன் சுவாரஸ்யமும் உணர்வெழுச்சியும் ஏற்படுத்த சில காட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. என்றபோதும் இவை இல்லாவிட்டால் ஆவணப்படமாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்றளவில் ஏற்கத்தக்கவை.

நாம் காணமறுக்கும் காட்சிகளை நம் கண்முன் நிறுத்தி மனச்சாட்சியின்முன் கேள்விகளை வீசுவதும் அதிகாரத்தின் முன் அசலான உண்மைகளைப் பேசுவதும்தான் ஓர் உண்மையான கலைப்படைப்பு என்றால் அப்படியான ஓர் உன்னத சினிமாதான் 'ஜெய் பீம்'.


முதல்வர் ஸ்டாலின் பார்த்த ஜெய்பீம்


இதன்பிறகு நீண்ட காலமாக எந்த படத்தையும் அவர் பாராட்டி பதிவிட்டது இல்லை. இப்போது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை பார்த்து அறிக்கை வெளியிட்டு பாராட்டியுள்ளார் ஸ்டாலின். இதோ அவரது அறிக்கை: ஜெய்பீம் படக் குழுவினருக்கு வணக்கம்! நேற்றையதினம் 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவிட்டீர்கள்.

காவல்துறை அதிகாரி தவறு

நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் களமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும்,மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.

ஒழுங்கீனங்களை தடுக்க

சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு), ஒரு காவல் துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அமைதியான, அதேநேரத்தில், அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா அவர்கள் திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும், அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.

பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு 1 கோடி

கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும். ஏராளமாக. இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.

நீதிபதி சந்துரு

'ஜெய்பீம்' படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களைச் சந்தித்தேன். (நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான் !) அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு அவர்கள் எழுதி உள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது.

சூர்யாவிற்கு வாழ்த்து

இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான 'ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment