கந்தர்வகோட்டை அருகே விவசாயின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 95 ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திங்கள்கிழமை
கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் விவசாயி ராஜேந்திரன் (45). இவர் திங்கள்கிழமை அன்று தனது கைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த அவரது மைத்துனர் மகன் மனோஜ் (13) வீட்டில் இருந்தபோது ராஜேந்திரன் கைப்பேசிக்கு பேசிய மர்ம நபர்கள், நாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி கைபேசிக்கு வந்துள்ள ஓடிபி நம்பரை கேட்டுள்ளனர்.
விவரம் அறியாத சிறுவன் ஓடிபி நம்பரை கூறியுள்ளார். இதேபோல் ராஜேந்திரன் கைபேசி நம்பருக்கு 15 முறை பேசிய மர்ம நபர்கள் சிறுவன் மூலமாக ஓடிபி நம்பரைப் பெற்று ராஜேந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சத்து 94 ஆயிரத்து 95 ரூபாய் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த ராஜேந்திரனிடம் சிறுவன் மனோஜ், வங்கியிலிருந்து பேசியதாக கூறியுள்ளார். இதுபற்றி வங்கியில் விசாரித்தபோது தாங்கள் பேசவில்லை என்று கூறியுள்ளனர்.
எனவே, ராஜேந்திரன் இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment