Friday, November 19, 2021

ஜெய் பீம் : இரு துருவ அரசியல் மோதல்

*ஜெய்பீம் திரைப்படமும்
இரண்டு கருத்தியல்களுக்கு இடையேயான மோதலும்*

ஜெய்பீம் திரைப்படம் குறித்து நடைபெறும் உரையாடல் என்பது வெறும் சினிமா குறித்தான உரையாடல் என்று சுருக்கிப் பார்த்துவிடக்கூடாது. 

இரண்டு கருத்துக்கிடையிலான மோதல் என்று விரித்துப் பார்க்க வேண்டும். அதென்ன இரண்டு கருத்து மோதல் என்றால், ஒருபக்கம் இடதுசாரிகளுக்கும் மறுப்பக்கம் வலதுசாரிகளுக்கும் இடையிலான மோதலாகும். 

இடது சாரிகள் என்றால், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், ஜனநாயகசக்திகள், மனித உரிமைப் போராளிகள் என இவர்கள் யாவரும் இடதுசாரிகள்தான்.

வலதுசாரிகள் என்றால், சாதியவாதிகள், மதவாதிகள், இனவாதிகள், என இவர்கள் யாவரும் வலதுசாரிகள்தான்.
இவ்விருவருக்குள்தான் கருத்துமோதல் வெடித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படம் ஒரு இடதுசாரி கருத்தியலைத் தாங்கிய திரைப்படமாகும். இடதுசாரி கருத்தியல் என்பது சமூக மாற்றத்திற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதனை வெளிப்படையாக கேள்விக்கு உட்படுத்தும். 

அதாவது, சமத்துவத்திற்கும், சகோதிரத்துவத்திற்கும் தடையாக உள்ள சாதியவாதத்தையும்,  இனவாதத்தையும், மதவாதத்தையும் கேள்விக்குட்படுத்தும்.

அப்படித்தான், அக்கினி குண்டத்தையும், ஜெ.குருவையும் சாதியவாதத்தின் அடையாளக் குறியீடாக ஜெய்பீம் திரைப்படம் கேள்விக்கு உட்படுத்தியது. 

அக்கினி குண்டத்தின் புராண புளுகு மூட்டையும், ஜெ.குரு என்னும் சாதி வெறியரும் தமிழகத்தைப் பொருத்தவரை என்ன கருத்தாக அல்லது என்ன அடையாளங்களாக தங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். 

அதற்கு பாமகவின் பல்வேறு நடவடிக்கைகளும், முழு நிலவு மாநாடும் சாட்சியாகும். 

இந்த பின்னணியிலிருந்துதான் குறியீடுகளையும் அடையாளங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடதுசாரியாய், ஒரு கலைஞனாய் மக்களின் மனங்களில் உள்ளதை கலைப் படைப்பாக கொடுத்துள்ளார்கள். இதுதான் முழு உண்மை. 

ஆனால், இந்த முழு உண்மையை வெளிப்படையாக சொல்வதில்தான் சிக்கல் நிலவுகிறது. காரணம், இந்த இரண்டு குறியீடுகளும் பாமகவால் கட்டியமைக்கப்பட்டவை; உருவாக்கப்பட்டவை. பாமகவின் பிற்போக்குத்தனங்களுக்கு விவரம் அறிந்தவர்களும் விவரம் அறியாதவர்களும் ஆட்பட்டுப்போனார்கள். 

இந்த குறியீட்டு அடையாளங்களை பகுத்தறிவுக்கோ அறிவியலுக்கோ அவர்கள் ஆய்விற்கு உட்படுத்தவில்லை. இந்த இடத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

தலித் மக்கள் இப்படியான புராண அடையாளங்களை அறவே கைவிடுதல் தொடர்பான உரையாடல்களை அயோத்திதாசப் பண்டிதர் காலத்திலேயே தொடங்கிவிட்டார்கள். அந்த உரையாடலின் வரலாற்றுக் குறியீடாக பெறப்பட்டவர்தான் அம்பேத்கர். 

அப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரை அடையாளக் குறியீடாக பெற்றிருக்க வேண்டும். பிராமணர் அல்லாதோர் இயக்கம், நீதிகட்சி, திராவிடர் கழகம் என பெரியாரும் வரலாற்று குறியீடுட்டு அடையாளம்தான்.

அம்பேத்கரும் பெரியாரும் சாதி கடந்தவர்கள் இவ்விடம் வாதத்திற்காக பொருத்திக்காட்டுகிறேன்.அந்த வகையில், பெரியாரை அடையாளக் குறியீடாக பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், தவற விட்டுவிட்டார்கள். 

ராமதாஸும் உருவாகிவிட்டார். சாதிய வாதத்திற்குள் சிக்கிக்கொண்டார்கள். தலித் மக்களோ அம்பேத்கரை சிக்கென பிடித்துக்கொண்டார்கள். ஆகையால், பகுத்தறிவைப் பேசுகிறார்கள்; அறிவியலைக் கடைப்பிடிக்கிறார்கள்.

திருமாவும் உருவாகிவிட்டார். வரலாற்றுத் தொடர்ச்சி அறுந்துபடமால் தொடர்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வரலாற்றுத் தொடர்ச்சி அறுந்துவிட்டது. பெரியாரை கைக்கழுவி விட்டார்கள்.

சாதியவாதம் இனவாதமானது, இனவாதம் மதவாதமானது. ஆகையால்தான் தொல்குடி, தமிழ்க்குடி, சகோதரர்கள், அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், சித்தப்பா பெரியப்பா என பிதற்றுகிறார்கள். 

குற்றம் செய்தவன்தான் கொடூரமானவன். அவன் சாதியோ, அவன் சமூகமோ, அவன் இனமோ, அவன் மதமோ கொடூரமானது இல்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால், மேற்சொன்ன மூன்று வாதங்கள்தான் அவன் குற்றமிழைக்க போதுமான பலத்தையும் துணிச்சலையும் தருகிறது என்பதே நமது வாதம். அதாவது, இடதுசாரிகள் வாதம்.

நாங்கள் உயர்ந்த சாதி, நாங்கள் ஆண்ட இனம், நாங்கள் இந்துக்கள் என்பனவெல்லாம் என்ன வகையான கருத்துக்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

உயர்ந்த சாதி என்ற அந்தஸ்த்தைக் கோருவதும், ஆண்ட இனம் என்ற ஆளும் அந்தஸ்த்தைக் கோருவதும், நாங்கள் இந்துக்கள் என்ற அந்தஸ்த்தைக் கோருவதும் என்னவகையான கருத்துகள் என்றால், 

அப்பட்டமான வலதுசாரி கருத்தியலாகும். அப்பட்டமான சாதிக்காப்பாற்றும் கருத்தியலாகும். அந்த சாதியைக் காப்பாற்றத்தான் மதவாதிகளும் சாதியவாதிகளும் இனவாதிகளும் கொதிக்கிறார்கள்.

குறிப்பு: இந்துக்கள் என்பதற்குள் சைவம், வைணவம், வைதீகம் என்பதையும் உள்ளடக்கியே புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment