சமூகத்தில் சாதிப் பிரச்னையில்லை, சாதி வன் கொடுமையை எதிர்க்கும் அரசியல்தான் பிரச்னை என்ற ‘தப்பான ஆட்டமே’ இந்தத் தாண்டவம்.
காவல்துறை அதிகாரி ருத்ர பிரபாகரன், போதைப்பொருள் விற்பனை குறித்து இரு சிறுவர்களை விசாரிக்கையில் ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதன் காரணமாக ருத்ர பிரபாகரன் சிறை செல்கிறார். இதற்குக் காரணம் வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மதமாற்றமும்தான் என்று அரைவேக்காட்டுக் காட்சிகளால் பிரசங்கம் செய்யும் அபத்தமே படத்தின் கதை.
ருத்ர பிரபாகரனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் தேவைக்கும் குறைவாகவே நடிப்பைக் கொடுக்க, அவருக்கும் சேர்த்து நடிப்பை மிகையாக அள்ளிக் கொட்டுகிறார் ஹீரோயின் தர்ஷா. செயற்கையான உடல்மொழியுடன் பாத்திரப்படைப்பு குறித்த தெளிவின்மையும் சேர்ந்துகொள்ள கௌதம் மேனன் பார்வையாளர்களை ரொம்பவே சோதிக்கிறார்.
அதற்கேற்றாற்போல் சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக சில செயற்கையான பாத்திரங்களை உருவாக்கி, தன் வன்மத்தையே வசனங்களாகப் பேசவைப்பது கலைநேர்மையற்ற செயல். அதிலும் சே குவேரா முதல் செங்கொடி வரை புகைப்படங்கள் மாட்டிய ஒரு கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்துபவர், அரசு வழக்கறிஞரையே நியமிக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவர் என்று சித்திரிப்பது, சாதிச்சான்றிதழையெல்லாம் சாட்சியமாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது போன்ற காட்சிகள் எதார்த்தத்தை மீறிய இயக்குநரின் கற்பனைகளே.
ருத்ர பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை, வழக்கில் துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல் இருப்பதும் நீதிமன்றக்காட்சிகளும் அபத்தத்தின் உச்சம். கலைநேர்த்தியையும் சமூகப்புரிதலையும் காலில் போட்டு மிதித்து வக்கிர தாண்டவமாடியிருக்கிறது படம்.
நன்றி : ஆனந்த விகடன்
No comments:
Post a Comment