Saturday, October 9, 2021

அவர்கள் என்னைக் கொல்ல முடிவு செய்துள்ளனர்..?

“அவர்கள் என்னைக் கொல்ல முடிவு செய்துள்ளனர்” —-சுதிஷ் மின்னி

என் 5 வயதில் பெற்றோர்களால் ஆர்எஸ்எஸ் சில் நான் சேர்க்கப்பட்டேன். இருபத்தைந்து நீண்ட ஆண்டுகள்,  ஒரு “அரக்கனைப்” போல வாழ்ந்தேன். 

என் வாழ்வின் கால் நூற்றாண்டுக்கு பிறகு என் கையில் செங்கொடியைக் கொடுத்து தோழர். ஜெயராஜனால் மனிதநேயம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இன்று என் கடந்த காலத்தை நினைக்கும் போது நான் வெட்கப்படுகி றேன், எனக்கு கொடுக்கப்பட்ட  அனைத்து மனிதாபி மானமற்ற செயல்களையும் நான் எப்படிச் செய்தேன் என்று இப்போது நினைத்தாலும் கூசுகிறது.

ஆர்.எஸ்.எஸ் வார்ப்புகள்

ஆர்எஸ்எஸ் என்பது ஒரு பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட அமைப்பாகும், இது பல நூற்றாண்டுகள் பழமையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலுகிறது

. “ப்ரோபோ சக்திமான் ஹிந்துராஷ்ட்ரங்க புதா” என்பது ஆர்எஸ் எஸ் சாகாக்கள் மற்றும் கூட்டங்களின் மூலம் ஆர்எஸ் எஸ் ஊழியர்களுக்கு வழங்குகிற சபதம். 

இதன் பொருள்: “நான் என் வாழ்க்கையை  ஹிந்துராஷ்டிரா வை உருவாக்க அர்ப்பணிப்பேன் என்பதாகும்” 

நான் ஆர்எஸ்எஸ் -இல் இருந்தபோது, ​​பல இடங்க ளுக்கு பிரச்சாரகராக சென்றிருக்கிறேன். ஒரு முறை  பம்பாய் அந்தேரி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்த போது, ​​குஜராத்தில் 2002-இல் நடந்த மதக் கலவ ரத்தின் போது முஸ்லிம்களைக் கொன்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை நான் கெளரவித்தேன்.  

குஜராத் இனப் படுகொலையின் போது நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் -ஐ சேர்ந்த 7 பேர் ஒரு வீட்டுற்கு  சென்றனர். வீட்டுக்குள் நுழைந்து கதவு தட்டி னார்கள். பிரசவத்தின் விளிம்பில் இருந்த ஒரு முஸ்லீம் பெண்ணால் கதவு திறக்கப்பட்டது. ஏழு ஆண்கள் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டனர். தண்ணீர் குடிக்கும் போது அவர்களுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.  

பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு. 

தண்ணீர் குடித்த பிறகு, கையில் இருந்த திரிசூலாயதத்தால் பெண்ணின் வயிற்றைத் கிழித்தனர். அவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து திரிசூலத்தை அகற் றியபோது, ​​திரிசூலத்தின் முனையில் குழந்தையின் கருவும் வெளியே வந்தது. 

 
பின்னர் அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் வேறு வீட்டிற்கு சென்றது. வீட்டின் முன்பக்கத்தை ஒரு முஸ்ஸிம் பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரது நான்கு குழந்தைகள் அருகில் இருந்தனர். அந்த கும்பல் பெண்ணின் முடியைப் பிடித்தது. அவர் அலற ஆரம்பித்தார். 

பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டு குழந்தைகள் பயந்து கட்டிலுக்கு பின்னால் ஒளிந்தனர். அந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து குழந் தைகளின் கழுத்தைப் பிடித்தது. சிறுவன் ஒருவன் பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாததால் கத்தவில்லை. மற்ற குழந்தைகள் அலற ஆரம்பித்தன. 

மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளை செப்டிக் டேங்கிற்குள் போட்டு மூடினார்கள்.  இந்த கொடூரமான குற்றங்களைச் செய்த அவர்க ளுக்கு இதுபோன்ற கொடூரமான செயலைச் செய்வதில் எந்த வருத்தமும் இல்லை. 

ஏனென்றால் அந்த மனி தர்கள் இத்தகைய கொடுமைகளைச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள். 

ஆர்.எஸ்.எஸ் - அதானி- சாதி

ஒருமுறை நான் ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் இருந்தபோது கவுதம் அதானி அங்கு யோகா பயிற்சி செய்வதைப் பார்த்தேன். மோடி அரசு,பொதுச் சொத்துக்களை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து நாட்டு மக்கள் குரல் கொடுக்கின்றனர். 

அரசின் திட்டங் கள், முடிவுகள் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஆர்எஸ்எஸ்ஸிலி ருந்து வரும் கட்டளை. 

ஒருமுறை நான் இமயமலை  அடிவாரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் அந்த அலுவலகத்துக்கு வந்து அலுவலகத் தலைவருடன் பேசிக் கொண்டி ருந்தார். கேரளாவைச் சேர்ந்த  எனது சக ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார், 

“அந்தப் பெண். அந்தத் தலைவரிடம் தன் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார்” என்று

. “பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பட்டியலினப் பெண்களுக்கான வழக்கத்தை இம்முறை வலியுறுத்த வேண்டாம்” என்று. 

அந்தப் பெண், அந்த ஆர்எஸ்எஸ் தலைவரிடம் இறைஞ்சுகிறார். சரி, அந்தப் பழக்கம் என்னவென்று விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 

பட்டியலின சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பெண் குழந்தை யைப் பெற்றெடுத்தால், அக்குழந்தையை ஆறு மாதங்க ளுக்கு முன் ‘தூய்மைப்’ படுத்த கங்கை நீரில் மூழ்க வைத்து வெளியே எடுக்க வேண்டும். 

அந்த பெண்மணி ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெ டுத்தார். 

கங்கையில் மூழ்க வைத்து வெளியே எடுத்த தால் குழந்தைகள் அனைவரும் இறந்தனர். எனவே இப்போது ஐந்தாவது முறையாகவாவது சடங்கைத் தவிர்க்க அனுமதிக்குமாறு கெஞ்சுகிறார். 

ஆனால் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று தலைவர் வலி யுறுத்தினார். 

காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அப்பெண்மணியை ஆற்றங்கரைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். அந்த ஆர்எஸ்எஸ் தலைவர் அவர்க ளுடன் நானும் நடந்து கொண்டிருந்தேன். 

தண்ணீர் மிக வும் குளிராக இருந்ததால் தண்ணீரில் மூழ்க வைத்து வெளியே எடுத்த போது குழந்தை இறந்தது. மூழ்க வைக்கும்  முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந் தது, சிறு கைகளைத் தட்டிச் சிரித்துக்கொண்டிருந்தது. 

அரசியலுக்கே இராமர்

ஆர்எஸ்எஸ் முகாம்களில் கலந்து கொள்ளும் போதுஎனது திராவிட வேர்கள் காரணமாக நான் பலமுறை துன்புறுத்தப்பட்டேன். துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க,  நான் ஒரு பூணூலை அணிந்தேன்.  

ஆர்எஸ்எஸ்ஸின் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் வர்ணமயமாக்கல் கொள்கைக்கு இது எடுத்துக் காட்டு. அவர்கள் ராமரை வணங்குவதாகவும், ராம ராஜ்ஜி யத்தை உருவாக்க விரும்புவதாகவும் சொல்கிறார் கள். அது உண்மையல்ல. 

இராவணன் மீது வெற்றி பெற்ற பிறகு இராமருக்கு அயோத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இராமரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அனைவரும் இராம, இராம என்று கோஷ மிட்டனர். 

குழுவில் இருந்த ஒரு முதிய சன்யாசி, இராமரை கடவுள் என்று சொல்ல வேண்டாம் என்று மக்க ளிடம் கூறினார். இராமனின் தளபதி அனுமன் மற்றும் பலர் அங்கு இருந்தனர். ஆனால் அந்த துறவிக்கு எந்தத் தீங்கும் யாரும் செய்யவில்லை. 

இராமர் சன்யாசியைக் கட்டி அணைத்து, நான் கடவுள் இல்லை என்ற உண்மையைச் சொல்லிய நீங்கள் இப்போது மகரிஷி யாக உயர்ந்து விட்டீர்கள் என்றார். அத்தகைய இராம ரின் பெயரால்தான் இவர்கள் இப்போது தேசத்தின் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். 

 
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் எத்தனை கலவரங்கள்  நடத்தப்பட்டன என்பதைப் பாருங்கள். கலவரத்தில் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பலியாகின. 

மகாபாரதக் கதை

ஆர்எஸ்எஸ் பற்றி தமிழர்கள் அனைவரும் விழிப்பு டன் இருக்க வேண்டும் என்றும், தமிழ் நாட்டில் அது காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாடும் கேரளாவும் வட மாநிலங்களைப் போல் இல்லை. வட மாநிலங்களில் சாதி அமைப்பு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. அவர்கள் அதைப் பயன்படுத்தி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாயையான எதிரிகளை உருவகப்படுத்தி மக்க ளைப் பிரிக்கிறார்கள். 

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் எதிரிகள் என்று ஆர்எஸ்எஸ் கற்பிக்கிறது. 

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. ஒரு நாள் பாம்பு ஒன்று குளத்தை நெருங்கிக் வந்து கொண்டி ருந்தது. குளத்தில் நிறைய தவளைகள்  இருந்தன. பாம்பைப் பார்த்ததும் தவளைகள் பயந்தன. இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்குவதற்கு இரவும் பகலும் குளத்தின் அருகே தங்கியிருந்து உங்கள் அனைவரை யும் பாதுகாப்பேன் என்று கூறி பாம்பு, மூத்த தவளை யை சமாதானப்படுத்தியது. 

மூத்த தவளை தூங்கிக் கொண்டிருந்த ஒரு இரவு, ஏதோ ஒன்று அதை தொட்டது. விழித்த தவளை அருகில் பாம்பை பார்த்து, ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டது. நீ எங்களை பாதுகாப்பாய் என்று சொன்னாய், பிறகு ஏன் அருகில் வந்தாய் என்றது. 

அதற்கு ஆம், நீ குளத்தைப் பார், வேறு ஏதேனும் தவளை எஞ்சியுள்ளதா எனப் பாம்பு கேட்டது. மூத்த தவளை சுற்றிப் பார்த்தது, வேறு எந்த தவளையும் குளத்தில் இல்லை. 

பாம்பு கூறியது. ஒவ்வொரு நாளும் நீ தூங்கும் போது நான் உங்களில் ஒன்றை சாப்பிட்டேன் என்று சொன்னது. இன்று  கடைசி நபர். எனவே இன்று உன் முறை. நான் உன்னைச் சாப்பிடப் போகிறேன் என்றபடி தவளையை விழுங்கியது. 

 
அது போல தான் நாக்பூரிலிருந்து பாஜக எனும் பாம்பு தமிழகம் மற்றும் கேரளாவை சுற்றிச் சுற்றி வந்து பார்க்கின்றது; இரண்டு மாநிலங்களும், சமூக நீதி கொள்கை அமைப்பைக் கொண்டுள்ளதால் இவர்களுக்கு தடை யாக உள்ளது. இந்தப் பாம்பை நாம் நாக்பூருக்கு விரட்ட வேண்டும். 

என் உயிருக்கு குறி

ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து ஒருவர்  வெளியே வந்தால் அவர்கள் அவரைப் பழிவாங்குவார்கள். இரு பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஆர்எஸ்எஸ் -சில் இருந்து விலகியதால் அவர்கள் என்னைக் கொல்ல முடிவு செய்துள்ளனர். 

என்னைக் கொல்வ தற்காக ஆயுதங்களை வாங்கினார்கள். ஆனால் நான் இதுவரை மார்க்சிஸ்டுகளால் பாதுகாக்கப்பட்டேன். 

எனக்குத் தெரியும், ஒருநாள் அல்லது மற்றொரு நாள் அவர்கள் என்னைக் கொலை செய்வார்கள்.  நான்  உண்மைகளைப் பேசுவதால் என்னை ‘அமைதிப்படுத்த’ ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. 

ஆகையால் நான் அவர்களால் கொல்லப்படுவேன். 
ஆனால் எனது கடைசிச் சொட்டு இரத்தம் உள்ள வரை நான் ஒரு கம்யூனிஸ்டாக மனிதநேயத்தை வளர்க்கப் பாடுபடுவேன் என்று பெருமையுடன் கூறுகிறேன். 

 கட்டுரையாளர்:

‘நரக மாளிகை’ நூலின் ஆசிரியர்.  

கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். 

2021 செப்டம்பர் 16 அன்று சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்வில் ஆற்றிய உரை இது.  

தமிழில்: சேரலாதன் / தீக்கதிர்

No comments:

Post a Comment