உதைப்போம் என்றார்களே.. அதை பற்றி பேசுவீங்களா? சந்தானத்திற்கு சிபிஎம் அருணன் வைத்த கேள்வி.. வைரல்!
நடிகர் சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படத்தின் பிரஸ் மீட்டில் ஜெய்பீம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எந்த படத்திலும் யாரையும் குறைவாக பேச கூடாது. ஒருமுறை உயர்த்தி பேசலாம். ஆனால் தாழ்த்த கூடாது. இந்துக்களை உயர்த்தி பேசும் வகையில் படம் எடுக்கலாம். அதற்காக கிறிஸ்துவர்களை தாழ்த்தி பேச கூடாது. அப்படி பேசுவது தேவையில்லாத ஒன்று.
மேலும் படத்திற்காக யாரையும் தாழ்த்தி பேசுவது சரியாக இருக்காது, என்று சந்தானம் குறிப்பிட்டு இருந்தார். சந்தானத்தின் இந்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. சக சினிமா நடிகருக்கு பிரச்சனையின் போது ஆதரவு அளிக்கவில்லை என்று சினிமா ரசிகர்கள் சிலர் சந்தானத்தை விமர்சித்து வருகிறார்கள். இன்னும் சிலர் சந்தானத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் கருத்துக்கு எதிராக சிபிஎம் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், "நம்மை உயர்த்திபேசுவதற்காக அடுத்தவர்களை தாழ்த்தி பேசக்கூடாது":நடிகர் சந்தானம். ஜெய்பீம் படத்தில் யாரையும் உயர்த்தவும் இல்லை,தாழ்த்தவும் இல்லை. பாேலிசில் புகுந்திருக்கும் அதிகாரத்திமிரையே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
தனது சகநடிகரை உதைப்பாேம் என்கிறார்களே அதுபற்றி இவரின் கருத்து? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு முந்தைய ட்வீட்டில் நடிகரும் தயாரிப்பாளருமான சூரியாவை அடித்தால் ரூ ஒருலட்சம் என்று ஒரு காேஷ்டி அறிவிக்கிறது, ஓடிய அவரது படத்தை தடுத்துநிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன?
சூப்பர் ஸ்டார்கள் உலகநாயகன்கள் தலைகள் தளபதிகள் எங்கே? இன்று சூரியாவுக்கு நாளை இவர்களுக்கு!, என்றும் அருணன் விமர்சனம் செய்து இருந்தார். சூர்யாவிற்கு திரையுலகின் மற்ற மூத்த நட்சத்திரங்கள் உதவி செய்யவில்லை என்று அருணன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர்.
அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த நிலையில் அருணன் சந்தானத்திற்கு விமர்சனம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment