தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன?
தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.
பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் ஒவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு மைக்கைப் பொருத்தி சோதனை செய்தார்.
மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளார். அந்த மென்பொருளின் மூலம் மனிதர்களால் கேட்கக் கூடிய ஒலியாக அந்த க்ளிக் சத்தத்தை மாற்ற முடியும்.
தனது மேசையில் அமர்ந்து லாரா வேலை செய்துகொண்டிருக்கும்போது அந்த செடியின் மைக் தொடர்ந்து ஒலிக்கும்.
"அதைத் தொடர்ந்து விநோதமாக ஒன்று நடந்தது" என்கிறார் லாரா.
அவரது அறைக்கு ஒருவர் வந்தபோது, க்ளிக் சத்தம் நின்றுவிட்டது. வந்த விருந்தினர் வெளியில் சென்றதும் மீண்டும் க்ளிக் சத்தங்கள் கேட்டன. வேறொரு முறை விருந்தினர்கள் வந்தபோதும் க்ளிக் கேட்கவில்லை. அவர்கள் கிளம்பிய பிறகு மீண்டும் சத்தம் கேட்டது. "இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை" என்கிறார் லாரா. கிட்டத்தட்ட லாராவுடன் அந்தச் செடி தனியாகப் பேச விரும்பியது போன்ற ஒரு எண்ணத்தை அந்த நிகழ்வு வழங்கியது.
செடிகளிலிருந்து வரும் க்ளிக் ஒலியை சேரிக்கும் வேலையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக லாரா செய்துவருகிறார். என்ன நடக்கிறது என்று இன்னமும் தனக்குப் புரியவில்லை என்கிறார். பெரிய செலவில்லாமல் ஒரு கருவியின்மூலம் இதை செய்திருக்கிறார். இந்த க்ளிக் சத்தம் செடியிலிருந்து இல்லாமல் மண்ணிலிருக்கும் நுண்ணியிர்களிலிருந்தும் வந்திருக்கலாம் என்பதை லாரா ஏற்றுக்கொள்கிறார்.
செடி பேசியதா, ஆட்கள் வந்தபோது அது எதிர்வினை புரிவதற்காகப் பேசாமல் இருந்ததா என்பதெல்லாம் இப்போதைக்கு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிறிய சந்தேகமே லாராவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. "நிஜமாக அப்படி நடக்கிறதா என்பதுதான் கேள்வி" என்கிறார் லாரா.
செடிகளைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்கள் அதிகம். பூக்களும் புதர்களும் தங்களுக்குள் எந்த அளவுக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன என்பதைத் தாவர ஆராய்ச்சியாளர்கள் இப்போது விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவை தகவல்களைப் பரிமாறிக்கொள்வது நிரூபிக்கப்பட்டால் அவற்றை அறிவுள்ள உயிர்களாக ஏற்க முடியுமா?
செடிகளின் நுணுக்கங்கள் பற்றியும் அவற்றின் திறன்கள் பற்றியும் அறிவியல் புதிதாக எதையாவது கண்டறிந்தபடியே இருக்கிறது. நாம் நினைத்ததை விட செடிகள் சிக்கலான அமைப்பு கொண்டவை என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனாலும் அவை மனிதர்களுடன் "பேசும்" திறன் கொண்டவை என்ற கருத்து சர்ச்சையானதுதான்.
செடி கொடிகள் மனிதர்களோடு பேசுமா?
ஆனால் செடிகளுடன் பேசுபவர்கள் இந்த சர்ச்சையை முன்வைத்து தாங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்வதில்லை.
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனிகா காக்லியானோ உள்ளிட்ட சில ஆராய்ச்சியாளர்கள், செடிகளால் பேசவும் கற்றுக்கொள்ளவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும் என்பதைக் குறிப்பிட்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அவர்களது பரிசோதனைகளைப் படித்துப் பார்த்த லாரா, தனது செடி பேசுவதைக் கேட்க விரும்பி மைக் பொருத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
ஒலி மூலமாக தகவல்களைப் பெறவும் அனுப்பவும் செடிகளுக்கு ஆற்றல் உண்டு என்று காக்லியானோ பல காலமாக சொல்லி வருகிறார். 2017ல் வெளிவந்த ஒரு ஆய்வில், வேர்கள் மூலம் அதிர்வை உணர்ந்து, பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரை செடிகள் கண்டுபிடிப்பதாகக் குறிப்பிட்டார்.
செடிகளால் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்று காக்லியானோ நம்புகிறார். அதற்குத் "தெளிவான ஆதாரம் இருக்கிறது" என்கிறார் அவர்.
2012ல் இவர் வெளியிட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை பலமுறை மேற்கோள் காட்டப்பட்டது. செடிகளின் வேர்களிலிருந்து க்ளிக் சத்தங்கள் வருவதாக காக்லியானோவின் குழு தெரிவித்தது. வேர் நுனிகளில் லேசர் வைப்ரோமீட்டரைப் பொருத்தி, அதன்மூலம் க்ளிக் ஒலி கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வகத்தில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் வைத்த வேர்களிலிருந்து இந்த சத்தம் வந்ததால், க்ளிக் ஒலி முழுக்க முழுக்க வேர்களிலிருந்தே வந்ததாகவும் உறுதியாகத் தெரிவிக்கிறார்
காக்லியானோ. இந்த சத்தங்கள் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்றனவா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதே போன்ற அதிர்வெண் உள்ள ஒலியை நோக்கி செடிகள் தங்கள் வேர்களைத் திருப்புவதாகவும் காக்லியானோ சொல்கிறார். இதன் பொருள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பரிசோதனைகளின்போது செடிகள் தன்னுடன் நேரடியான சொற்களில் பேசுகின்றன என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் காக்லியானோ.
"இது அறிவியல் உலகுக்கு அப்பாற்பட்டது" என்று அனுபவத்தை விவரிக்கும் காக்லியானோ, ஆய்வகக் கருவிகளின் மூலம் தான் கேட்ட ஒலிகளை மூன்றாவது மனிதர் ஒருவரால் அளக்க முடியாது என்று கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் செடிகள் தன்னுடன் பேசியதாக உறுதியாகக் கூறுகிறார். "நான் மட்டுமல்ல, என்னுடன் அங்கே இருந்த பலரும் இதைக் கேட்டிருக்கிறார்கள்" என்கிறார்.
இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இப்போதைய சில ஆய்வுகள் செடிகளுக்கும் சத்தங்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்துவருகின்றன. 2019ல் ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு, தேனீக்களின் சத்தம் அருகாமையில் கேட்கும்போது, தங்கள் பூக்களில் உள்ள சர்க்கரை அளவைச் செடிகள் அதிகப்படுத்துகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறது.
தேன் எடுக்கும்போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களுக்கு ஒரு பரிசாக செடிகள் இதைச் செய்யலாம். வெறுமனே தேன் குடித்துவிட்டுச் செல்லும் பூச்சிகள் அருகில் இருக்கும்போது இது நடக்கவில்லை. தேனீக்களின் சத்தமோ அல்லது அதே அதிர்வெண்ணில் உள்ள ஒலியோ வந்தால் மட்டுமே சர்க்கரை அளவு அதிகரித்தது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
வேறு வகைகளில் ஒலிக்கும் செடிகளுக்குமான தொடர்பை சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
புழுக்கள் உணவை மெல்லும் சத்தத்தைக் கேட்டுப் பழகிய செடிகள், நிஜமான புழுக்கள் அருகில் வரும்போது, தங்கள் இலைகளை சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சில வேதிப்பொருட்களை உடனே சுரக்கின்றன.
இதுபோன்ற ஆய்வுகளைப் படிப்பவர்கள், குறிப்பிட்ட சில சத்தங்களை வைத்து செடிகளைப் பழக்க முடியுமா என்றும் ஆராய்கிறார்கள். சீனாவைச் சேர்ந்த க்வின்டாவ் விவசாயப் பொறியியல் ஆராய்ச்சி மையம், செடிகளுக்கு ஒலிகளைப் பரப்பும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், உரத்தின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
செடிகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தவும் சத்தங்கள் உதவலாம். போர்னியோவைச் சேர்ந்த ஊன் உண்ணித் தாவரமான நெபந்தஸ் ஹெம்ஸ்லெயானாவின் உட்சுவர், வௌவால்களின் மீயொலியைப் பிரதிபலிக்கிறது. இதனால் ஈர்க்கப்படும் வௌவால்கள் அந்தத் தாவரத்துக்கு அருகில் வந்து தங்கள் எச்சங்களால் உரமிடுகின்றன. 2016ல் செடிகளுக்கும் வௌவால்களுக்கும் இடையே உள்ள உறவை ஓர் ஆய்வு அலசியது. அதில், வௌவால்களின் எச்சம் தேவையில்லாத வேறொரு நெப்பந்தஸ் செடியில் இந்த ஒலி பிரதிபலிப்பு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தேனீக்களுக்கும் பூக்களுக்கும் காதலா?
இந்த ஆய்வுகள் எல்லாமே, செடிகளுக்கு ஒலிகள் முக்கியம் என்பதைத்தான் தெரிவிக்கின்றன. ஆனால் ஒலியை செடிகள் எப்படி உள்வாங்குகின்றன என்பது இன்னும் தெரியவில்லை. ஒலிக்கான எதிர்வினை தருவதாக அவை மரபணுரீதியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு பக்கம் என்றால், ஒலியைக் கேட்டு அதன்பிறகு அவை முடிவெடுக்கின்றன என்பதும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. பலரும் இதுபோன்ற ஆற்றல் விலங்குகளுக்குத்தான் உண்டு என்று சொல்கிறார்கள்.
தாவரங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டா?
ஜெர்மனியின் ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ராபின்சன் இதுபோன்ற தகவல்களை மறுக்கிறார். செடிகளுக்கு அறிவு உண்டு, நம்மைப் போலவே அவை பேசுகின்றன என்பது போன்றவற்றை அவர் ஏற்கவில்லை. ஒலிகளால் செடிகள் பாதிக்கப்படுவது உண்மைதான் என்றாலும் அதற்கும் சிந்தனைக்கும் சம்பந்தமில்லை என்கிறார் இவர்.
ஒரு தகவலை மின்சார சமிக்ஞையாக மாற்றி மூளைக்குக் கொண்டுபோகும் நியூரான்கள் செடிகளுக்குக் கிடையாது. அதாவது, யோசிப்பதற்கான செல்கள் செடிகளில் இல்லை என்கிறார் ராபின்சன். ஆனால், வேதிப்பொருட்கள்மூலம் செடிகள் தகவல்களைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
செடிகள் கற்றுக்கொள்கின்றன என்பதும் விவாதிக்கப்படுகிறது. செடிகள் கற்றுக்கொள்வது பற்றிய காக்லியானோவின் ஆய்வை ஒருவர் மீண்டும் செய்துபார்த்தபோது, அதே முடிவுகள் வரவில்லை. இதற்கு மறுமொழி அளித்த காக்லியானோவின் குழு, சோதனையின் செயல்முறை மாறியதால் முடிவும் மாறியிருக்கும் என்று தெரிவித்தது.
செடிகளால் நம்மை வியப்பிலாழ்த்த முடியும் என்பதை ராபின்சன் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவை நம்மைப் போலவே பேசும் என்றோ, நாம் அவற்றுடன் பேசலாம் என்றோ அவர் நம்பவில்லை.
"செடிகளை மனிதர்களாக பாவித்து அவற்றை நம்மைப் போல ஆக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். சிலர் செடிகளுக்குப் புலனுணர்வு இருக்கிறது என்கிறார்கள், சிலர் இல்லை என்கிறார்கள், இவர்கள் சண்டையிடுகிறார்கள்" என்கிறார் அவர்.
ஆனால் இவர்கள் சரிபாதியாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல ஆராய்ச்சியாளர்கள் இதில் பல நிலைப்பாடுகள் எடுக்கிறார்கள். மனிதர்களைப் போலப் பேசவேண்டுமானால் செடிகளுக்கு அறிவு இருந்தால்தான் சாத்தியம் என்று ராபின்சனைப் போலவே பலர் நினைக்கிறார்கள்.
எடின்பரோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியரான டோனி ட்ரெவாவாஸ் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். "ஒரு வகையில் பார்த்தால், வெளியிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்கு செடிகள் சரியாக எதிர்வினை தருகின்றன. அது அவை உயிர்வாழ உதவுகிறது. அப்படியானால் அதுவும் அறிவுதானே? ஒரு சிங்கத்திடமிருந்து தப்பியோடும் வரிக்குதிரையோடு இதை ஒப்பிடலாம். இதை அறிவு என்று ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கும். ஒரு செடி, தன் இலைகளைக் கொல்வதால் புழு முட்டை ஒன்று குஞ்சு பொரிப்பதையே தடுக்கிறது. அதை நாம் ஓரளவு ஏற்றுக்கொள்வோம்" என்கிறார்.
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் உதவியோடு, எங்கே சத்துக்கள் இருக்கின்றன என்று செடிகள் கண்டுபிடிக்கின்றன், இது ஒரு தகவல் பரிமாற்றம் என்கிறார் ட்ரெவாவாஸ்.
"எல்லா உயிரும் அறிவுள்ளவைதான். அறிவு இல்லையென்றால் ஓர் உயிரால் இங்கு பிழைக்கவே முடியாது" என்கிறார் அவர்.
இது யோசிக்க வைக்கிறது.
பிழைத்திருப்பது என்பது அறிவுக்கானஆதாரமா?
எப்படி இருந்தாலும் செடிகளிடம் எப்படிப் பேசுவது, அவை பேசுவதை எப்படிக் கேட்பது போன்ற கேள்விகள் இன்னும் இருக்கின்றன.
சில ஒலிகளுக்கு செடிகள் எதிர்வினை ஆற்றுகின்றன. சில உயிர்களோடு அவை வேதிப்பொருட்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. ஆனாலும் அதை ஒரு உரையாடல் என்று பலர் ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சில விலங்குகளின் தகவல் பரிமாற்றத்தோடு இதை ஒப்பிடுவதற்குக் கூட யாரும் தயாரில்லை.
செடிகள் பேசும் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும், அதை நம்ப முடியவில்லை என்கிறார் லாரா.
"தங்களால் செடிகளுடன் பேச முடியும் என்று பலர் சொல்கிறார்கள். தர்க்க ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்கிறார்.
ஒருவேளை ஒரு பைன் மரத்துடனோ தாலியா செடியுடனோ பேச முடிந்தால் நாம் என்ன பேசுவோம் என்பதும் ஒரு கேள்வி.
"செடிகளும் நம்முடன் பேச விரும்புகின்றவோ என்னவோ. யாருக்குத் தெரியும்?" என்கிறார் லாரா.
No comments:
Post a Comment