Wednesday, October 13, 2021

அணுகுண்டு ரகசியத்தை பப்புள் கம்மில் கடத்தி விற்ற தம்பதி..!


அமெரிக்க அணுசக்தி ரகசியத்தை சாண்ட்விச், சூயிங் கம்மில் அணுசக்தி ரகசியத்தை விற்க முயன்றதாக தம்பதி கைது

சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஜோனாதன் டேபே மற்றும் அவரது மனைவி டயானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநில நீதித்துறை அறிவித்துள்ளது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு தொடர்பான ஒரு ரகசியத்தை சாண்ட்விச்சில் மறைந்து வைத்து ஒருவரிடம் விற்பதற்கு அவர்கள் முயன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அவர் வேறொரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று தம்பதியிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் எஃப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்.

அவர்கள் இருவர் மீதும் இப்போது அணுசக்தி சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜோனாதன் டேபே அமெரிக்க கடற்படையின் அணு உந்துவிசைத் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.

சிக்கியது எப்படி?

கடந்த ஆண்டு வெளிநாட்டு அரசு ஒன்றுக்கு தடை செய்யப்பட்ட தரவுகள் மற்றும் ஒரு செய்தி அடங்கிய ஒரு தொகுப்பை அனுப்பியதாக மேற்கு வர்ஜீனிய நீதித்துறை குறிப்பிடுகிறது. ரகசியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான அந்தத் தகவல் தொடர்பு மூலம் கூடுதலாக ரகசியங்களைத் தரவும் அவர் தயாராக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு அடையாளம் தெரியாத ஒருவருடன் மறைகுறியாக்கப்பட்ட மின்னஞ்சல் வழியாக தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்த பிரதிநிதி என்று டேபே நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எஃப்.பி.ஐ. அமைப்பில் பணிபுரியம் ஏஜென்ட்  என்கிறது நீதித்துறையின் அறிக்கை.

பல மாத பேரத்துக்குப் பிறகு, ஜோனாதன் தம்பதி ரகசியத் தகவலை சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிக்கு விற்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

அதன்படி ரகசியத் தகவை எடுத்துக் கொண்டு கடந்த ஜூன் மாதம் ஜோனாதனும் டயானாவும் மேற்கு வர்ஜீனியாவுக்குச் சென்றிருக்கின்றனர்.

ஒரு வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச்சுக்குள் ரகசியத் தகவல் அடங்கிய எஸ்.டி. கார்டை ஜோனாதன் மறைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்திருக்கிறார். அப்போது டயானா மற்றொரு இடத்தில் இருந்து அதைக் கண்காணித்துக் கொண்டிருந்ததாக நீதித்துறையின் பிரமாணப் பத்திரம் கூறுகிறது.

தொடர்புடைய நபர் அந்த கார்டை வாங்கிச் கொண்டு சென்ற பிறகு ஜோனாதன் தம்பதியின் கணக்குக்கு பணம் வந்தது. அதன் பிறகு எஸ்.டி. கார்டை திறந்து தகவலைப் படிப்பதற்கான மறைகுறியை ஜோனாதன் தம்பதியினர் வழங்கியிருக்கிறார்கள்.

அதில் நீர்மூழ்கியின் "அணு உலை தொடர்பானது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் பரிமாற்றம் நிற்கவில்லை. இரண்டாவது தடவை "டெட் ட்ராப்" எனப்படும் உளவாளிகள் பயன்படுத்தும் முறையில் ரகசியத் தகவலை விற்க முயன்றனர். அதாவது நேரடிச் சந்திப்பு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருளை வைத்துவிட்டு சென்றுவிட வேண்டும். பெற வேண்டியவர் அதை எடுத்துக் கொண்டு செல்வார்.

இப்போது சாண்ட்விச்சுக்குப் பதிலாக சூயிங் கம் பாக்கெட்டுக்கு உள்ளே ரகசியத் தகவலை தம்பதி மறைத்து வைத்தனர். அதில் முன்னைவிட ரகசியமான தகவல்கள் இருந்திருக்கின்றன.

கடந்த சனிக்கிழமையன்று மூன்றாவது முறையும் அதபோன்றதொரு முறையில் ரகசியத் தகவல்களை விற்பதற்குத் முயற்சி செய்தபோது, எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment