Wednesday, November 17, 2021

எதற்கும் துணிந்தவன்..?

பழனிபாபா, குணங்குடி ஹனீபா போன்ற தலைவர்கள் காலத்தில் பாமகவுக்கு வன்னியர்கள் எல்லையை தாண்டி முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

அதன்பிறகு ராமதாஸோடு திருமாவளவன் இணைந்த காலத்தில் தலித்துகள் மத்தியிலும் பாமகவுக்கு வரவேற்பு கிடைத்தது.
முஸ்லிம்களின் ஆதரவு, தலித்துகளின் ஆதரவு, திமுக காங்கிரஸ் கூட்டணியில் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் என அடுத்தடுத்த வெற்றிகளை பாமக பெற்றது.

அதன்தொடர்ச்சியாக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர், ரயில்வேத்துறை இணையமைச்சர் என பாமக உச்சம் தொட்டது.
ஆனால் அந்த வெற்றி மாலைகள் பாமகவுக்கு நீடித்து நிற்கவில்லை.
காலங்கள் உருண்டோட பாமகவின் பாதை மாறியது.
முஸ்லிம்கள் பாமகவை வெறுத்தனர். தலித்துகள் பாமகவை அடியோடு வெறுத்தனர்.

ஏனெனில் தர்மபுரி, மரக்காணம், பொன்பரப்பி என பல ஊர்களில் தலித்துகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டது. 
மறுபுறம் சாதியின் பெயரால் தொடர் ஆணவ படுகொலைகள் அரங்கேறியது.

ரஜினிகாந்த், விஜயகாந்தோடு முரண்...
வேல்முருகனோடு பகை...
படிப்படியாக பாமகவின் மார்கெட் குறைந்து வந்தது.
பாஜகவோடு கூட்டணி வைத்த பிறகு பாமக, தேமுதிக, மதிமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் அரசியல் அநாதையாகின.
மதிமுக 2021 ல் திமுக கூட்டணியில் மீண்டும் உயிர் பெற்று விட்டது.

ஆனால் பாமக உயிரில்லாமல் இருந்த நிலையில் இருப்பை காட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருந்த வேளையில் ஜெய்பீமில் காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகும் எச்சில் துப்பியாவது இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்று பாமக விரும்புகிறது.

காலண்டர் படம் மாற்றப்பட்டதற்கு நன்றி சொல்ல வேண்டிய அல்லது இதுமாதிரியான விவகாரத்தில் இயக்குநர் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்று அழகிய முறையில் சுட்டிக்காட்டியிருந்தால் அதன்போக்கு வேறு திசையில் சென்றிருக்கும்.

ஆனால் காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகும் தியேட்டரை கொளுத்துவோம். சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ 1 லட்சம் பரிசு. சூர்யாவின் தலையை வெட்டினால் ரூ 10 லட்சம் பரிசு. சூர்யா வெளியில் நடமாட முடியாது என்பது போன்ற தொடர் மிரட்டல்கள் பாமகவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது வட இந்தியா அல்ல!

வன்முறையும், இரத்தவெறியும் ஊறியுள்ள பாஜகவே தமிழ்நாட்டில் காலூன்ற வட இந்தியாவுக்கு நிகராக வன்முறையை கையிலெடுக்க முடியாமல் தினம் தினம் பற்பல வியூகங்களை வகுத்து அரசியல் நாடகத்தை நடத்தி வருகிறது.

ஆனால் பாமக பாஜகவின் வட இந்திய வன்முறை பாணியை கையிலெடுத்து மிரட்டுவதெல்லாம் சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே பாமகவின் மீது வெறுப்பு கூடிக்கொண்டே போகிறது.

ஜெய்பீம் படத்தை திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆதரித்தது பெருமையல்ல! பாஜக ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறது.

கோவை மாணவியின் மரணத்திற்கு முஸ்லிம்கள் போராடுவது பெருமையல்ல! RSS பள்ளியாக இருந்தும் பாஜக போராட்டம் நடத்துகிறது.

இதுதான் பெரியார் மண்! இங்கு பாஜகவும் அரசியல் நாடகத்தை நடத்திதான் ஆக வேண்டும். 

பாமக கொஞ்சம் கூட Update ஆகாமல் பழைய பட வில்லன்களை போல் மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன், கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் என கல்வி, விவசாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு என சிவக்குமார் குடும்பத்தின் மீது தமிழக மக்கள் மத்தியில் நன்மதிப்பு உயர்ந்து நிற்கிறது.

ரஜினிகாந்தை தொடர்ந்து விஜயகாந்துடன் பகை ஏற்பட்ட பிறகு விஜயகாந்த் கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே பாமகவின் கோட்டையான விருத்தாசலத்தில் நின்றார். விஜயகாந்தை தோற்கடித்தே தீர வேண்டும் என்று வெறித்தனத்தோடு தேர்தல் வேலை செய்தும் பாமகவின் முகத்தில் கரியை பூசி விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் வெற்றிப்பெற்றார்.

வேல்முருகன் வெற்றிப்பெறக்கூடாது என்று பாமக நடத்திய அத்தனை சூழ்ச்சிகளும் நாடறியும். ஆனாலும் வேல்முருகன் வெற்றிப்பெற்று என்னுடைய வெற்றிக்கு தலித்துகளும், இஸ்லாமிய சொந்தங்களும் காரணமென்று பொதுவெளியில் அறிவித்தார். கட்சியை வேகமாக வளர்த்து வருகிறார். பொது நீரோட்டத்தில் வன்னியர் சமூகத்தின் சார்பாக பாமகவை பின்னுக்கு தள்ளி தமிழக வாழ்வுரிமை கட்சியை பரவலாக முன்னிலையில் கொண்டு சென்று விட்டார்.

திருமாவளவனை தோற்கடித்தே தீர வேண்டும் என்று பாமகவும், பாஜகவும் நடத்திய அத்துனை சூழ்ச்சிகளையும் வன்முறைகளையும் நாடறியும். இருப்பினும் அத்துனை சூழ்ச்சிகளையும் தகர்தெறிந்து பாமகவின் முகத்திலும், பாஜகவின் முகத்திலும் மண்ணை வீசிவிட்டு சிதம்பரத்தில் வெற்றிப்பெற்று தலைநகர் டெல்லியின் கதவை தட்டி பாஜகவின் பெரும்பான்மை அவையில் வாழ்க அம்பேத்கர் பெரியார். வெல்க ஜனநாயகம் சமத்துவம் என்று முழங்கி விட்டார். என்னுடைய வெற்றிக்கு இஸ்லாமிய சொந்தங்களின் 100 சதவீத வாக்குகளும் காரணமென்று திருமாவளவனும் பொதுவெளியில் அறிவித்து விட்டார்.

நல்லவர்களை முஸ்லிம் சமுதாயம் எப்போதும் ஆதரிக்கும்.

அனைவரும் ஒன்றாக இருந்த ஆரம்ப காலத்தில் பாமக நடத்திய இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை தவிர கடந்த 30 ஆண்டுகளில் பாமக தமிழ்நாட்டின் நலனுக்காக உருப்படியாக எந்த ஒன்றையும் செய்ததில்லை. மாறாக வன்னிய இளைஞர்களை சாதியை தூண்டி சிறைக்கு செல்ல வைத்ததும், அவர்களின் குடும்பத்தை சீரழித்ததும் தான் நடந்தேறியது.

தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கும், தலித்துகளுக்கும் ஒரேயொரு SC/ST வழக்குகள் கூட பதியாத அளவுக்கு இணக்கமான முறையில் வேல்முருகன் கட்சி நடத்தி வருகிறார். ஆனால் பாமகவினருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைகளும், வழக்குகளுமே முழு வாழ்கையாக மாறிவிட்டது.

தலைவர்கள் என்றால் திருமாவளவனை போன்று, வேல்முருகனை போன்று சமூக நல்லிணக்கவாதிகளாக திகழ வேண்டும். ராமதாஸ், அன்புமணியை போன்று வன்முறையாளர்களாக திகழ்ந்தால் மக்கள் விரும்புவார்களா ?

ஒரு கட்சி என்பது நாளுக்கு நாள் வளர வேண்டும். பாமகவை பொறுத்தவரை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே செல்வதை கண் முன்னால் காண முடிகிறது.

பாமக என்றால் குச்சி கொளுத்தி, குடிசை கொளுத்தி, பஸ் கொளுத்தி, தியேட்டர் கொளுத்தி, மரம்வெட்டி, அரசியல் வியாபாரிகள், பொட்டி வாங்கிகள் என கேவலமான பெயரே நிலைத்து நிற்கிறது.

இன்றைய நிலையில் பாமகவுக்கு ஆதரவாக பாஜக நிற்கிறது.

சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ்நாடே நிற்கிறது.

மோதியின் துணையுடன் மோதி தான் பார்க்க வேண்டுமென்று பாமக விரும்பினால் சூர்யாவின் அடுத்த படத்தின் பெயர் எதற்கும் துணிந்தவன்!

சங்கைரிதுவான்

No comments:

Post a Comment