அறிவியல் அதிசயம்: 

ஹெச்ஐவி பாதிப்பில் இருந்து சுயமாக விடுவித்துக் கொள்ளும் பெண் உடல்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு பெண் மருந்து சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி-யிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஹெச்.ஐ.வி வைரஸை அழித்ததாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

அவருடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்கள் சோதிக்கப்பட்ட போது, ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என

'இன்டர்னல் மெடிசின்' என்கிற சஞ்சிகையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஹெச்.ஐ.வி வைரஸை ஒழிப்பது

ஹெச்.ஐ.வி வைரஸை எதிர்கொள்ளும் இயற்கையான திறனோடு ஒரு சிலர் பிறக்கிறார்கள் என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகள் ஒரு சான்று. சிலருக்கு தொற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் உள்ளன.

சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது, ஆனால் அவர்களது உடலே வைரஸை அழித்துவிடுகிறது.

பொதுவாக ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் முழுவதும் ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை (ART) தேவைப்படுகிறது. அவர்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால், வைரஸ் மீண்டும் செயல்படத் தொடங்கி மீண்டும் பிரச்சனை ஏற்படுத்தும்.

சமீபத்திய ஆண்டுகளில், வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய "எலீட் கன்ட்ரோலர்கள்" பற்றிய அறிக்கைகள் உள்ளன, இவை வைரஸை கட்டுப்படுத்தும், ஹெச்.ஐ.வி மருந்து எதுவும் இல்லை.

லண்டனைச் சேர்ந்த ஆடம் கெஸ்டில்லெஜோவுக்கு புற்று நோய் இருந்தது. அவர் புற்றுநோய்க்காக ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், ஹெச்.ஐ.விக்கான மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்த முடிந்தது.

புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட செல்கள் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டன.

அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஸ்டெம் செல் கொடுத்த நன்கொடையாளர் ஹெச்.ஐ.வி வைரஸ் உடலில் நுழைவதையும், பாதித்த செல்களை அழிக்கும் உயிரணுக்களைக் கொண்ட, மொத்த உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தன்மை எத்தனை நாட்கள் ஆடமுக்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

'ஸ்டெர்லைசிங் சிகிச்சை'

மருத்துவ உலகில் 'எஸ்பெரென்சா நோயாளி' என ஒரு சொல் இருக்கிறது. இவர்களுக்கு இயற்கையாகவே ஹெச்.ஐ.வி வைரஸைக் கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவர்களுக்கு ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை தேவை இல்லை.

எஸ்பெரான்சா நோயாளிக்கு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக்கூடிய ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை.

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த லோரீன் வில்லன்பெர்க் என்பவரும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு, அவரது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலமே குணமடைந்தார். இது மற்ற நோயாளிகளுக்கு 'ஸ்டெரிலைசிங் க்யூர்' (முழுமையாக குணமடைதல்) என்கிற நம்பிக்கையை வழங்குகிறது.

"தானாகவே குணப்படுத்திக் கொள்ளும் நோயெதிர்ப்பு மண்டலம் இல்லாதவர்களுக்கு, இந்த 'ஸ்டெர்லைசிங் க்யூர்' நிலையை அடைய ஒரு செயல் திட்டப் பாதை இருக்கலாம்" என்கிறார் ராகன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மாசசூட்ஸ் பொது மருத்துவமனை, மாசசூட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஹார்வர்டின் முன்னணி ஆய்வாளர் டாக்டர் சூ யூ.

"ஏஆர்டி சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு, தடுப்பூசி மூலம், அச்சிகிச்சையின்றி வைரஸைக் கட்டுப்படுத்த அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கற்பிக்கும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்." என்கிறார் அவர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மருத்துவ ஆராய்ச்சி கோப்புப் படம்

ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் யாரேனும் உண்மையிலேயே குணமானார்களா என்று உறுதியாகச் சொல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அதை நிரூபிக்க, தற்போதுள்ள அனைத்து தொழில்நுட்பத்துடனும் அவர்கள் கேட்கக்கூடிய அளவுக்கு பலனாய்வாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஃபிரேட்டர், பிபிசி நியூஸிடம் கூறினார்.

"இதில் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த நோயாளி உண்மையிலேயே தங்களின் உடலால் குணப்படுத்திக்கொண்டாரா அல்லது ஏதேனும் ஒரு Abortive Infection எனப்படும் எதிர்மறை நோய்த்தொற்று (ஒரு வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார் ஆனால், அந்த வைரஸ் அடுத்தடுத்த வைரஸ்களை உருவாக்காது) இருந்ததா என்பதுதான்," என்று அவர் கூறினார்.

"அவருடைய நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுக்கான நினைவைத் தெளிவாகக் காட்டுகிறது, எனவே அவர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

"இவர்களைப் போலவே வெளியில் பல நோயாளிகள் இருக்கலாம், அவர்கள் ஹெச்.ஐ.வி நோயை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் நிறைய கற்றுக் கொடுக்கலாம்"

தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்கு, இது தொடர்பாக தெரிவிக்க இந்த பணி உதவும் என்றார் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஹெச்.ஐ.வி மருத்துவத்தில் நிபுணரான பேராசிரியர் சாரா ஃபிட்லர்,

தற்போதைய ஹெச்.ஐ.வி மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன, எதிர்காலத்தில் சிகிச்சையளிப்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, உயிரைக் காக்கும் ART சிகிச்சைக்கான மருந்தை உலகம் முழுக்க கிடைக்கச் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ ஃப்ரீட்மேன்.