மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த காஜல் (22) என்ற பெண் கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் கஷ்டபட்டிருக்கிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பர் ஒருவரிடம் எதாவது வேலை இருந்தால் ஏற்பாடு செய்யும்படி அந்தப் பெண் கேட்டுக்கொண்டார். அந்த நபர் நவிமும்பை கன்சோலி பகுதியிலுள்ள லேப் ஒன்றில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் அங்கு பணிபுரியும் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்தார் அந்தப் பெண். இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்திருக்கின்றனர். இந்தநிலையில் திடீரென அவர்கள் வேலை செய்த லேப் மூடப்பட்டது. இதனால் அவர்களுக்கு வேலை பறிபோனது.
காஜலின் காதலன், `நாம் புனே சென்று அங்கு வேலை தேடிக்கொண்டு அங்கேயே வீடு வாங்கலாம்’ என்று தெரிவித்தார். இதனால் அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் வேலைக்காக புனே செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
புனேயில் அந்தப் பெண்ணிடம் அவரின் காதலன், `வாடகைத் தாயாகச் செயல்பட்டால் அதிக பணம் கிடைக்கும்’ என்றும், `அந்தப் பணத்தில் நாம் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்’ என்றும் ஆசைவார்த்தைகளைக் கூறினார். காதலன் கூறியதை உண்மை என நம்பிய அந்தப் பெண், அதற்குச் சம்மதம் தெரிவித்தார். கடந்த ஜூலை 10-ம் தேதி, காஜலை ரேஷ்மா என்ற பெண்ணுடன் ஹைதராபாத்துக்கு அவுரின் காதலன் அனுப்பிவைத்தார்.
ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு டாக்டர்கள் பல்வேறுகட்ட மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தனர். அந்தப் பெண்ணின் காதலனும் இரண்டு முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றதோடு, முன்பணமாக சிறிது வாங்கி இருவரும் செலவு செய்தனர்.
டாக்டர்களின் பரிசோதனையில் காஜல் வாடகைத் தாயாக இருக்க தகுதியற்றவர் என்று தெரியவந்தது. இதனால் வாங்கிய முன்பணத்தைக் கொடுக்கும்படி கேட்டனர். காஜலால் பணம் கிடைக்கப்போவதில்லை என்று உணர்ந்த அவருடைய காதலன் அங்கேயே அவரை விட்டு விட்டுத் தப்பி ஓடிவிட்டார். மேற்கொண்டு செலவுக்குப் பணம் இல்லாத காஜல், துன் தாயாருக்கு போன் செய்து நிலவரத்தைத் தெரிவித்தார். அதோடு இது குறித்து போலீஸில் புகார் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
காஜலின் தாயார் மலாடு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹைதராபாத் சென்று அந்தப் பெண்ணை மீட்டு வந்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் லிகாடே கூறுகையில், ``நாங்கள் ஹைதராபாத் சென்றபோது அந்தப் பெண் எதுவும் தெரிவிக்கவில்லை. அவரை மீட்டு மும்பைக்கு அழைத்து வந்த பிறகுதான் தனக்கு என்ன நடந்தது என்று தெரிவித்தார். அவரின் காதலன் வாடகைத் தாயாக செயல்பட்டால் ரூ.4.5 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அவரின் காதலன் மீது வன்கொடுமை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment