பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் - எச்சரித்த ஆப்பிள் நிறுவனம்
வீட்டிலேயே அடிமையாக இருப்பவர்களை விற்பனை செய்ய ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உட்பட பல தளங்கள் பயன்படுத்தப்படுவதை, கடந்த 2019 - ஆம் ஆண்டு பிபிசி நிறுவனம் கண்டுபிடித்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப் ஸ்டோர் தளத்திலிருந்து ஃபேஸ்புக் மற்றும் அதன் சேவைகளை நீக்கப் போவதாக எச்சரித்தது.
இப்படி ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததை தொடர்ந்து, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஃபேஸ்புக் ஃபைல்ஸ் என்கிற தலைப்பில் வெளியிட்டது. அதில்.. ஃபேஸ்புக் நிறுவனம் மிகத் தெளிவாகவும், வலுவாகவும் மனிதர்கள் சுரண்டப்படுவதை தடை செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஃபேஸ்புக் தன் தளங்களில் மனிதர்கள் கடத்தப்படுவதை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும் கூறியுள்ளது.
"எங்கள் தளத்தில் இருந்து கொண்டு, மற்றவர்களை சுரண்ட விரும்புபவர்களை தடுப்பது எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது" என்றும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
வீட்டு வேலை செய்பவர்களை சட்டவிரோதமாக இணையத்தில் வாங்குவதும் விற்பதுமாக நடைபெறும் கருப்பு சந்தை வளர்ந்து வருவது குறித்து பிபிசி அரபு செய்திப் பிரிவு தன் விசாரணையில் வெளிக் கொண்டு வந்தது.
பெண்கள் அடிமையைப் போல் வாழ்வது, திரைக்கு பின்னாலேயே வைக்கப்படுவது, அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது, அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாத சூழல், அதிகம் விலை கோருபவருக்கு விற்கப்படுவது போன்ற விஷயங்கள் மீது இவ்விசாரணை நடத்தப்பட்டது.
இப்படி பெண்களை விற்பது ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உட்பட பல செயலிகளைப் பயன்படுத்தி நடந்துள்ளது.
இந்த சட்டவிரோத வணிகம் தொடர்பான ஹேஷ்டேகுகள் பெரும்பாலும் அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஹேஷ்டேகுகள் செளதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் பயன்படுத்தப்பட்டன.
பெரும்பாலும் பெண்கள் வகை வகையாக பிரிக்கப்பட்டு, சில ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுவார்கள். பிபிசியின் விசாரணைக்குப் பிறகு, மனித கடத்தல்களை எதிர்கொள்ள அது தொடர்பாக இன்னும் வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்பிள் நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்திடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
அதன் பிறகும் ஃபேஸ்புக் வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மனித கடத்தல் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால், தன் ஆப் ஸ்டோரிலிருந்து ஃபேஸ்புக் சேவைகளை நீக்குவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததாக கூறியுள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
பிபிசி விசாரணைக்கு முன்பே, 2019ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் உள்விவகார அறிக்கை ஒன்றில், பெண்களை அடிமையாக விற்பது தங்களுக்கு தெரியும் என்றும், அது தொடர்பாக விசாரணை நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். அந்த உள் விவகார அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது வால் ஸ்ட்ரீக் ஜர்னல். அந்த அறிக்கையில், "ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெண்கள் அடிமையாக விற்கப்படுவது பிபிசி விசாரணை மற்றும் ஆப்பிள் பிரச்சனைக்கு முன்பே தெரியுமா?
"ஆம், பெண்கள் எப்படி வீட்டு அடிமைகளாக விற்கப்படுகிறார்கள், இந்த சட்டவிரோத நடவடிக்கை எப்படி ஃபேஸ்புக் தளத்துக்குள் வந்தது, எப்படி ஆட்களை தேர்வு செய்கிறார்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் செய்து கொடுக்கப்படுகிறது, அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என 2018ஆம் ஆண்டு முழுவதும் மற்றும் 2019ஆம் ஆண்டில் முற்பகுதி வரை, நாங்கள் உலகம் முழுக்க ஒரு விழிப்புணர்வு செயல்பாட்டை நடத்தினோம்."
2019ஆம் ஆண்டு பிபிசியின் செய்தி வெளியீட்டுக்குப் பிறகு, ஃபேஸ்புக் பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளை தடை செய்தது, இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டன.
"எங்கள் தளங்களில் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க சட்ட அமலாக்கம், நிபுணர் குழுக்கள் மற்றும் தொழில்துறையினருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என விசாரணைக்கு பதிலளித்தது.
பிபிசி இது தொடர்பான செய்தியை வெளியிட்ட பிறகும், அத்தளத்தில் பெண்கள் விற்பனை தொடர்பான விளம்பரங்கள் இருந்ததை பிபிசி கண்டுபிடித்தது.
பிபிசி இந்த விவரங்களை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் கூறி எச்சரித்தது, ஏனெனில் பெண்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட பயன்பாடுகள் மற்றும் சேவைகள் அவர்களின் ஸ்மார்ட்போன் ஆப் ஸ்டோர்கள் மூலம் கிடைக்கின்றன.
சட்டவிரோத விற்பனை என்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் செயலி மேம்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களுக்கான விதிமுறைகளை மீறுவதாகும் - இரு நிறுவனங்களுமே சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மேம்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறின. "இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் கவலைக்குரியவை" என்றது கூகுள். செயலி மேம்பாட்டாளர்கள் அதை தடுக்க உடனடி நடிவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்ததாகக் கூறியது ஆப்பிள்.
2019ஆம் ஆண்டில் பிபிசி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டிய பிறகு ஃபேஸ்புக் தன் நடவடிக்கையை வேகப்படுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது. மனிதர்களைக் கடத்துவது தொடர்பான தேடுவதல் வேட்டை நடத்தியபோது சுமார் 3,00,000 விதிமீறல்கள் அல்லது விதிமீறல் நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் சிக்கியதாகவும், 1,000 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறுகிறது அப்பத்திரிகை.
பிபிசியின் அறிக்கை, இது தொடர்பாக ஐநா சபையில் கேள்வி எழுப்ப வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. "பிபிசியின் செய்தியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு விசாரணையை நடத்தியது. அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் தளம் ஒரு பெரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் 700 இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டன, பல விதிமீறல் ஹேஷ்டேகுகள் நீக்கப்பட்டன" என்று கடந்த ஜூன் 2020-ல் தாம் வெளியிட்ட விவரங்களில் ஃபேஸ்புக் எழுதி இருந்தது. அதற்கு அடுத்த மாதம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில், பெண்களை அடிமைகளாக நடத்துவது தொடர்பாக அரபு மொழியில் பேசப்பட்டிருந்த 1.3 லட்சம் ஆடியோ பதிவுகளை நீக்கிவிட்டதாக கூறியது ஃபேஸ்புக்.
அடிமைத்தனம் தொடர்பான பதிவுகளை முன்கூட்டியே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளதாக ஃபேஸ்புக் கூறியது. இது "அரபு மற்றும் ஆங்கிலத்தில் ஜனவரி 2020 முதல் இன்றுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்க" உதவியது எனவும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment