Tuesday, November 23, 2021

ஐஸ்கிரீமில் வெடிகுண்டு..!

வெடிகுண்டு என தெரியாமல் ஐஸ்கிரீம் பந்தால் விளையாடிய போது குண்டு வெடித்துச் சிதறியதில் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

என்னது ஐஸ்கிரீமில் வெடிகுண்டா? என திணறலாக இருக்கிறதல்லவா? ஐஸ்கிரீம்கள் கப்களில் மட்டும் வருவதல்ல, வட்ட வடிவ பிளாஸ்டிக் பந்துகளிலும் ஐஸ்கிரீம்கள் வருவதுண்டு. அப்படி ஒரு ஐஸ்கிரீம் பந்தில் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதலில் தான் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த குண்டு சிறுவனின் கைகளுக்கு சென்றது எப்படி?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடத்தை அடுத்த நரிவயல் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஸ்ரீவர்த் பிரதீப். அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பிரதீப் இன்று தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிய சிறுவர்களுள் ஒருவர் அடித்த பந்து அருகாமையில் உள்ள காம்பவுண்டில் சென்று விழுந்தது. 

கிரிக்கெட் பந்தை தேடிச் சென்ற பிரதீப் அங்கு மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் இருப்பதை பார்த்து அதில் ஒன்றை கையில் எடுத்துள்ளான். பின்னர் அந்த பந்தின் மூடியை திறக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக அந்த பந்து வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் சிறுவன் பிரதீப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் காயத்தினால் துடிதுடித்த சிறுவனை மீட்டு தலசேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் பிரதீப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதீப் எடுத்த ஐஸ்கிரீம் பந்து குரூட் குண்டு என சொல்லப்படுகிறது. அது குண்டு என தெரியாமல் எடுத்து திறந்தததால் அது வெடித்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீதம் இருந்த ஐஸ்கிரீம் குண்டுகளை கைப்பற்றினர், பின்னர் வெடித்துச் சிதறிய ஐஸ்கிரீம் குண்டுகளின் மிச்சங்களையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக கண்ணூர் பகுதியில் ஏற்கனவே இதுபோல ஐஸ்கிரீம் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


1 comment: