Sunday, October 3, 2021

மது - மாதுவுக்கு மட்டுமே அடிமைகளாக இருந்தார்களா இந்திய மகாராஜாக்கள்..?

 

மது - மாதுவுக்கு மட்டுமே அடிமைகளாக இருந்தார்களா இந்திய மகாராஜாக்கள்?

இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார்.

ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள்.

உதாரணமாக, ஒரு வெள்ளை அதிகாரி, ஒரு இந்தியா மகாராஜாவை "கொடூரமான மற்றும் உடல் பெருத்த, அருவருப்பான தோற்றத்துடன், நடன மங்கைகளைப் போல காதிலும் கழுத்திலும் ஆபரணங்களை அணிந்து கொண்ட கோமாளிகள் என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டார். வெள்ளைக்கார ஆட்சியாளர்களைப் போல, சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இல்லாமல், இந்திய அரசர்கள் மோசமானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினர் ஆங்கிலேயர்.

பல தசாப்தங்களாக இதுவே நம்பப்பட்டது. 1947 ஆம் ஆண்டில், லைஃப் பத்திரிகை ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டு இதற்கு வலுசேர்த்தது. அதில், ஒரு சராசரி இந்திய அரசருக்கு, "11 பட்டங்கள், மூன்று சீருடைகள், 5.8 மனைவிகள், 12.6 குழந்தைகள், ஐந்து அரண்மனைகள், 9.2 யானைகள் மற்றும் 3.4 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்" இருந்தன என்று கேலியாக அறிவித்தது.

எண்கள் தவறாக இருந்தாலும், இது கேலிசெய்வதாகவும் பொழுதுபோக்காகவும் தோன்றியது. மொத்தத்தில், 562 "ராஜ்ஜியங்கள்" என்று கூறப்படும் பெரும்பாலானவை அரசியல் சம்பந்தம் இல்லாத சிறிய தோட்டங்கள் என்றே கருதப்பட்டன.

சுமார் 100 அறிவிக்கப்பட்ட இளவரசர்கள், கோடிக்கணக்கான மக்களை ஆள்வதாகக் கூறப்பட்டாலும், புகழ்பெற்ற நில உரிமையாளர்கள் மற்றும் பிரபுக்கள் ஒரு சில சதுர கிலோமீட்டர் நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, அவர்களின் அந்தஸ்தை நீர்த்துப்போகச் செய்வது மட்டுமல்லாமல், அது அவர்களை ஒரு கேலிச்சித்திரமாகக் குறைத்து மதிப்பிட்டது. சர்வ ஆளுமை பொருந்திய எலிசபெத் ராணியை ஒரு உள்ளூர் ஜமீன்தாருக்கு இணை வைப்பது மிகத் துச்சமாகப் பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த சுயாட்சி ராஜ்ஜியங்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் ஐந்தில் இரண்டு பங்கு பகுதியில் பரவி, நேரடி காலனித்துவ கட்டுப்பாட்டின் கீழ் வராமல் இருந்தன. ஆனால் ஆங்கில ஆட்சியாளர்களுடனான உடன்படிக்கைகளின் மூலம் அவர்களின் பிரதிநிதிகள் போலவே கருதப்பட்டனர் இந்த நிலச் சுவாந்தாரர்கள்.

ஆனால், கொச்சி மகாராஜா ஒருவர், மோகத்தை விட, சமஸ்கிருத ஏடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததும் அண்மையில் உயிரிழந்த கோண்டால் அரசர் ஒரு தேர்ந்த மருத்துவராக இருந்ததும் மறைக்க முடியாத உண்மைகள்.

இந்தப் பெரிய ராஜ்ஜியங்கள், கொடூரமான, மூர்க்கத்தனமான, மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையான சர்வாதிகாரிகளால் ஆட்சி செய்யப்படவில்லை. மாறாக, தங்கள் ஆளுமையின் கீழ் உள்ள நிலத்தைத் தங்கள் நியாயமான அரசியல் அளுமையின் கீழ் உள்ள நிலமாகவே பார்த்தனர்.

ஆனால், இந்த சுயாட்சி மன்னர்கள் சில நேரம் விசித்திரமாக நடந்து கொண்டதை மறுக்க முடியாது. ஒரு மகாராஜா ஒரு ஸ்காட்டிஷ் படைப்பிரிவைக் கண்டு, உடனடியாகத் தனது பழுப்பு நிற வீரர்களுக்கு அதே போன்ற சீருடைகள் அணிய உத்தரவிட்டார். மற்றொரு அரசர் பஞ்சாபிகளின் மத்தியில், தான் பதினான்காம் லூயி மன்னர் மறு அவதாரம் என்றே தன்னை கருதிக்கொண்டார்.

ஆனால், இந்திய இளவரசர்களின் இந்த விசித்திரப் போக்கு அவர்களுக்கு மட்டுமே உரியதன்று. பிரிட்டிஷ் அரசர்களும் ஆட்சியாளர்களும் கூட இப்படி இருந்துள்ளனர். லார்ட் கர்சன் போன்ற ஒரு கடுமையான வைஸ்ராய் கூட ஒரு முறை முழு நிர்வாணமாக டென்னிஸ் ஆடியுள்ளார்.

இந்திய அரசர்கள் முட்டாள்கள் என்ற பிம்பம், பல உண்மைகளை மறைக்கவே உருவாக்கப்பட்டது என்பதை நான் எனது ஆய்வில் தெரிந்துகொண்டேன்.

யானைகளுக்குப் புகழ் பெற்ற மைசூர் அரசர், தொழில் மயமாக்கலைத் தனது ஆட்சியில் பின்பற்றினார். பரோடாவில் அரசர், அவரது குடிமக்களில் ஒவ்வொரு 55 பேருக்கும் 5$ ஒதுக்கியிருந்ததை ஒரு பத்திரிகையாளர் வெளிக்கொணர்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இந்தியாவில் ஒவ்வொரு 1000 பேருக்குத்தான் 5$ ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கேரளத்தின் திருவாங்கூர் ராஜ்ஜியம், பள்ளிக்கூடங்கள், உள்கட்டமைப்பு போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கி, ஒரு மாதிரி ராஜ்ஜியமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் பற்றிய பல விவாதங்களுக்கு இந்த ராஜ்ஜியங்களே முன்னோடிகளாகவும் இருந்துள்ளன.

அப்படியிருக்கும் போது, இந்திய அரசர்களை வெறும் ஆடம்பரத்துக்கும் சிற்றின்பத்துக்குமே உரியவர்கள் என்ற பிம்பம் எப்படி உருவானது?

இது ஆங்கிலேய ஆட்சியாளர்கள், வெள்ளையர்கள் தான் நாகரிகத்தின் பிறப்பிடம் என்று போதித்தால் தான் தங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்க முடியும். நாகரிகமும் அறிவியலும் தெரியாத இந்தியர்களை ஆள இந்தியர்களால் முடியாது என்றும் தாங்கள் வந்து தான் அவர்களை முன்னேற்றவேண்டும் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். மன்னர்கள் தாம் பேரரசின் தூண்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் உண்மையில், ஆங்கிலேயருக்கு ஒத்துப் போகும் பங்காளிகளாகவே கருதப்பட்டனர்.

உதாரணமாக, பரோடா புரட்சிகர பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கத்தின் ஆதாரமாக இருந்தது. அங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அச்சு ஊடகம் செயல்பட்டது. மைசூர் உள்ளூர் பத்திரிகைகள் ஆங்கிலேய அரச குடும்பத்தின் பின்னால் செல்வதை சகித்துக்கொள்ளாத அரசர்கள், ஆங்கிலேய ஆட்சியை விமரிசிப்பதை அனுமதித்தனர்.

ஜெய்ப்பூரின் ஆட்சியாளர்கள் அதிக கப்பம் கட்டுவதைத் தவிர்க்க, தங்கள் கணக்குகளைக் குறைத்துக் காட்டத் தயங்கவில்லை. தவிர, பல ஆட்சியாளர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நிதி உதவி அளித்தனர். உண்மையில், கர்சன், 1920 களில் கூட, இந்த தேசியவாத அரசர்களின் நியாயத்தை உணர்ந்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளராக இருந்த ஃபிலிப் எகாலைட்கள் போல புரட்சியாளர்கள் இந்திய அரசர்களிடையே மிகுந்திருந்ததாக அவர் கூறினார்.

சுதந்திரப் போராட்டத்தின் பெரும்பகுதியில், இந்த இளவரசர்கள் உண்மையில் ஹீரோக்களாகவே காணப்பட்டனர்.  மகாத்மா காந்தி போன்ற தேசியவாதிகளுக்குப் பெருமை சேர்த்தன. இந்தியர்களால் தங்களை ஆளமுடியாது என்ற இனவெறிப் போக்கு விரும்பத்தக்கதாக இல்லை.

ஆனால் 1930 கள் மற்றும் 1940 களில் நிலைமை மாறியது. பல நிறுவனங்களில், கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் அவர்களின் சொந்த வெற்றி காரணமாக, ஜனநாயக பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகள் எழுந்தன. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்னதாக, பல மகாராஜாக்கள் வன்முறையில் இறங்கினர். இது அவர்களின் புகழைக் குறைத்தது.
அதிக நற்பெயர் பெறாதவர்களாக இந்த அரசர்கள் இன்று பார்க்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

ஆனால் வரலாறு கூறும் பாடங்கள், பல விஷயங்கள் மறைக்கப்பட்டன என்பதே. இந்திய அரசர்கள் வெறும் சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இல்லாமல், மிகச் சிறந்த அரசியல்வாதிகளாகவும் தேசியவாதிகளாகவும் இருந்துள்ளனர்.

No comments:

Post a Comment