குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் - முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் - இடை வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் -
பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.
பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான் பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின் பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி, சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல விஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.
“பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.
ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால், அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.
மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.
மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.
மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி, கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.
இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும், உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.
ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன. அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.
இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின் சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50 முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும் பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல் எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில் பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.
No comments:
Post a Comment