Wednesday, October 20, 2021

சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதில் கிட்னியை எடுத்த டாக்டர்..!

சிறுநீரகக் கல்லை எடுப்பதற்குப் பதிலாக சிறுநீரகத்தையே எடுத்ததால் இளைஞர் உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள வங்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரபாய் ராவல். இவருக்கு கடுமையான முதுகு வலி. சிறுநீர் கழிக்கவும் முடியவில்லை. அவதிப்பட்ட அவர், பலாசினோரில் (Balasinor) உள்ள கே.எம்.ஜி பொது மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், இடது சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்றும் 15 மி.மீட்டர் அளவில் இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகக் கல்லுக்குப் பதிலாக சிறுநீரகத்தையே நீக்கிவிட்டார் மருத்துவர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் நலன் கருதியே அது நீக்கப்பட்டதாக தெரிவித்தார் அவர். இதற்கு பிறகுதான் அந்த இளைஞருக்கு அதிகமானது சிக்கல் . முதலில் இருந்ததை விட இப்போது சிறுநீர் கழிக்க இன்னும் அதிக சிரமத்தை சந்தித்தார்.

இதனால் மற்றொரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்தது கடந்த 2012 ஆம் ஆண்டு .

அப்போது இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேவேந்திரபாய் ராவலின் உறவினர்கள் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்து வந்த ஆணையம் அந்த மருத்துவமனைக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க இப்போது உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment