இந்தியாவில் 2004-ம் ஆண்டு தன்னுடைய கிளையை நிறுவிய அமேஸான் நிறுவனம் 2013-ம் ஆண்டில்தான் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன் பின்னர் அமேஸான் ஆன்லைன் விற்பனைப் பிரிவு, டெலிவரி பிரிவு, அமேஸான் பிரைம் வீடியோ, அமேஸான் வீடியோ, அமேஸான் ஃபயர் ஸ்டிக், மின்னணு சாதனங்களின் உற்பத்தியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தற்போது ஆன்லைன் கேம்ஸ் தயாரித்தும் வெளியிட்டுவருகிறது.
2019-20-ம் நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 11,000 கோடி முதலீடு செய்துள்ளதாக ஒழுங்காற்று அமைப்பிடம் அறிக்கை அளித்தது. அதேநேரத்தில் இதே நிதியாண்டில் சுமார் 7,899 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது 2018-19-ம் நிதியாண்டில் ஏற்பட்ட 7,014 கோடியைவிட அதிகம் எனவும் தெரிவித்தது. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் இலக்கு வைத்திருப்பதாகவும், ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐடி., பி.பி.ஓ துறைகளிலும் கால் பதித்துள்ளன. அறிவியல் ஆய்வு சார்ந்த துறையிலும் கால் பதிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
அமேஸான் கிசான் என விவசாயிகளுக்கான திட்டம் என அமேஸான் நுழையாத துறையே இந்தியாவில் இல்லை எனும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது.
மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சென்னையில் தனது முதல் மின்னணு சாதன உற்பத்தி ஆலையைத் தொடங்கவிருப்பதாகவும், அது `மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழும் வரும் எனவும் அமேஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் கிளைபரப்பிச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
அமேஸான் நிறுவனம் தனக்குச் சாதகமாக அரசின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதற்காக அரசின் முக்கியத் துறைகளில் இருக்கும் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகவும், அமேஸான் நிறுவனம் தன்னுடைய கையாட்களாகப் பல போலி நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
மேலும், இந்தியாவிலுள்ள சந்தையில், தான் மட்டுமே விற்பனை அமைப்பாக விளங்க வேண்டும் என்று அமேஸான் நிறுவனம் கருதுவதாகவும், அதற்காகப் பொருளாதாரம், அரசியல், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை வாரிச்சுருட்டிக் கொள்வதற்கான முன் முயற்சிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
அமேஸான் நிறுவனத்தின் மீது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இதேபோலக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அமேஸான் நிறுவனம் பல்வேறு வழக்குகளில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் சொல்லும் எந்தப் புகாரையும் நேரடியாக அணுக முடியாது என்பதால், இது குறித்து தீவிர விசாரணை வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
இந்தியாவில் இதுநாள் வரை வணிகத்தைக் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே செய்துவந்ததை அமேஸான், ஃபிளிப்கார்ட் மாதிரியான நிறுவனங்கள் யார் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்தி, புதிய தலைமுறை வணிகர்களை உருவாக்கிவிட்டன. இது குறிப்பிட்ட அந்தச் சமூகக் கூட்டமைப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
ஆர். எஸ். எஸ் அமைப்புக்கு என்ன பிரச்சினை..?
அமேசான் போன்று அம்பானி போன்ற இந்திய கார்ப்பரேட்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்குள் வந்துவிட்டதால் அவர்களுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசின் பாலிசியை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு அமேஸானை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதானே தவிர வேறெந்த அக்கறையும் ஆர். எஸ்.எஸ் அமைப்புக்கு இல்லை.
ஆர். எஸ்.எஸ் அமைப்புக்கு மற்றொரு பிரச்னை, மேற்கத்திய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுடன் சேர்ந்து முற்போக்கு சிந்தனைகளும் இங்கே கொண்டுவரப்படுகின்றன. பிரைம் வீடியோவால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால், ஆல்ட் பாலாஜி, எம்.எக்ஸ்.பிளேயரில் வருபவையெல்லாம் என்ன ரகம் என்றே சொல்ல முடியாது. நியாயமாக இந்து கலாசாரத்துக்கு எதிராக இருப்பது என்றால் இவற்றைத்தான் எதிர்க்க வேண்டும்.
சாதி, மத, பாலின வேறுபாடுகள் அனைத்தையும் அமேஸான் உடைத்ததை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமேஸான் பிரச்னை என்றால் அதில் இணைப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் இல்லையா? வணிகம் எங்கள் கைவிட்டுப் போகிறது என்ற உண்மையைச் சொல்ல முடியாமல்தான் இப்படியெல்லாம் குற்றம்சாட்டுகிறார்கள்.
வர்த்தகத்தில் சர்வாதிகாரமாக நடந்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்திய சட்டங்களையும் மதிக்கவில்லை. ஆனால், அமேஸான் அப்படியில்லையே...!
No comments:
Post a Comment