தாலிபான்களுக்கு எதிராக ஆப்கன் பெண்கள் ஓசையில்லாமல் செய்து வரும் புரட்சி!
இது தான் ஆப்கன் கலாச்சாரம், நான் ஆப்கனின் பாரம்பரிய உடையை உடுத்தியிருக்கிறேன் என #AfghanistanCulture என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாலிபான்களுக்கு எதிராக சத்தமில்லாமல் ஒரு புரட்சியை செய்து வருகிறார்கள் அந்நாட்டு பெண்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றி புதிய ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள் தாலிபான் போராளிகள். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான போக்கை கொண்டிருப்பவர்கள் என அறியப்படுகிறார்கள். புதிய ஆட்சியை நிறுவினாலும் கூட பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் அளிக்கவில்லை. மேலும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பெண்களுக்கான உரிமைகளை தாலிபான்கள் மறுத்துள்ளனர்.
பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு, குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் பெண்களுக்கு அனுமதி, அவ்வாறு அனுமதிக்கப்படும் பெண்களும் திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து அமரவைக்கப்பட்டிருப்பது, முகம் முதல் கால் வரை ஹிஜாப் எனப்படும் கருப்பு ஆடைகளால் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கண்டிப்பான விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
தாலிபான்களின் இச்செயல் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், காபுலில் உள்ள ஷாகித் ரப்பானி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி தாலிபான்களுக்கு ஆதரவான கூட்டம் ஒன்று நடந்தது. இதில் தாலிபான்களுக்கு ஆதரவான கோஷங்களை உள்ளடக்கிய பதாகைகளுடன் பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாகவும் சென்றனர்.
இந்த கூட்டத்திலும், பேரணியிலும் கலந்து கொண்ட பெண்கள் உச்சி முதல் பாதம் வரையில் உடலை முழுமையாக ஹிஜாப் எனும் கருப்பு ஆடையால் மூடிக்கொண்டனர்.
தாலிபான்களின் வற்புறுத்தலால் பெண்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இச்செயலுக்கு, ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தாலிபான்கள் தங்களை அனுமதிக்காத நிலையில் ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தையே தாலிபான்கள் மாற்றியமைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று, ஆப்கானிஸ்தானில் பிறந்து வாஷிங்டனில் வசித்து வரும் பெண் வரலாற்று ஆய்வாளரான பஹார் ஜலாலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆப்கானிஸ்தானின் கலாச்சார உடையை அணிந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், இது தான் ஆப்கன் கலாச்சாரம், நான் ஆப்கனின் பாரம்பரிய உடையை உடுத்தியிருக்கிறேன் என #AfghanistanCulture என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டிருந்தார்.
ஜலாலி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வெகு விரைவாகவே அனைவரின் கவனத்தை ஈர்த்தது, ஜலாலியை பின் தொடர்ந்து ஆப்கன் பெண்கள் பலரும், ஆப்கன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான வண்ன ஆடைகளை உடுத்தி அந்த புகைப்படங்களை தத்தமது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஜலாலி தொடங்கி வைத்த #DoNotTouchMyClothes, #AfghanistanCulture போன்ற ஹேஷ்டேகுகள் தற்போது பெரும் இயக்கமாக மாறியுள்ளது.
இதன் மூலம் தாலிபான்களுக்கு எதிராக சத்தமில்லாத புரட்சி ஒன்று வெடித்துள்ளது.
AFP செய்தி நிறுவனத்துக்கு ஜலாலி அளித்த பேட்டியில், ஆப்கன் பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. முடியை வெளிப்படுத்தும் தளர்வான சிஃப்பான் தலைக்கவசத்தை நாங்கள் அணிகிறோம். ஆப்கானிஸ்தானின் வரலாறு, கலாச்சாரம் பற்றி நன்கு அறிந்த எவரும், தாலிபான் ஆதரவு பேரணியில் பங்கேற்ற அந்த பெண்கள் அணிந்த ஆடைகளை ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்ததில்லை என்பது தெரியும்.
ஆப்கன் பெண்கள் அதுபோன்று உடைகளை உடுத்துவதில்லை. நாங்கள் உலகுக்கு காட்டியது போன்று வண்ணமயமான ஆடைகளை தான் உடுத்துவார்கள் என ஜலாலி தெரிவித்தார்.
No comments:
Post a Comment