Sunday, December 5, 2021

சீட்டு கம்பெனிகளை விட ஆபத்தானவை!"


கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் முழுமையாகத் தடை விதிக்கப்படலாம் என்றும், ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை விரைவில் வெளியிடும் என்கிற தகவல் வெளியானது. இதன் காரணமாகச் சில தினங்களுக்கு முன் பிட்காயின் உள்ளிட்ட பல கிரிப்டோகரன்சிகளை விலை கடும் ஏற்ற, இறக்கத்தைக் கண்டன.
இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் கொடுத்த சமீபத்திய பேட்டியில், கிரிப்டோ கரன்சி குறித்து தனது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

``முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகள் சீட்டு கம்பெனிகளைவிட ஆபத்தானவை. தற்போதிருக்கும் 6,000-க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் ஒரு சில கிரிப்டோ கரன்சிகள் மட்டும் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. மற்ற கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் நீண்ட நாள்களுக்கு உயிர் வாழாது" எனத் தெரிவித்துள்ளார்.

                         பிட்காயின்
பிட்காயின்

மேலும், ``17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் துலிப் பூக்களுக்கு ஏற்பட்ட அதிகப்படியான தேவை மற்றும் மக்களுக்கு அதன் மீதான மோகம் அதை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய வழிவகுத்தது. பின்னாள்களில் அவற்றுக்கான மோகம் குறைந்து அவற்றை மக்கள் சாதாரணமாகக் கருதினர். அதே போலத்தான் கிரிப்டோ கரன்சியின் நிலையும் இப்போது இருக்கிறது'' என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

இன்றைய நிலையில், கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள், கிரிப்டோ கரன்சியை இரண்டு விதமாகப் பார்க்கின்றனர். ஒரு தரப்பினர் அதைத் தங்கம், வெள்ளி, பங்குகள் போல மதிப்புமிக்க நீண்டகால சொத்தாகப் பார்க்கின்றனர். இன்னொரு தரப்பினர் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான பணம் செலுத்தும் ஒரு கரன்சியாக மட்டும் பார்க்கிறார்கள்.

ஆனால், தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கிரிப்டோ கரன்சி பற்றி பேசியபோது, ``கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்னைகள் இருக்கின்றன. நன்றாக பரிசீலித்த பிறகு ரிசர்வ் வங்கி இதை சொல்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அது உருவெடுக்கக்கூடும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கிரிப்டோ கரன்சியை எப்படி முறைப்படுத்துவது என குழம்பிப் போயிருந்த மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகள், கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தியே ஆக வேண்டும் என வேகமெடுத்திருப்பதாக தெரிகிறது.

                   Crypto Currency
Pixabay

ஒருவேளை, தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, பிட்காயின் உள்ளிட்ட பல கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு, ஆர்.பி.ஐ புதிய கரன்சிகளை வெளியிடுமானால், அப்போது தனியார் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதை விற்க நேரிடும். அப்போது கிரிப்டோ கரன்சி சந்தை தடுமாறும். அப்போது முதலீட்டாளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் அல்லது நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நவம்பர் 25-ம் தேதி மாலை கிரிப்டோ கரன்ஸி வர்த்தகத்தில் பிட்காயின் விலை 3.10% அதிகரித்து 58,277.93 டாலராக வர்த்தகமானது, பிரபல கிரிப்டோ கரன்சிகளான ஷிபா இனு 0.83% சரிந்து 0.000039 டாலராக இருந்தது. எதிரியம் 3.05% அதிகரித்து 4,416.64 டாலராக வர்த்தகமானது. சொலானா 1.43% குறைந்து 211.27 டாலராக வர்த்தகமானது. டெரா 2.59% அதிகரித்து 41.24 டாலராக வர்த்தகமானது. கார்டனோ 0.59% அதிகரித்து 1.69 டாலராக வர்த்தகமானது.


No comments:

Post a Comment