Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Saturday, October 2, 2021

விக்ராந்த் போர்க் கப்பலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் - மிரட்டிய ஆப்கான் இளைஞன்

இந்தியாவின் கம்பீரம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் `ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம்தாங்கி போர்க்கப்பல், கேரள மாநிலம் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் முழுவீச்சில் தயாராகிவருகிறது. விரைவில் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்படவிருக்கும் அந்தப் போர்க்கப்பலை மையம்கொண்டு எழுந்துள்ள சில சர்ச்சைகளின் பின்னணியில் அந்நிய நாட்டுச் சதி இருக்கிறதோ என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது என்.ஐ.ஏ. அதிலும், சமீபத்தில் தனது அடையாளத்தை மறைத்து இங்கே பணிபுரிந்த ஆப்கன் இளைஞரின் பாகிஸ்தான் தொடர்புகள், அவருடன் வந்த மற்றோர் இளைஞர் தலைமறைவு இவையெல்லாம் அந்தச் சந்தேகத்தை வலுப்பெறச் செய்துள்ளன.

ஈத் குல்

பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை, `ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்று பெயரிட்டு 1961-ல் கடற்படையில் சேர்த்தது இந்தியா. இதுதான் இந்தியாவின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பல். 1971 பாகிஸ்தான் யுத்தத்தில் முக்கியப் பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த், 1997-ல் ஓய்வுபெற்றது. அந்த ஐஎன்எஸ் விக்ராந்த் பெயரிலேயே 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்ட புதிய விமானம்தாங்கி போர்க்கப்பலை இந்தியா தயாரித்துவருகிறது. 

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பலும் இதுதான். ஐஎன்எஸ் விக்ராந்த், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக்கடலில் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. அடுத்தகட்டமாக கப்பலின் ஓடுதளத்தில் போர் விமானங்களை இறக்கிப் பறக்கவிடும் சோதனைக்குத் தயாராகி வருகிறது இந்தக் கப்பல்.

ஒரே சமயத்தில் 30 போர் விமானங்களைக் கையாளும்விதமாக, இரண்டு ரன்வேக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 28 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பலில், விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதி, விமானத்தின் பழுது சீரமைக்கும் பகுதி, மின் உற்பத்தி நிலையம் ஆகிய வசதிகள் உள்ளன. 

கடந்த 2009-ம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தப் போர்க்கப்பலின் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்ற பிறகு, 2013-ம் ஆண்டு கடலில் இறக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட மெருகூட்டும் பணிகள் நடந்துவருகின்றன. வரும் 2022 சுதந்திர தின விழாவின்போது இந்தக் கப்பல் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தநிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கப்பலைச் சுற்றி சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன.

அந்தச் சம்பவங்களை நம்மிடம் வரிசையாக விவரித்தார்கள் போலீஸ் உயரதிகாரிகள் சிலர்... “2019-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பத்து ஹார்டு டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்சஸ் மெமரி, ப்ராசஸர் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோயின. அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் கப்பலின் வரைபடம், ஆயுதங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட ரகசிய விவரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அடுத்ததாக, இந்தக் கப்பல் கட்டப்பட்டுவரும் கொச்சி ஷிப் யார்டில் போலி அடையாள அட்டை கொடுத்து வேலைசெய்த ஆப்கனைச் சேர்ந்த ஈத் குல் என்ற 22 வயது இளைஞர், கடந்த ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார். மூன்றாவது சம்பவமாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ‘ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை வெடிகுண்டுவைத்து தகர்ப்போம்’ என்று ஐந்து அதிகாரிகளுக்கு இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இது பற்றி எர்ணாகுளம் சவுத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. மேற்கண்ட விவகாரம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நடத்திவரும் விசாரணையில் தற்போது பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன” என்றவர்கள் அது பற்றியும் விவரித்தார்கள்.

“கைதுசெய்யப்பட்ட ஈத் குல்லின் தந்தை ஆப்கனைச் சேர்ந்தவர். தாய் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஆப்கனிலிருந்து ஈத் குல்லுடன் முஜாஹித் அகமது என்பவரும் டெல்லிக்கு வந்திருக்கிறார். நோயாளியான முஜாஹித் அகமதுக்கு சிகிச்சையின்போது உதவியாளராக இருப்பதாகக் கூறியே ஈத் குல் விசா பெற்றிருக்கிறார். ஆனால், விசா காலம் முடிந்த பிறகு, அப்பாஸ் கான் என்று தனது பெயரை மாற்றி, அஸ்ஸாம் முகவரியில் போலி அடையாள அட்டை தயாரித்து, 2018-ம் ஆண்டு முதல் கொச்சி ஷிப் யார்டில் வேலைசெய்திருக்கிறார். இவர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் சக தொழிலாளிகள் இடையே கசியவே, அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பலத்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் அவரை கொல்கத்தாவில் வைத்து கைதுசெய்தனர். ஈத் குல்லுடன் டெல்லிக்கு வந்த முஜாஹித் அகமது அப்போதே தலைமறைவாகிவிட்டார். 

ஈத் குல் பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்திருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் அந்நிய நாட்டுச் சதி இருக்கிறதா என்று என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. மேலும், கப்பல் பயன்பாட்டுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டதால் இந்த விவகாரத்தை சீரியஸாகக் கையாண்டுவருகிறது என்.ஐ.ஏ. அதையொட்டி சமீபத்தில் கப்பலின் ஒவ்வோர் அங்குலமும் பாம் ஸ்குவாட், டாக் ஸ்குவாட் மூலம் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பும் பல மடங்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்!

நாட்டின் கம்பீரம் காக்கப்படவேண்டியது அவசியம்!

Thursday, September 9, 2021

சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் புனிதமான பொருளா..?


கடந்த மாதத்தில் ஒருநாள் பாகிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களைக் கொண்ட பெட்டிகளை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவும் சீனாவும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெளிநாட்டுப் பழங்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இந்தச் செய்தியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டது.

பழங்கள் வேண்டாம் என்று கூறிய நாடுகளில் கனடா, நேபாளம், இலங்கை உள்ளிட்டவையும் அடக்கம். மொத்தம் 32 நாடுகளுக்கு பழங்களை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலான நாடுகள் அவற்றை ஏற்பதற்குத் தயக்கம் காட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இது ஏதோ வர்த்தக நடவடிக்கை என்றோ, வணிகத்துக்காக அனுப்பப்பட்ட பழங்கள் திருப்பியனுப்பப்பட்டன என்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த மாம்பழங்கள் பாகிஸ்தானின் ராஜீய உறவின் அடையாளமாக வழங்கப்பட்டவை. இப்போது பல நாடுகளால் மறுக்கப்பட்ட மாம்பழங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு வரலாற்றையே எழுதியிருக்கின்றன.

சீனாவில் உள்நாட்டுப் போர் முடிந்து மாவோ சே துங் ஆட்சியில் இருந்த காலம். முன்னோக்கிய பெரும் பாய்ச்சல், பெரும் பஞ்சம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சீனாவில் சிந்தனைகளை ஒன்று திரட்டுவதற்காகவும், ஆட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்காகவும் 1966-ஆம் ஆண்டில் மாவோவால் பண்பாட்டுப் புரட்சி கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது.

ஸ்டூடன்ட்ஸ் ரெட் கார்ட்ஸ் எனப்படும் மாணவர் செம்படையை இதற்காக மாவோ உருவாக்கினார். ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவு. ஆனால் அவர்களே மாவோவுக்குச் சிக்கலாக மாறினார்கள் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மாணவர் செம்படைக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டன. அதிகாரப் போட்டியால் குழப்பம் உருவானது. மாணவர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் என அனைத்தும் பிரிந்து நின்றன. இந்தச் சண்டையை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வெறொரு வழியைத் தேட வேண்டிய நிலை மாவோவுக்கு ஏற்பட்டது.

அவர்களை ஒடுக்குவதற்காக கிங்ஹுவை பல்கலைக்கழகத்துக்கு சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்பினார். அவர்களிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. சிறு சிவப்புப் புத்தகத்தையும் தாயத்தையும் மட்டுமே கொண்டு சென்றனர். அவர்களை மாணவர்கள் கடுமையாகத் தாக்கினர். பல்கலைக்கழகத்தில் இருந்தை அமிலத்தை வீசினர். அதில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நீண்ட மோதலுக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் சமரசமாகி சரணடைந்தனர்.

இந்த அரிய பணியை செய்து முடித்ததற்காக தொழிலாளர்களுக்கு மாவோ சே துங் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
மாம்பழங்கள்..!

அதற்கு முந்தைய நாள் வரை மாவோவுக்கு 'மாம்பழம்' என்றால் என்னவென்றே தெரியாது. பிறகு ஏன் மாம்பழத்தைக் கொடுத்தார் என்று கேட்கிறீர்களா?

அவை பாகிஸ்தானின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக சீனாவுக்கு வந்து சேர்ந்தவை. முந்தைய நாளில்தான் அப்போது பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஷத் ஹுசைனில் மாவோவுக்கு அவை பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

"அந்த காலகட்டத்தில் வடக்கு சீனாவில் மாம்பழங்களைப் பற்றி யாருக்குமே தெரியாது. அதனால் மாவோ கொடுத்த பழங்களை சாப்பிடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். முகர்ந்து பார்த்தனர். தடவிக் கொடுத்தனர். இது என்ன மந்திரப் பழம் என்று வியந்து கொண்டிருந்தனர்," என்கிறார் அறிவியலாளர் ஃபிரெட் முர்க்.

அந்த நேரத்தில் தலைமைப் பொறுப்புகள் மாணவர் அமைப்புகளிடம் இருந்து தொழிலாளர் அமைப்புகளிடம் மாற்றப்பட வேண்டும் என்றும் மாவோ உத்தரவிட்டிருந்தார். அது ஒரு வழியாக கலகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. மாம்பழங்கள் மாவோவுடன் நெருங்கிய தொடர்புடையவையாக மாறின.

மக்கள் அதை வணக்கத்துக்குரியதாக கருதத் தொடங்கினார்கள். ஒரு வகையில் பண்பாட்டுப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பழம் என்ற பெருமையும் மாம்பழத்துக்குக் கிடைத்தது. அதற்கு புனிதத் தன்மை வழங்கப்பட்டது.

மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மாம்பழங்கள்

மாவோ கொடுத்த சில மாம்பழங்கள் அழுகத் தொடங்கியபோது, அவற்றை அறுத்து நீரில் போட்டு, அதைப் புனித நீராகக் கருதத் தொடங்கினர். ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கரண்டி அளவு நீரைக் குடித்து மகிழ்ந்தனர். மாம்பழங்கள் செய்தித்தாள்களை ஆக்கிரமித்தன. சுவரொட்டிகளில் இடம்பிடித்தன.

புனிதப் பழமாகக் கருதப்பட்ட மாம்பழம் ஒரு கட்டத்தில், மாவோவிடம் இருந்து வந்த பரிசு என்பதையும் தாண்டி, மாம்பழமே மாவோதான் என்ற அளவுக்கு அதன் பெருமை உச்சத்துக்குச் சென்றது. மாவோவையும் மாம்பழத்தையும் புகழ்ந்து பாடல்களும் பாடப்பட்டன.

அதன் பிறகு 1976-ஆம் ஆண்டு மாவோ இறக்கும்வரை அவரது புகழ் சீனா முழுவதும் பரவியிருந்தது. அதன் பிறகு மாம்பழம் மீதான புனிதத் தன்மையும் குறைந்து விட்டது.

இப்போது பெய்ஜிங்கின் எல்லா பழக்கடைகளிலும் மாம்பழங்கள் கிடைக்கும். அது சீனர்களின் உணவுப் பொருள் பட்டியலில் அங்கமாகி விட்டது. ஆனாலும் சீனாவின் வரலாற்றில் அதற்கு நிரந்தர இடம் உண்டு.

Tuesday, September 7, 2021

தாலிபன்கள் ஆட்சி அமைக்க திணறுவது ஏன்..?


தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி முழுமையாக மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அவர்களால் முறையான ஆட்சியை அமைக்க முடியவில்லை! ஈரான் பாணியில் எங்கள் ஆட்சி இருக்கும் என்று கூறி ஆட்சி அமைக்க நாள் குறித்தவர்கள், தற்போது இரண்டாவது முறையாக தேதியை ஒத்திவைத்துள்ளனர். தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹூல்லா முஜாஹித், ``புதிய அரசு, அமைச்சரவை அமைப்பதற்கான அறிவிப்பு மேலும் ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும்" என குழப்பத்துடனே பதிலளித்துள்ளனர். ஏன் தாலிபன்களுக்கு இத்தனை குழப்பம், ஆட்சி அமைப்பதில் அப்படி என்ன சிக்கல், தயக்கம்?

ஒருவாரத்தில் அசுரவேகத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்களால், மூன்று வாரங்களாகியும் ஆட்சியமைக்க முடியாமல் திணறுவதற்கு, இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பஞ்ச்ஷீர் படைகளுடன் நீடித்த யுத்தம், மற்றொன்று ஹக்கானி குழுவுடன் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடு.

யார் இந்த பஞ்ச்ஷீர் படையினர்...

தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பின்னும், ஏன் இன்னும் யுத்தம் நீடிக்கிறது?
தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானில் இருக்கும் 33 மாகாணங்கள் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. ஆனால், ஒரேயொரு மாகாணம் மட்டும் தாலிபன்களுக்கு அடங்கமறுத்து, தாலிபன்களின் அதிகாரத்தை ஏற்கமறுத்து, அடிபணியாமல் போராடியது. அது, இந்து குஷ் மலைத்தொடருக்கு அருகில் இருக்கும் பஞ்ச்ஷீர் மாகாணம். எனினும் 6-ம் தேதி அந்த மாகாணத்தையும் கைபற்றிவிட்டதாக தாலிபன்கள் அறிவித்தனர். எனினும் எதிர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வரவில்லை.

தஜீக் இன மக்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் இந்த மாகாண மக்கள் எப்போதுமே தாலிபன்கள் ஆதிக்கத்தை தங்களின் பகுதிக்குள் அனுமதித்ததில்லை. 1996-ல் தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியபோதும் இதே நிலைதான் அன்றும் இருந்தது. காரணம், அஹமத் ஷா மசூத்!

அஹமத் ஷா மசூத்

1980-களில் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப்படையை எதிர்த்து, அஹமத் ஷா மசூத் என்பர் ஒரு கெரில்லா படையை கட்டமைத்தார். ரஷ்யா வெளியேறிய பிறகு, தாலிபன்களின் பழமைவாதத்தை ஏற்காத அஹமத் ஷா மசூத், தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். 1996-ல் ஆப்கனில் தாலிபன்களின் முதல் ஆட்சி ஏற்பட்டபோது, அதற்கெதிராக பஞ்ச்ஷீர் மக்களை ஒன்றிணைத்து `வடக்கு கூட்டணி' (Northern Alliance) எனும் படையை உருவாக்கினார். பின்னர், 2001-ல் அல்-கொய்தாவால் மசூத் கொல்லப்பட்டார். அதன் பின்னும் பஞ்ச்ஷீர் படை உயிர்ப்புடன் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் தொடர்ந்து தாலிபன்களை எதிர்த்து களமாடியது.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் இரண்டாவது முறையாக தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும், தாலிபன்களிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள எண்ணி ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே உட்பட பல்வேறு ஆப்கான் மக்கள் தஞ்சம் புகுந்ததும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தான். தற்போது, அஹமத் ஷா மசூத்தின் மகனான அகமது மசூத் தலைமையில் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan) எனும் பெயரில் பஞ்ச்ஷீர் படை போராடியது.
இந்நிலையில், தாலிபன்கள் எப்படியாவது பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்றி, `தங்களின் முழுமையான வெற்றியை உலகுக்கு அறிவிக்கவேண்டும், தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் ஆப்கனின் அனைத்து பகுதிகளையும் கொண்டுவந்து ஒரு முழுமையான ஆட்சியை அமைக்க வேண்டும்' என்ற கனவில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பஞ்ச்ஷீர் மாகாணமோ தாலிபன்கள் எதிர்பார்த்த அளவுக்கு விரைவில் வீழவில்லை. தொடர்ந்து துப்பாக்கியாலே பதில் சொல்கின்றனர். பஞ்ச்ஷீரையும் தாலிபன்கள் கைபற்றிவிட்டதாக அறிவித்துவிட்டாலும், எதிர்தரப்பு இன்னும் அதனை உறுதி செய்யவில்லை.

தாலிபன்கள் ``நாங்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தை தாக்கி, தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டோம்" என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், மசூத் படை தரப்பில்,
``தாலிபன்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். பஞ்ச்ஷீரின் எல்லைப் பகுதிகளிலேயே தலிபான்கள் தடுக்கப்பட்டு விட்டனர். இந்த சண்டையில் 700 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 600-க்கும் மேற்பட்ட தலிபான்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ளோம்."
பஞ்ச்ஷீர் படை
என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில், இவர்கள் இருதரப்பின் வாதமும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பஞ்ச்ஷீர் படையினர் அடிபணியாமல் இருப்பது, தாலிபன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து, ஆப்கனில் அவர்களின் முழுமையான ஆட்சி ஏற்படாமலிருக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது.
யார் இந்த ஹக்கானி குழுவினர்... அவர்களுடன் தாலிபன்களுக்கு என்ன முரண்பாடு?

ஆப்கானிஸ்தான் அரசுப்படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில், தாலிபன்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைப்புதான் `ஹக்கானி நெட்வொர்க்ஸ்'. தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றும்போரில் முக்கியப்பங்காற்றியவர்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தாலிபன் தலைவர்கள்
1980-களில் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப் படையெடுப்பை எதிர்த்து உருவான பல்வேறு இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் ஒன்றாக, ஜலாலுதீன் ஹக்கானி என்பவரால் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் இந்த அமைப்புகளுக்கு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலம் வழங்கிய நிதி, ஆயுத உதவிகள் அனைத்தும் ஹக்கானி குழுவின் மூலமாகவே இதர ஆயுதக்குழுக்களுக்கும் சப்ளை செய்யப்பட்டது. இதன்மூலம், ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா உள்ளிட்ட மற்ற தீவிரவாத குழுக்களுடன், ஹக்கானிக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

போரை தாக்குப்பிடிக்க முடியாமல் 1989-ல் ரஷ்யப்படைகள் பின்வாங்கியதும், 1992-ல் ஆப்கானிஸ்தானின் ஆட்சி முஜாகிதீன் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர், 1994-ல் முஜாகிதீன்களிடமிருந்து விலகி புதிதாக உருவான தாலிபன்கள் அமைப்பு, 1996-ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியை முதன்முறையாக கைப்பற்றியது. அப்போதே, தாலிபன்கள் ஆட்சிக்கு ஜலாலுதீன் ஹக்கானியின், ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழு முழு ஆதரவு கொடுத்தது. தாலிபன்கள் அரசில் ஜலாலுதீன் ஹக்கானி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சிராஜுதீன் ஹக்கானி

இரட்டைக்கோபுர தாக்குதலையடுத்து, 2001-ல் அமெரிக்காவால் தாலிபன்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, 2004-ல் ஹமீது கர்சாய் தலைமையில் புதிய அரசு ஆப்கனில் அமைந்தது. அதிலிருந்து, ஆப்கனில் கால்பதித்திருந்த அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல், இந்தியா போன்ற வெளிநாட்டு தூதரகங்கள் மீதான தாக்குதல், அதிபர் ஹமீது கர்சாய் மீதான தாக்குதல் என தாலிபன்கள் நடத்தும் அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பக்கபலமாக துணைநின்றது, ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழு. இதன்காரணமாகவே, 2018-ல் ஜலாலுதீன் ஹக்கானி மரணமடைந்தபோது, தாலிபன்கள் அவரது மகன் சிராஜுதீன் ஹக்கானியை தாலிபன்களின் துணைத்தலைவராக உயர்த்தினர்.

1996-ல் தாலிபன்களுக்கு ஆதரவாக தந்தை ஜலாலுதீன் ஹக்கானி நின்றதுபோல், கடந்தமாதம் நடைபெற்ற ஆப்கனைக் கைப்பற்றும் இறுதிப்போரில், மகன் சிராஜுதீன் ஹக்கானி, தாலிபன்களின் ரத்தமும் சதையுமாக களத்தில் நின்று வெற்றிக்கு உதவினார். ஆகஸ்ட் 15-ல் காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய பின், ஆப்கானிஸ்தானின் முழு பாதுகாப்பு பொறுப்பையும் ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழுவிடமே ஒப்படைத்தனர்.

இப்படி எதிரியை நோக்கி சண்டியிடும்போது ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று, ஓரணியாக போராடியவர்கள் தான் தற்போது ஆட்சி அமைக்கும் முறையில் முரண்பட்டு நிற்கின்றனர்.
அதாவது, தாலிபன்களின் அரசியல்குழுத் தலைவரும், வரவிருக்கும் ஆப்கன் ஆட்சியின் புதிய அதிபராகவும் எதிர்பார்க்கப்படும் முல்லா அப்துல் கானி பராதரும், முல்லா உமரின் மகனும் தாலிபன் தளபதியுமான முல்லா முகமது யாகூப்பும்
``உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், ஆப்கனின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு அரசை எற்படுத்தவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் அனைத்து இனக்குழுவினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் உலகம் நம் அரசாங்கத்தை அங்கீகரிக்கும்!"
என்ற கருத்தில் முடிவாக இருக்கின்றனர்.
முல்லா அப்துல் கானி பராதர்
ஆனால், தாலிபன்களின் துணைத்தலைவரும், ஹக்கானி நெட்வொர்க்ஸ் குழுவின் தலைவருமான சிராஜுதீன் ஹக்கானியும் அவரது சகோதரர் அனஸ் ஹக்கானியும்,
``பெரும்பான்மையாக இருக்கும் சன்னி பஷ்தூன்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய ஒரு தூய அரசாங்கம்தான், ஆப்கனின் அமையவேண்டும்! அதிகாரத்தை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது"
என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால் ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இழுபறி நீடித்துள்ளது.

இந்நிலையில், ஆட்சியமைக்கும் முறை, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றுவது, தாலிபன்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை ஏற்பது போன்றவற்றில் இருதரப்புக்குமான கருத்துமுரண்பாடு முற்றியதில் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்திருக்கிறது. அனஸ் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பராதரை துப்பாக்கியால் சுட்டதாகவும், பலத்த காயம் ஏற்பட்ட கானி பராதர் சிகிச்சைக்காக பாகிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் சமாதானம் ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் ஹமீது ஃபயஸ் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார்.
தாலிபன்களுக்குள் நடக்கும் சண்டையைத் தீர்த்துவைக்க, வெளியிலிருந்து, அதாவது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஏன் வரவேண்டும், என்ன தேவை இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஏனெனில், ஹக்கானி நெட்வொர்க்ஸ் உருவானது முதல் அந்த அமைப்புக்கு பொருளாதரம், ஆயுதம், அடைக்கலம் என அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தான்!

இன்றைக்கும், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் ஏராளமான ஹக்கானி நெட்வொர்க் அமைப்பின் பயற்சி முகாம்கள் உள்ளன. பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி அமைப்பதற்கு ஆரம்பம் முதலே முழு ஆதரவு வழங்கி வரும்நாடு பாகிஸ்தான். இதற்கு, மதம், இனம், அரசியல், ஆதிக்கம், எல்லைப்பகுதி என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
பாகிஸ்தானின் பின்புலத்தில் இயங்கும் ஹக்கானி குழு, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றால் அது எல்லாவகையிலும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் தாலிபன்கள், ஹக்கானி தரப்பிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் அதேசமயம் பஞ்ச்ஷீர் படையின் தலைவர் அகமது மசூத், ``தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்" என அறிவித்திருக்கிறார்.

ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவை வழி அனுப்பி வைத்த தாலிபன்களால் தங்களுக்குள் நடக்கும் சகோதர சண்டையை தீர்க்க வழியின்றி, ஆட்சியமைக்க முடியாமல் திணரிவருவதுதான் காலத்தின் கோலம். பஞ்சாயத்திற்கு சென்றிருக்கும் பாகிஸ்தானால் பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!