Saturday, November 20, 2021

100% இட ஒதுக்கீடு கொடுங்கள் : நடிகர் கருணாஸ் நேர்காணல்


கருணாஸ்

வன்னியர்களுக்கே கூட 100% இட ஒதுக்கீட்டையும் கொடுங்கள், ஆனால்..!" - சொல்கிறார் நடிகர் கருணாஸ்

அ.தி.மு.க.ஆட்சிக்காலத்தில் பரபர அரசியலில் இருந்துவந்த நடிகர் கருணாஸ், 2021 தேர்தலுக்குப் பிறகு மறுபடியும் திரைத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் 'முக்குலத்தோர் புலிப்படை கட்சி'த் தலைவர் என்ற முறையில் அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றிவரும் நடிகர் கருணாஸிடம் பேசினோம்...

``நடிகர் கருணாஸ், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தது ஏன்?''

``அரசியல் ஈடுபாடு என்பது, நம்மையே நம்பியிருக்கிற ஏழை எளிய மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து, அவர்களுக்கு உதவி செய்கிற சேவை அடிப்படையிலானதுதான். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்துவந்ததால், தொகுதியில் மக்களைச் சந்திப்பது, தொகுதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது என முழுநேர அரசியல்வாதியாகச் செயல்பட்டுவந்தேன். எனவே, திரைத்துறைக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் இருந்துவந்தேன். இப்போதும் அரசியலில் இருக்கிறேன் என்றாலும்கூட, என் நடிப்புத் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும் நேரம் கிடைத்திருக்கிறது. இதுதான், அரசியலிலிருந்து நான் ஒதுங்கிவிட்டதுபோல ஒரு தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மற்றபடி இப்போதும் நான் அரசியலில் இருக்கிறேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனவே, வருமானத்துக்காக திரைப்படங்களில் நடித்து சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான்.''


ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

``வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தை இயற்றிய அ.தி.மு.க அரசில் அங்கம் வகித்துவந்த கருணாஸ், தற்போது அந்தச் சட்டம் ரத்தானதை வரவேற்று அறிக்கை வெளியிடுவது அரசியல் இல்லையா?''

''கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சட்டமன்றத்தில் இந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை அவசரகோலத்தில் இயற்றும்போதே, அதை எதிர்த்து பேட்டி கொடுத்ததோடு 'தேசிய தெய்விக யாத்திரை'யும் சென்றவன் நான்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கொடுப்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானது. மற்றபடி நான் எந்தச் சமூகத்துக்கும் எதிரானவன் கிடையாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கேகூட 100 % இட ஒதுக்கீட்டையும் கொடுங்கள். எனக்கு மகிழ்ச்சிதான். எந்த வருத்தமும் கிடையாது.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பே நடத்தாமல், வெறுமனே ஒரு சமூகத்துக்கு மட்டும் 10.5% கொடுத்துவிட்டால், மற்ற சமுதாயங்களுக்கு எதைக் கொடுப்பது... அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்... அவர்களும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டாமா... அரசு வேலைக்குச் செல்ல வேண்டாமா?

இட ஒதுக்கீடு பற்றிய புரிதல், இன்றைய சமூகத்தில் இல்லை என்பது வருந்தத்தக்கது. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில், வன்னியர் உட்பட 116 சாதிகள் இருக்கின்றன. இவர்களுக்கு மொத்தம் 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்துவருகிறது. ஆக, மொத்தமுள்ள 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு மட்டுமே 10.5%-ஐ உள் இட ஒதுக்கீடாகக் கொடுத்துவிட்டால், மீதம் உள்ளவர்ளின் நிலை என்ன? இதை கருணாஸ் மட்டும் கேட்கவில்லை... 115 சமுதாய மக்களின் கேள்வியும் இதுதான்!''

''அரசியல் லாபத்துக்காக அ.தி.மு.க கொண்டுவந்ததென்றால், ரத்துக்கு எதிராக தற்போதைய தி.மு.க அரசும் மேல் முறையீடு சென்றிருக்கிறதே?''

''ஆமாம்... தி.மு.க-வும் இப்போது அரசியல் செய்துதானே ஆக வேண்டும். அதனால்தான் மேல்முறையீட்டுக்குச் செல்கிறார்கள். இல்லையென்றால், வன்னிய மக்களின் கோபம் தி.மு.க-வை நோக்கித்தானே திரும்பும்... ஆக, தி.மு.க-வும் இந்த விஷயத்தில் இப்போது அரசியல்தான் செய்துகொண்டிருக்கிறது.''


விஜய் சேதுபதி

''அண்மையில் விஜய் சேதுபதியைத் தாக்கிய நபர், 'முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாகப் பேசியதால், விஜய் சேதுபதியைத் தாக்கினேன்' எனச் சொல்கிறாரே?''

''இல்லையில்லை.... அப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நபர் சொல்வதை வைத்து மட்டுமே அவருக்கு சார்பாகவெல்லாம் பேச முடியாது.

விஜய் சேதுபதியை நீண்டகாலமாக நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தன் மனதில் இருப்பதை ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவாரே தவிர... இப்படியெல்லாம் யாரையும் அவமரியாதையாகப் பேசக்கூடியவர் அல்ல அவர். அப்படிப் பேசுவதற்கான அவசியமும் அவருக்கு இல்லை.''

''நீங்களும் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதால், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா?''

''அப்படி எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. தவறு யார் செய்தாலும் தவறுதான். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று நான் நேரடியாகப் பார்க்கவில்லை. விஜய் சேதுபதியிடம் நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு அவர் பழக்கமும் கிடையாது. இந்த நிலையில், ஒருவர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொண்டு யாரையும், எதுவும் சொல்ல முடியாது.''


ராமதாஸ் - அன்புமணி

''அண்மையில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் வன்னியரை தவறாகச் சித்திரிக்கிறது என்று பா.ம.க கண்டனம் தெரிவித்திருக்கிறதே?''

''திரைப்படத்தை ஒரு படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். மலையில் வாழ்ந்துவரக்கூடிய பழங்குடிச் சமூகத்தில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதிகார வர்க்கத்தின் கொடூரங்களை விவரிக்கிற படம்தான் `ஜெய் பீம்.’

காவல்துறையின் அதிகார வரம்புமீறலால், எளிய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது நடைமுறை உண்மை. நானேகூட கடந்த காலங்களில் இது குறித்து மேடைகளில் பேசியிருக்கிறேன்.

இந்த நிலையில், பா.ம.க தரப்பிலிருந்து இப்படியொரு விமர்சனம் எழுந்தவுடனேயே 'குறிப்பிட்ட எந்தவொரு சமூகத்தையும் தவறாகச் சித்திரிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை' என்பதை படக்குழுவினர் தரப்பிலிருந்தும் சொல்லிவிட்டார்கள். இதன் பிறகும்கூட, தனிப்பட்ட நபர்கள் மீது குறை சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் கிடையாது. அது சினிமாவுக்கு நல்லதும் அல்ல.''

''உங்கள் சமுதாயத்தை இது போன்று விமர்சித்து படம் எடுத்திருந்தால் கூட, அப்போதும் படைப்பு சுதந்திரத்துக்குத்தான் ஆதரவு தெரிவிப்பீர்களா?''

''தவறு என்றால் தவறுதான். இதில் யாருக்காகவும் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவேண்டிய தேவையில்லை. காடுவெட்டி குரு, எனக்கும் நெருங்கிய அண்ணன்தான். நிறைய முறை அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர் மரணத்தின்போது அவரது சொந்த ஊருக்கே சென்று அஞ்சலியும் செலுத்தியிருக்கிறேன்.''


எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

''அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ என்ற வகையில், தற்போது அந்தக் கட்சியில் நடைபெற்றுவரும் குழப்பங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் வழிநடத்தியபோது, தமிழர்களுக்கு எதிரான எந்தவொரு விஷயத்துக்கும் கட்சி துணைபோகவில்லை. ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் தலைமையின் கீழ் கட்சி வந்துவிட்ட பிறகு, இந்த நிலைமை தலைகீழாக மாறிப்போய்விட்டது.

குறிப்பாக, தங்களை வளப்படுத்திக்கொள்வதற்கும், தங்களுக்கான பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மத்திய அரசைச் சார்ந்து இந்த இரு தலைவர்களும் விட்டுக்கொடுத்துவிட்ட மாநில உரிமைகள் நிறைய. இந்த நிலையில், அ.தி.மு.க-வை மீண்டும் வலிமையாக வழிநடத்திச் செல்ல ஒற்றைத் தலைமைதான் தேவைப்படுகிறது.''

''அந்த ஒற்றைத் தலைமை சசிகலா என்கிறீர்களா?''

''அ.தி.மு.க-வுக்கு யார் தலைவராக வர வேண்டும் என்பதையெல்லாம் கட்சிக்கு வெளியிலிருந்து நான் கருத்து சொல்ல முடியாது. அதை அ.தி.மு.க தொண்டர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால், இப்போதிருக்கும் நிலையே தொடருமானால், அ.தி.மு.க என்ற கட்சியே கரைந்துபோய்விடும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

என்னை முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக்கியவர் ஜெயலலிதா. அவர் அரும்பாடுபட்டு கட்டிக்காத்த அ.தி.மு.க, இன்றைக்கு நம் கண் எதிரிலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாவதைக் காண மனம் ஒப்பவில்லை. நாளை வேறு ஒரு கட்சி, அ.தி.மு.க மீது ஏறி சவாரி செய்யும் நிலைமை உருவாகிவிடக் கூடாது. அதை அந்தக் கட்சியின் தொண்டர்களுமே விரும்ப மாட்டார்கள்.''

கருணாஸ்

''சொந்த ஆதாயங்களுக்காக, தமிழர் நலனை விட்டுக்கொடுத்துவிட்டவர்கள் என நீங்கள் குற்றம்சாட்டக்கூடிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையின் கீழான ஆட்சியில்தானே நீங்களும் எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்துவந்தீர்கள்?''

''அதை நான் மறுக்கவேயில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளும் நான் முழுமையாக எம்.எல்.ஏ-வாகப் பணி செய்துவந்தேன்தான். எப்போதெல்லாம் அரசு தவறான முடிவுகளை எடுக்கிறதோ, அப்போதெல்லாம் என் மறுப்பை, எதிர்ப்பை சட்டமன்றத்திலேயே மிகத் தெளிவாக, உறுதியாகப் பதிவு செய்துவந்திருக்கிறேன்.

ஏனெனில், நான் ஒருவன் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவை விலக்கிக்கொள்வதாலேயே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலை அன்றைக்கு இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. எனவேதான் என்னுடைய எதிர்ப்பை அறிக்கை, பேட்டி வாயிலாகத் தெரிவித்துவந்தேன்.''


No comments:

Post a Comment