Thursday, October 14, 2021

மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்




திருச்சியில் குறிசொல்பவர்போல நடித்து நகையை திருடிச் சென்றதால், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத் தலைவி உயிரை மாய்த்துக் கொண்டதால் ஒட்டு மொத்த குடும்பமே தற்போது கண்ணீரில் மிதக்கிறது.


திருச்சி, திருவானைக்காவலில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தனர் சுகந்தி - ஜெகன் தம்பதி. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. 9 மாத கைக்குழந்தையுடன் இவர்களது இல்லறம் கடந்த மாதம் வரை இனிமையாகவே சென்றிருந்தது. மணம் வீசும் மலருக்குள் நாகம் புகுவது போல, கடந்த மாதம் அவர்களது வீட்டிற்குள் புகுந்தார் போலி குறிசொல்லும் ஆசாமி.

குடும்பத்தில் இருக்கும் பொதுவான பிரச்னைகளை குறிசொல்வதுபோல மெல்ல ஆரம்பித்த அந்த ஆசாமி, சட்டென கணவர் மற்றும் குழந்தையின் உயிருக்கே கண்டம் இருப்பதாக கூறியிருக்கிறார். சுகந்தி அச்சத்தில் உறைய பரிகாரமாக தான் கொண்டு வந்த புளி உருண்டையில் அணிந்திருக்கும் தாலி உள்பட அத்தனை நகைகளையும் உருட்டி வைக்கச் சொல்லியிருக்கிறார்.



பதற்றத்தில் அவர் கூறியபடியே சுகந்தியும் நகைகளை கழட்டி புளி உருண்டையில் வைக்க, அதை பெற்ற போலி ஆசாமி மந்திரம் ஓதுவதுபோல பாசாங்கு செய்து விட்டு, மீண்டும் அதை அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறார். ஓரிரு தினங்களுக்குப் பின், புளி உருண்டையை பிரித்து நகைகளை அணியும்படி கூறிவிட்டு, விருட்டென அங்கிருந்து புறப்பட்டு விட்டார் அந்த ஆசாமி.

ஏதோ சந்தேகம் தட்ட, போலி ஆசாமி கொடுத்த புளியை பிரித்து பார்த்தபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர் சுகந்தியும், அவரது கணவரும். ஏமாற்றமடைந்ததால் மன உளைச்சலில் இருந்த சுகந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஏமாற்றுபவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்தால் மட்டுமே தங்கள் குடும்பத்திற்கு நேர்ந்த கதி பிறருக்கும் ஏற்படாது என கண்ணீர் மல்க கூறுகிறார் சுகந்தியின் தாயார்.


மக்களின் அச்சத்தையும், நம்பிக்கைகளையும் தவறாக பயன்படுத்தி நூதனமாக திருடும் இத்தகைய மனிதர்களால் நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது. இப்படியொரு சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

No comments:

Post a Comment