இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சூர்யாவுக்கு எதிராக ஜாதி வெறியை தூண்டி வன்னிய மக்களை அவருக்கு எதிராக நிறுத்த முயல்கிறார்கள் சனாதன சக்திகள். உண்மையில் இது பழங்குடியின மக்களின் வலிகளை சொல்லும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் பெரியாரிய,அம்பேத்கரிய,மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்னிய மக்களை திருப்பிவிட வேண்டும் என்ற பூநூல்கள் பின்புலத்திலிருந்து இயக்கும் வேலை. இதில் அன்புமணியும் தன் சுய நல அரசியலை செய்கிறார்.
சூர்யா அவர்களுக்கு, ஜெய் பீம் படத்திற்கு நாம் ஆதரவாகவும், அவருக்கு ஜாதி வெறியர்கள் விடுக்கும் மிரட்டல்களுக்கு எதிராக அவருக்கு பாதுகாப்பாகவும் நிற்க வேண்டியது நம் கடமை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உரிமையை RSS பாஜக அரசு முற்றிலுமாக பறித்தபோது - தியேட்டரை கொளுத்துவேன், சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவிக்கும் இந்த ஜாதி மக்களின் பாதுகாவலர்கள்(?) எல்லாம் எங்கு போனார்கள்? ஏன் கூட்டணி தர்மம் தடுத்ததா? இது ஒரு திரைப்படம் குறித்த சர்ச்சை அல்ல.
பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக அரசு இயந்திரங்களின் ஒடுக்குமுறை குறித்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு எதிரானதுதான் இந்த சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் ஜாதி வெறியர்களின் அறிவிப்புகள். மக்கள் ஆதரவோடு சமூக நீதி களத்தில் பெரும் முற்போக்கு மாற்றங்களை செய்துவரும் திமுக அரசிற்கும் இதன் மூலம் சிக்கலை உருவாக்குவதும் இவர்களின் நோக்கம். இவர்கள் சர்ச்சையாக்கிய அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கி விட்ட பின்பும் மீண்டும் மீண்டும் இவர்கள் இதனை ஒரு பேசு பொருளாக ஆக்கி கொண்டிருப்பது இவர்கள் உள்நோக்கத்துடன் வேறு திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்பதை நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
சூர்யா ஜாதியை மறுத்து, மதத்தை மறுத்து திருமணம் செய்தவர். கல்விக்காக அறக்கட்டளை நடத்தி வருபவர். அதன் மூலம் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவிகளை செய்து வருபவர். நீட், புதிய கல்வி கொள்கைகளின் தீமைகளை மக்களிடம் பேசியவர். இவை அனைத்தும் முழுக்க முழுக்க காவிகளிகள் மனுவிய செயல் திட்டத்திற்கு எதிரானவை. அதனால் அவர்கள் நேரம் காலம் பார்த்து காத்திருந்து ஒரு திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தி வன்னிய மக்களையும், சூர்யா அவர்களையும் அவருக்கு ஆதரவாக நிற்கும் முற்போக்கு சக்திகளையும் எதிரெதிரே நிறுத்தி கலவரத்தை உண்டு பண்ணி தமிழ்நாட்டை வன்முறைக்காடாக ஆக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.
பாஜக கூட்டணியை குளிர்விக்கவும், பாஜக அரசின் கொடுமைகளை மக்கள் கவனத்திலிருந்து திசைமாற்ற செய்யும் வேலையாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இப்போதைய சூழலில் சூர்யா அவர்களுக்கு நாம் துணை நிற்போம் இதில் நடக்கும் நூலிபான்களின் அரசியலை நாம் முதலில் அறிந்து கொள்வோம். மக்களிடம் இச்செய்திகளை கொண்டு செல்வோம். பாசிசம் எப்போதும் கருத்துரிமைக்கு எதிரானது.
காவிகளும் ஜாதி வெறியர்களும் கருத்துக்களுக்கு எதிராக வன்முறைகளைத்தான் கையில் எடுப்பார்கள்.அவர்களிடம் இருப்பது அதுதான். பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காவல்துறைக்கு அஞ்சாமல் களத்தில் நின்ற தோழர்களையே இவர்கள் எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று ஜாதி வெறியர்கள் அவர்களை, அவர்களின் உழைப்பை, செயல்பாடுகளை இழிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் ஜாதி மறுப்பாளர்கள்; அவர்கள் கம்யூனிஸ்டுகள். சனாதன சக்திகளின் சூழ்ச்சிகளையும்,சுயநல ஜாதி வெறி கும்பல்களின் சமூக விரோத பாசிச போக்கையும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். மக்களிடம் இருந்து இந்த பாசிச சக்திகளை அன்னியப்படுத்துவோம். சனாதன சக்திகளால் உரிமை பறிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலியன, பழங்குடி மக்களின் உரிமைகளைப் மீளப் பெற ஜாதி மறுக்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் கரம் கோர்த்து களம் காணுவோம். இவ்வாறு திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment