Monday, December 6, 2021

யானைகள் வாழ்ந்தால்..?


வழக்கறிஞர் நண்பர் ஒருவர் நேற்று பதிவேற்றம் செய்திருந்த ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் ஒரு யானையின் மீது இரயில் மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளாகி அது படும் துயரம்  நம் எல்லோரையும் மிகுந்த  மன வேதனைக்கு உள்ளாக்கி  இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  அதனால், யானை குறித்து சில தகவல்களை இந்த பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


இறைவனின் தலைசிறந்த படைப்பு யானை' என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான்டோன். யானையின் சிறப்புகளை அறியும்போது மனதை மேலும் ஆக்கிரமித்துவிடுகிறது. மனிதனுக்கு அடுத்து அறிவில் சிறந்தவையாக யானைகள் இருக்கின்றன. நினைவாற்றல், மகிழ்ச்சி, பிரிவு, இரக்கம், கோபம், அழுகை, விளைவுகளை எதிர்நோக்குவது போன்ற சிறப்பான குணங்கள் அதற்கு இருக்கின்றன. புயல் வருவதைக்கூட முன்கூட்டியே உணரும் தன்மையை யானை பெற்றிருக்கிறது. இன்று நிலத்தில் வாழும் உயிரினங்களில் ஆகப்பெரியது யானைதான். நான்கு முழங்கால்களை கொண்ட ஒரே உயிரினமும் அதுவே.

தண்ணீர் இருக்குமிடத்தை 5 கி.மீ. தொலைவிலேயே அறிந்துகொள்ளும். முனகல்கள், பிளிறுதல்கள் மற்றும் மனிதனால் கேட்கமுடியாத பலவித ஓசைகள் மூலம் தங்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறது யானை. தண்ணீரில் நீண்டதூரம் நீச்சல் அடிக்கவும், தனது தும்பிக்கையால் எவ்வித வாசனையை நுகர்ந்து உணரவும் யானையால் முடியும். நான்கு உயிரினங்களுக்கு மட்டுமே கண்ணாடியைப் பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இருக்கிறது. அதில் யானையும் ஒன்று. இப்படி யானைகளின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் யானைகள்

மனிதனுக்கும், யானைக்குமான தொடர்பு இன்று நேற்றல்ல சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. சங்க காலத்தில் அறுகு, வழுவை, வேழம், இம்மடி என 170க்கும் மேற்பட்ட பெயர்களில் யானை அழைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட உயிரினங்களில் யானையே முன்னிலை வகிக்கின்றது. சங்க காலத்தில் நடைபெற்ற பலபோர்களின் வெற்றியைத் தீர்மானித்தது யானைகளின் பலமே. மகத மன்னர்கள் 6,000 யானைகளை தம் படையில் வைத்திருந்ததாக வரலாறு சுட்டுகிறது. 'குறிஞ்சி நிலத்திற்குப் பெருமை சேர்ப்பது யானைக் கூட்டம்தான். யானைகளுக்கு ஒப்பாக ஒரு விலங்கு உலகில் இல்லை' என்று கபிலர் நற்றிணையில் பெருமையோடு குறிப்பிடுகின்றார்.

யானை வந்த பாதை

முந்தைய காலங்களில் 600க்கும் மேற்பட்ட யானை வகைகள் வாழ்ந்ததாக புதைபொருள் ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்திருக்கின்றார்கள். ஆனால் தற்போது ஆப்ரிக்க யானைகள், ஆசிய யானைகள் என இரண்டு வகை மட்டுமே எஞ்சி நிற்கின்றன. 5 கோடி ஆண்டுகளுக்குமுன் ஆப்ரிக்க காடுகளில் தோன்றி அங்கிருந்து சுமார் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து மேற்கு மலைத்தொடர் பகுதிகளுக்கு யானை வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் இங்கு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் குடியேறினர். இதிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மூத்த குடிகள் யானைகளே என்பது புலனாகிறது. மனிதர்களைவிட அதிக உரிமை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மீது யானைகளுக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

மற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் யானைகள்

குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள் முன்னோர்கள். யானைகளால் காடு செழிக்கும், காடுகளினால் மனிதன் உள்பட பல்வேறு உயிரினங்கள் பயன்பெறும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். யானைகளால் மற்றவை அடையும் பயன்கள் எண்ணிலடங்காதவை. காடுகளில் யானைகள் செல்லும்போது ஏற்படும் பெரும் பாதைகள்தான் பல்வேறு உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வழி ஏற்படுத்தித் தருகின்றன. கடும் கோடையிலும் காடுகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்து பள்ளம் தோண்டி குடிப்பதுடன் மற்ற உயிரினத்திற்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்கின்றன யானைகள். தனது கழிவின்மூலம் குரங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றுக்கு உணவைத் தருவிக்கிறது. தினமும் 30 கி.மீ. இடம்பெயர்வதால் அங்கெல்லாம்  தனது கழிவுகள் மூலம் விதைப் பரவல் செய்து வனம் செழிக்க உதவுகிறது. மரங்களில் உள்ள செடி, கொடிகளைத் தான் சாப்பிட்டது போக கீழேபோடுபவைகளை எருதுகள், மான்கள் உள்ளிட்டவை உணவாக உட்கொள்கின்றன. மரக்கிளைகளை உடைத்து சூரியக்கதிர்கள் பல இடங்களில் படர  வைப்பதால் அங்கெல்லாம் புதிய புற்கள் முளைக்கிறது. அதை நம்பி பல உயிரினங்கள் வாழ்கின்றன. இப்படி காட்டிற்கும், மனிதனுக்கும், பல உயிரினங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகின்றன.

வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது ஒருபகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாக இடம்பெயர்கிறது யானை.  அதற்காக எப்போதும் ஒரே பாதையைத்தான் பின்பற்றும். இதை வலசைப் பாதை என்பார்கள். தற்போது இவைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதுதான் யானைகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுதும் 166 வன இணைப்புப் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யானைகள் காலம் காலமாக வலசை செல்லும் மரபு வழிப்பாதைகள் அவை. இவற்றில் 88 வன இணைப்புப் பாதைகளே தற்போது இருக்கின்றன. மீதியுள்ளவை மனித ஆக்கிரமிப்பில் சிக்குண்டுள்ளது. அதுவும் கடந்த 15 ஆண்டுகளாக நிலைமை மோசமடைந்திருக்கிறது.

யானை-மனித மோதல்

யானையின் உணவாக இருக்கும் 82 தாவரங்கள், 59 வகை மரங்கள், 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளில்; வலசை செல்லும் இடங்களில் கல்லூரிகள், ஆசிரமங்கள், உல்லாச விடுதிகள், தேயிலைத் தோட்டங்கள், மின் திட்டங்கள் என நகரமயமாதல் வேகமாக நடைபெறுகின்றன. உணவிற்கும், தண்ணீருக்கும் காடுகளில் உள்ள வழிகள் அடைக்கப்படுவதால் யானைகள் மனித குடியிருப்புகள் நோக்கியும், விவசாய தோட்டங்களை நோக்கியும் திசை திரும்புகிறது. இதனால் யானை-மனித மோதல் நிகழ்கின்றது. இன்று இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இதில் மனிதர்கள் பலியாகும்போது எழுப்பப்படும் உரக்கக் குரல்கள் யானை பலியாகின்ற போது எழுப்பப்படுவதில்லை என்பது வேதனையானது. யானைகள் இடத்தில் 22% மட்டுமே காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.எஞ்சிய இடத்தை மனிதனோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த கடும் நிலையை அதற்கு ஏற்படுத்திவிட்டு 'குடியிருப்புக்குள் யானைகளின் அட்டகாசம்' என்று சொல்வதற்கு மனிதர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

மனிதர்கள் அல்லாத காட்டு குடிமக்கள்

யானைகள் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 87% குறைந்துள்ளதாக அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 200 முதல் 300 யானைகள் வரை பல்வேறு காரணங்களால் மடிந்து வருகின்றன. அதில் தந்தத்திற்காகக் கொல்லப்படுவது, வனத்தில் உணவு இல்லாமல் பசியால் மடிவது, ரயிலில் அடிபட்டுச் சாவது, காடுகளில் மனிதர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக்கை உண்டு வயிறு வீங்கி வீழ்வது என்பது முதன்மையானதாக இருக்கின்றது. யானைகளின் அழிவை தடுக்க வேண்டும் என்றால் காடுகளைப் பாதுகாப்பதும், ஆக்கிரமிப்புகளை அகற்றி வலசை பாதைகளை மீட்பதும், காடுகளில் உணவு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதும் அவசியமாகும்.

யானைகள் பலரும் நினைப்பதுபோல் கொடூரமான உயிரினம் கிடையாது.  யாரையாவது தவறுதலாகக் கொல்ல நேரிட்டால் யானை அடையும் குற்றவுணர்ச்சிக்கு அளவே கிடையாது. தன்னால் கொல்லப்பட்ட அந்த சடலத்தை நாய், நரி போன்ற விலங்குகள் குதறாமல் இருக்க முடிந்த அளவு போராடும். காட்டில் எந்த உயிரினமாவது இறந்து கிடந்ததைப் பார்த்தால் இலை, தழைகளைக் கொண்டுவந்து மூடிவிடும். சில நேரம் பள்ளம் தோண்டி இறந்த உடலைப் புதைக்கும். அதற்காகக் கண்ணீர் வடிக்கும். இந்த உணர்வு மனிதர்களுக்கே அற்று வருகின்ற காலம் இது.

நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர்கள் யானைகளை 'மனிதர்கள் அல்லாத காட்டுக் குடிமக்கள்'  என்று அழைப்பதாகவும், போற்றுவதாகவும் மானுடவியலாளர் நூரிட்பேட் - டேவிட் குறிப்பிடுகின்றார். யானைகள் காட்டுக் குடிமக்கள் என்ற சிந்தனை, அதற்கு இடைஞ்சல் தரக்கூடாது என்ற நற்நோக்கு பழங்காலமாகக் காட்டில் வசிக்கும் மனிதருக்கு இருப்பதுபோல் அனைவருக்கும் வரவேண்டும். யானைகள் இருக்கும்வரைதான் காடுகள் செழிக்கும். காடுகள் இருக்கும்வரைதான் மழைபொழியும், தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் இருக்கும் வரைதான் மனிதன் வாழ்வான். யானைகளின்றி மனிதர்களுக்கு வாழ்வில்லை.

அதனால், யானைகள் வாழ்ந்தால் காடுகளும் வாழும்!

2 comments:

  1. யானைகள் வாழ்ந்தால் காடுகள் செழிக்கும் என்பது இயற்கை நியதி என்பதை இந்த கட்டுரை தெளிவுபடுத்துகிறது

    ReplyDelete