Sunday, November 14, 2021

நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம்..!


ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர்சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

நடிகர் சூரியா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே  வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குருபெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய  கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர். எனவே ஜெய்பீடம் பட  தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட  திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட செயலாளர்  பழனிச்சாமி,  ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும் என்றும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் திரைப்பட காட்சியை நடத்த கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் படத்தை மாற்றிகொள்கிறோம் என கூறிய திரைப்பட நிர்வாகத்தினர் காட்சிகளை ரத்து செய்தனர்.

No comments:

Post a Comment