தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி முழுமையாக மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அவர்களால் முறையான ஆட்சியை அமைக்க முடியவில்லை! ஈரான் பாணியில் எங்கள் ஆட்சி இருக்கும் என்று கூறி ஆட்சி அமைக்க நாள் குறித்தவர்கள், தற்போது இரண்டாவது முறையாக தேதியை ஒத்திவைத்துள்ளனர். தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹூல்லா முஜாஹித், ``புதிய அரசு, அமைச்சரவை அமைப்பதற்கான அறிவிப்பு மேலும் ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும்" என குழப்பத்துடனே பதிலளித்துள்ளனர். ஏன் தாலிபன்களுக்கு இத்தனை குழப்பம், ஆட்சி அமைப்பதில் அப்படி என்ன சிக்கல், தயக்கம்?
ஒருவாரத்தில் அசுரவேகத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்களால், மூன்று வாரங்களாகியும் ஆட்சியமைக்க முடியாமல் திணறுவதற்கு, இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பஞ்ச்ஷீர் படைகளுடன் நீடித்த யுத்தம், மற்றொன்று ஹக்கானி குழுவுடன் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடு.
யார் இந்த பஞ்ச்ஷீர் படையினர்...
தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பின்னும், ஏன் இன்னும் யுத்தம் நீடிக்கிறது?
தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானில் இருக்கும் 33 மாகாணங்கள் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. ஆனால், ஒரேயொரு மாகாணம் மட்டும் தாலிபன்களுக்கு அடங்கமறுத்து, தாலிபன்களின் அதிகாரத்தை ஏற்கமறுத்து, அடிபணியாமல் போராடியது. அது, இந்து குஷ் மலைத்தொடருக்கு அருகில் இருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணம். எனினும் 6-ம் தேதி அந்த மாகாணத்தையும் கைபற்றிவிட்டதாக தாலிபன்கள் அறிவித்தனர். எனினும் எதிர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வரவில்லை.
தஜீக் இன மக்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் இந்த மாகாண மக்கள் எப்போதுமே தாலிபன்கள் ஆதிக்கத்தை தங்களின் பகுதிக்குள் அனுமதித்ததில்லை. 1996-ல் தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியபோதும் இதே நிலைதான் அன்றும் இருந்தது. காரணம், அஹமத் ஷா மசூத்!
அஹமத் ஷா மசூத்
1980-களில் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப்படையை எதிர்த்து, அஹமத் ஷா மசூத் என்பர் ஒரு கெரில்லா படையை கட்டமைத்தார். ரஷ்யா வெளியேறிய பிறகு, தாலிபன்களின் பழமைவாதத்தை ஏற்காத அஹமத் ஷா மசூத், தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். 1996-ல் ஆப்கனில் தாலிபன்களின் முதல் ஆட்சி ஏற்பட்டபோது, அதற்கெதிராக பஞ்ச்ஷீர் மக்களை ஒன்றிணைத்து `வடக்கு கூட்டணி' (Northern Alliance) எனும் படையை உருவாக்கினார். பின்னர், 2001-ல் அல்-கொய்தாவால் மசூத் கொல்லப்பட்டார். அதன் பின்னும் பஞ்ச்ஷீர் படை உயிர்ப்புடன் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் தொடர்ந்து தாலிபன்களை எதிர்த்து களமாடியது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் இரண்டாவது முறையாக தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும், தாலிபன்களிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள எண்ணி ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே உட்பட பல்வேறு ஆப்கான் மக்கள் தஞ்சம் புகுந்ததும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தான். தற்போது, அஹமத் ஷா மசூத்தின் மகனான அகமது மசூத் தலைமையில் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan) எனும் பெயரில் பஞ்ச்ஷீர் படை போராடியது.
இந்நிலையில், தாலிபன்கள் எப்படியாவது பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்றி, `தங்களின் முழுமையான வெற்றியை உலகுக்கு அறிவிக்கவேண்டும், தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் ஆப்கனின் அனைத்து பகுதிகளையும் கொண்டுவந்து ஒரு முழுமையான ஆட்சியை அமைக்க வேண்டும்' என்ற கனவில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பஞ்ச்ஷீர் மாகாணமோ தாலிபன்கள் எதிர்பார்த்த அளவுக்கு விரைவில் வீழவில்லை. தொடர்ந்து துப்பாக்கியாலே பதில் சொல்கின்றனர். பஞ்ச்ஷீரையும் தாலிபன்கள் கைபற்றிவிட்டதாக அறிவித்துவிட்டாலும், எதிர்தரப்பு இன்னும் அதனை உறுதி செய்யவில்லை.
தாலிபன்கள் ``நாங்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தை தாக்கி, தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டோம்" என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், மசூத் படை தரப்பில்,
``தாலிபன்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். பஞ்ச்ஷீரின் எல்லைப் பகுதிகளிலேயே தலிபான்கள் தடுக்கப்பட்டு விட்டனர். இந்த சண்டையில் 700 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 600-க்கும் மேற்பட்ட தலிபான்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ளோம்."
பஞ்ச்ஷீர் படை
என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில், இவர்கள் இருதரப்பின் வாதமும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பஞ்ச்ஷீர் படையினர் அடிபணியாமல் இருப்பது, தாலிபன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து, ஆப்கனில் அவர்களின் முழுமையான ஆட்சி ஏற்படாமலிருக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது.
யார் இந்த ஹக்கானி குழுவினர்... அவர்களுடன் தாலிபன்களுக்கு என்ன முரண்பாடு?
ஆப்கானிஸ்தான் அரசுப்படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில், தாலிபன்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைப்புதான் `ஹக்கானி நெட்வொர்க்ஸ்'. தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றும்போரில் முக்கியப்பங்காற்றியவர்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தாலிபன் தலைவர்கள்
1980-களில் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப் படையெடுப்பை எதிர்த்து உருவான பல்வேறு இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் ஒன்றாக, ஜலாலுதீன் ஹக்கானி என்பவரால் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் இந்த அமைப்புகளுக்கு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலம் வழங்கிய நிதி, ஆயுத உதவிகள் அனைத்தும் ஹக்கானி குழுவின் மூலமாகவே இதர ஆயுதக்குழுக்களுக்கும் சப்ளை செய்யப்பட்டது. இதன்மூலம், ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா உள்ளிட்ட மற்ற தீவிரவாத குழுக்களுடன், ஹக்கானிக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.
போரை தாக்குப்பிடிக்க முடியாமல் 1989-ல் ரஷ்யப்படைகள் பின்வாங்கியதும், 1992-ல் ஆப்கானிஸ்தானின் ஆட்சி முஜாகிதீன் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர், 1994-ல் முஜாகிதீன்களிடமிருந்து விலகி புதிதாக உருவான தாலிபன்கள் அமைப்பு, 1996-ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியை முதன்முறையாக கைப்பற்றியது. அப்போதே, தாலிபன்கள் ஆட்சிக்கு ஜலாலுதீன் ஹக்கானியின், ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழு முழு ஆதரவு கொடுத்தது. தாலிபன்கள் அரசில் ஜலாலுதீன் ஹக்கானி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சிராஜுதீன் ஹக்கானி
இரட்டைக்கோபுர தாக்குதலையடுத்து, 2001-ல் அமெரிக்காவால் தாலிபன்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, 2004-ல் ஹமீது கர்சாய் தலைமையில் புதிய அரசு ஆப்கனில் அமைந்தது. அதிலிருந்து, ஆப்கனில் கால்பதித்திருந்த அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல், இந்தியா போன்ற வெளிநாட்டு தூதரகங்கள் மீதான தாக்குதல், அதிபர் ஹமீது கர்சாய் மீதான தாக்குதல் என தாலிபன்கள் நடத்தும் அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பக்கபலமாக துணைநின்றது, ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழு. இதன்காரணமாகவே, 2018-ல் ஜலாலுதீன் ஹக்கானி மரணமடைந்தபோது, தாலிபன்கள் அவரது மகன் சிராஜுதீன் ஹக்கானியை தாலிபன்களின் துணைத்தலைவராக உயர்த்தினர்.
1996-ல் தாலிபன்களுக்கு ஆதரவாக தந்தை ஜலாலுதீன் ஹக்கானி நின்றதுபோல், கடந்தமாதம் நடைபெற்ற ஆப்கனைக் கைப்பற்றும் இறுதிப்போரில், மகன் சிராஜுதீன் ஹக்கானி, தாலிபன்களின் ரத்தமும் சதையுமாக களத்தில் நின்று வெற்றிக்கு உதவினார். ஆகஸ்ட் 15-ல் காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய பின், ஆப்கானிஸ்தானின் முழு பாதுகாப்பு பொறுப்பையும் ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழுவிடமே ஒப்படைத்தனர்.
இப்படி எதிரியை நோக்கி சண்டியிடும்போது ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று, ஓரணியாக போராடியவர்கள் தான் தற்போது ஆட்சி அமைக்கும் முறையில் முரண்பட்டு நிற்கின்றனர்.
அதாவது, தாலிபன்களின் அரசியல்குழுத் தலைவரும், வரவிருக்கும் ஆப்கன் ஆட்சியின் புதிய அதிபராகவும் எதிர்பார்க்கப்படும் முல்லா அப்துல் கானி பராதரும், முல்லா உமரின் மகனும் தாலிபன் தளபதியுமான முல்லா முகமது யாகூப்பும்
``உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், ஆப்கனின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு அரசை எற்படுத்தவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் அனைத்து இனக்குழுவினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் உலகம் நம் அரசாங்கத்தை அங்கீகரிக்கும்!"
என்ற கருத்தில் முடிவாக இருக்கின்றனர்.
முல்லா அப்துல் கானி பராதர்
ஆனால், தாலிபன்களின் துணைத்தலைவரும், ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழுவின் தலைவருமான சிராஜுதீன் ஹக்கானியும் அவரது சகோதரர் அனஸ் ஹக்கானியும்,
``பெரும்பான்மையாக இருக்கும் சன்னி பஷ்தூன்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய ஒரு தூய அரசாங்கம்தான், ஆப்கனின் அமையவேண்டும்! அதிகாரத்தை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது"
என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால் ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இழுபறி நீடித்துள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைக்கும் முறை, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றுவது, தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை ஏற்பது போன்றவற்றில் இருதரப்புக்குமான கருத்துமுரண்பாடு முற்றியதில் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்திருக்கிறது. அனஸ் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பராதரை துப்பாக்கியால் சுட்டதாகவும், பலத்த காயம் ஏற்பட்ட கானி பராதர் சிகிச்சைக்காக பாகிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் சமாதானம் ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் ஹமீது ஃபயஸ் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார்.
தாலிபன்களுக்குள் நடக்கும் சண்டையைத் தீர்த்துவைக்க, வெளியிலிருந்து, அதாவது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஏன் வரவேண்டும், என்ன தேவை இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஏனெனில், ஹக்கானி நெட்வொர்க்ஸ் உருவானது முதல் அந்த அமைப்புக்கு பொருளாதரம், ஆயுதம், அடைக்கலம் என அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தான்!
இன்றைக்கும், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் ஏராளமான ஹக்கானி நெட்வொர்க் அமைப்பின் பயற்சி முகாம்கள் உள்ளன. பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைப்பதற்கு ஆரம்பம் முதலே முழு ஆதரவு வழங்கி வரும்நாடு பாகிஸ்தான். இதற்கு, மதம், இனம், அரசியல், ஆதிக்கம், எல்லைப்பகுதி என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
பாகிஸ்தானின் பின்புலத்தில் இயங்கும் ஹக்கானி குழு, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றால் அது எல்லாவகையிலும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் தாலிபன்கள், ஹக்கானி தரப்பிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் அதேசமயம் பஞ்ச்ஷீர் படையின் தலைவர் அகமது மசூத், ``தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்" என அறிவித்திருக்கிறார்.
ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவை வழி அனுப்பி வைத்த தாலிபன்களால் தங்களுக்குள் நடக்கும் சகோதர சண்டையை தீர்க்க வழியின்றி, ஆட்சியமைக்க முடியாமல் திணரிவருவதுதான் காலத்தின் கோலம். பஞ்சாயத்திற்கு சென்றிருக்கும் பாகிஸ்தானால் பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
No comments:
Post a Comment