Saturday, October 2, 2021

விக்ராந்த் போர்க் கப்பலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் - மிரட்டிய ஆப்கான் இளைஞன்

இந்தியாவின் கம்பீரம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் `ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம்தாங்கி போர்க்கப்பல், கேரள மாநிலம் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் முழுவீச்சில் தயாராகிவருகிறது. விரைவில் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்படவிருக்கும் அந்தப் போர்க்கப்பலை மையம்கொண்டு எழுந்துள்ள சில சர்ச்சைகளின் பின்னணியில் அந்நிய நாட்டுச் சதி இருக்கிறதோ என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது என்.ஐ.ஏ. அதிலும், சமீபத்தில் தனது அடையாளத்தை மறைத்து இங்கே பணிபுரிந்த ஆப்கன் இளைஞரின் பாகிஸ்தான் தொடர்புகள், அவருடன் வந்த மற்றோர் இளைஞர் தலைமறைவு இவையெல்லாம் அந்தச் சந்தேகத்தை வலுப்பெறச் செய்துள்ளன.

ஈத் குல்

பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை, `ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்று பெயரிட்டு 1961-ல் கடற்படையில் சேர்த்தது இந்தியா. இதுதான் இந்தியாவின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பல். 1971 பாகிஸ்தான் யுத்தத்தில் முக்கியப் பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த், 1997-ல் ஓய்வுபெற்றது. அந்த ஐஎன்எஸ் விக்ராந்த் பெயரிலேயே 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்ட புதிய விமானம்தாங்கி போர்க்கப்பலை இந்தியா தயாரித்துவருகிறது. 

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பலும் இதுதான். ஐஎன்எஸ் விக்ராந்த், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக்கடலில் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. அடுத்தகட்டமாக கப்பலின் ஓடுதளத்தில் போர் விமானங்களை இறக்கிப் பறக்கவிடும் சோதனைக்குத் தயாராகி வருகிறது இந்தக் கப்பல்.

ஒரே சமயத்தில் 30 போர் விமானங்களைக் கையாளும்விதமாக, இரண்டு ரன்வேக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 28 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பலில், விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதி, விமானத்தின் பழுது சீரமைக்கும் பகுதி, மின் உற்பத்தி நிலையம் ஆகிய வசதிகள் உள்ளன. 

கடந்த 2009-ம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தப் போர்க்கப்பலின் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்ற பிறகு, 2013-ம் ஆண்டு கடலில் இறக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட மெருகூட்டும் பணிகள் நடந்துவருகின்றன. வரும் 2022 சுதந்திர தின விழாவின்போது இந்தக் கப்பல் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தநிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் கப்பலைச் சுற்றி சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன.

அந்தச் சம்பவங்களை நம்மிடம் வரிசையாக விவரித்தார்கள் போலீஸ் உயரதிகாரிகள் சிலர்... “2019-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பத்து ஹார்டு டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்சஸ் மெமரி, ப்ராசஸர் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோயின. அந்த ஹார்ட் டிஸ்க்குகளில் கப்பலின் வரைபடம், ஆயுதங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட ரகசிய விவரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அடுத்ததாக, இந்தக் கப்பல் கட்டப்பட்டுவரும் கொச்சி ஷிப் யார்டில் போலி அடையாள அட்டை கொடுத்து வேலைசெய்த ஆப்கனைச் சேர்ந்த ஈத் குல் என்ற 22 வயது இளைஞர், கடந்த ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார். மூன்றாவது சம்பவமாக, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ‘ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை வெடிகுண்டுவைத்து தகர்ப்போம்’ என்று ஐந்து அதிகாரிகளுக்கு இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இது பற்றி எர்ணாகுளம் சவுத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. மேற்கண்ட விவகாரம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நடத்திவரும் விசாரணையில் தற்போது பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன” என்றவர்கள் அது பற்றியும் விவரித்தார்கள்.

“கைதுசெய்யப்பட்ட ஈத் குல்லின் தந்தை ஆப்கனைச் சேர்ந்தவர். தாய் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஆப்கனிலிருந்து ஈத் குல்லுடன் முஜாஹித் அகமது என்பவரும் டெல்லிக்கு வந்திருக்கிறார். நோயாளியான முஜாஹித் அகமதுக்கு சிகிச்சையின்போது உதவியாளராக இருப்பதாகக் கூறியே ஈத் குல் விசா பெற்றிருக்கிறார். ஆனால், விசா காலம் முடிந்த பிறகு, அப்பாஸ் கான் என்று தனது பெயரை மாற்றி, அஸ்ஸாம் முகவரியில் போலி அடையாள அட்டை தயாரித்து, 2018-ம் ஆண்டு முதல் கொச்சி ஷிப் யார்டில் வேலைசெய்திருக்கிறார். இவர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் சக தொழிலாளிகள் இடையே கசியவே, அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பலத்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் அவரை கொல்கத்தாவில் வைத்து கைதுசெய்தனர். ஈத் குல்லுடன் டெல்லிக்கு வந்த முஜாஹித் அகமது அப்போதே தலைமறைவாகிவிட்டார். 

ஈத் குல் பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்திருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் அந்நிய நாட்டுச் சதி இருக்கிறதா என்று என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. மேலும், கப்பல் பயன்பாட்டுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டதால் இந்த விவகாரத்தை சீரியஸாகக் கையாண்டுவருகிறது என்.ஐ.ஏ. அதையொட்டி சமீபத்தில் கப்பலின் ஒவ்வோர் அங்குலமும் பாம் ஸ்குவாட், டாக் ஸ்குவாட் மூலம் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பும் பல மடங்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்!

நாட்டின் கம்பீரம் காக்கப்படவேண்டியது அவசியம்!

No comments:

Post a Comment