ஒரு நபர் வயிற்றுக்குள் இருந்து 1 கிலோ ஆணி, ஸ்குரூ, நட் அகற்றம் - லித்துவேனியாவில் வினோதம்
லித்துவேனியா நாட்டில் ஒரு நபரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான ஆணி, நெட், போல்டுகள், கத்திகள் அகற்றப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபர் குடிப்பழக்கத்தை விட்ட பிறகு ஒரு மாதமாக உலோகப் பொருள்களை விழுங்கிக் கொண்டிருந்தார் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த நபர் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட உலோகப் பொருள்களில் சில 10 சென்டி மீட்டர் நீளமுள்ளவை என்கிறது லித்துவேனியா நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான எல்.ஆர்.டி.
இது மிகவும் வித்தியாசமான கேஸ் என்று அறுவை சிகிச்சை வல்லுநர் சருனாஸ் டைலிடெனாஸ் கூறியுள்ளார்.
லித்துவேனிய மொழியில் எல்.ஆர்.டி. வெளியிட்ட இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கே.யு.எச். மருத்துவமனை புகைப்படத்தில் ஒரு கிண்ணம் நிறைய உலோகப் பொருள்கள் இருப்பதைக் காணலாம். மூன்று மணி நேரம் நடந்த அவசர அறுவை சிகிச்சையில் அந்த நபரின் வயிற்றில் இருந்து இந்த பொருள்கள் எடுக்கப்பட்டன.
கடுமையான வயிற்று வலியோடு இருந்த இந்த நபர் பால்டிக் கடற்கரையோரம் உள்ள இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார்.
No comments:
Post a Comment